கோவை உட்பட 6 இடங்களில் என்.ஐ.ஏ. அதிகாரிகள் மீண்டும் சோதனை
கோவை: கோவை உட்பட தமிழகத்தில் 6 இடங்களில் தேசிய புலனாய்வு ஏஜென்சி அதிகாரிகள் (என்.ஐ.ஏ) இன்று காலை முதல் சோதனை நடத்தி வருகின்றனர்.
இலங்கையில் ஈஸ்டர் தினத்தன்று நடத்தப்பட்ட பயங்கரவாத தாக்குதல்களில் தொடர்பிருப்பதாக கைது செய்யப்பட்ட முகமது அசாருதீன், சேக் ஹிதயதுல்லா ஆகியோரை தேசிய புலனாய்வு ஏஜென்சி அதிகாரிகள் 4 நாட்கள் காவலில் எடுத்து விசாரித்து வருகின்றனர். இதற்காக என்.ஐ.ஏ.நீதிமன்றத்தில் மனுத் தாக்கல் செய்யப்பட்டது.
இதையடுத்து இருவரும் நேற்று முதல் விசாரிக்கப்பட்டு வருகின்றனர். இவர்கள் கொடுத்த தகவலின் அடிப்படையில் கோவையில் 2 இடங்கள், இளையான்குடி, திருச்சி, காயல்பட்டினம் மற்றும் நாகப்பட்டினம் ஆகிய இடங்களில் என்.ஐ.ஏ. அதிகாரிகள் இன்று காலை முதல் சோதனை நடத்தி வருகின்றனர்.
பூபேஷ் ஜி! இதோ உங்கள் செப்பல்.. சங்கு சுட்டாலும் வெண்மை தரும்.. மறக்க முடியாத இந்திரா

மொபைல்கள், கணிணிகள் பறிமுதல்
இச்சோதனையில் மொபைல் போன்கள், கணிணிகள் உள்ளிட்டவற்றை கைப்பற்றி ஆய்வு செய்து வருகின்றனர் அதிகாரிகள். இவற்றை ஆய்வு செய்வதற்காக கணிணி வல்லுநர்கள் இருவரையும் என்.ஐ.ஏ. அதிகாரிகள் அழைத்து வந்தனர்.

தீவிர விசாரணை
சர்வதேச தீவிரவாத அமைப்பான ஐ.எஸ்.ஐ.எஸ். இயக்கத்துடன் தொடர்புடையவர்கள் என சந்தேகிக்கப்படும் முகமது அசாருதீன், சேக் ஹிதயதுல்லா இருவருக்கும் வேறு யாருடன் தொடர்பு இருந்தது? என்பது குறித்தும் என்.ஐ.ஏ. அதிகாரிகள் விசாரணை நடத்தி வருகின்றனர். இதனால் அப்பகுதிகளில் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

ஈஸ்டர் தாக்குதலை தொடர்ந்து சோதனை
இலங்கையில் ஏப்ரல் மாதம் ஈஸ்டர் தினத்தன்று தேவாலயங்களில் மனித வெடிகுண்டுகள் மூலம் ஐ.எஸ்.ஐ.எஸ் இயக்கத்தினர் தாக்குதல்களை நடத்தினர். 253 பேரை பலி கொண்ட இக்கொடூர தாக்குதலில் ஈடுபட்டவர்களுடன் தொடர்பு இருப்பதாக மே மாதம் முதல் அடுத்தடுத்து தமிழகத்தில் பல இடங்களில் என்.ஐ.ஏ. அதிகாரிகள் சோதனை நடத்தி வருகின்றனர்.

கோவையில் பல முறை ரெய்டு
கோவையில்தான் அதிக முறை என்.ஐ.ஏ. அதிகாரிகள் சோதனை நடத்தி உள்ளனர். கோவையை தொடர்ந்து மதுரை வில்லாபுரம் சதகத்துல்லா என்பவருக்கு சொந்தமான இடத்தில் என்.ஐ.ஏ. அதிகாரிகள் சோதனை நடத்தினர்.

சென்னையில் சிக்கிய தீவிரவாதிகள்
இதனைத் தொடர்ந்து ஜூலை மாதம் கோவை, நாகை, சென்னை உள்ளிட்ட இடங்களில் மீண்டும் என்.ஐ.ஏ. அதிகாரிகள் சோதனை மேற்கொண்டனர். இச்சோதனைகளின் போது சென்னை மண்ணடியில் செயல்பட்டு வந்த வஹாத்-இ-இஸ்லாமி ஹிந்த் என்ற தீவிரவாத அமைப்பின் நிர்வாகிகள் கூண்டோடு பிடிபட்டனர்.

நாகையில் பல இடங்களில் சோதனை
இக்கைது சம்பவத்தை தொடர்ந்து என்.ஐ.ஏ. அதிகாரிகள் நாகையை மையமாக வைத்து பல இடங்களில் சோதனை நடத்தினர். அதில் மொபைல் போன்கள், கம்ப்யூட்டர்கள், துண்டு பிரசுரங்களை என்.ஐ.ஏ. அதிகாரிகள் பறிமுதல் செய்தனர்.

ஜூலையில் ரெய்டு
பின்னர் ஜூலை மாதம் என்.ஐ.ஏ. அதிகாரிகள் அதிரடியாக மதுரை, தேனி, நெல்லை மேலப்பாளையம் உட்பட 14 இடங்களில் சோதனை நடத்தினர். தமிழகத்தில் ஐ.எஸ். தீவிரவாதிகளுடன் தொடர்புடையவர்கள் என கைது செய்யப்பட்டவர்கள் அவர்களது வீடுகள், நண்பர்கள் வீடுகளுக்கு அழைத்துச் செல்லப்பட்டு இச்சோதனைகள் மேற்கொள்ளப்பட்டன.

ஆகஸ்ட் மாதம் சோதனை
கோவை உக்கடம், கரும்புக்கடை, பிலால்நகர் உள்ளிட்ட 5 இடங்களில் மீண்டும் என்.ஐ.ஏ. அதிகாரிகள் ஆகஸ்ட் மாதம் சோதனை மேற்கொண்டனர். உமர் பாரூக், சனாபர் அலி, சமீனா முபின், முகமது யாசீர் , சதாம் உசேன் ஆகியோரது வீடுகளில் அப்போது இச்சோதனை நடைபெற்றது.

நெல்லையில் சோதனை
மீண்டும் நெல்லை மாவட்டம் வெள்ளாங்குளி திவான் முஜிபரை இலக்கு வைத்து என்.ஐ.ஏ. அதிகாரிகல் சோதனை நடத்தினர்.. வளைகுடா நாட்டில் பணியாற்றி ய போது தீவிரவாத இயக்கங்களுடன் தொடர்பில் இருந்தவர் என்ற சந்தேகத்தின் அடிப்படையில் சோதனை நடத்தப்பட்டது. தற்போது கோவை உட்பட 6 இடங்களில் மீண்டும் என்.ஐ.ஏ. அதிகாரிகள் சோதனை நடத்தி வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.