அதிகாரிகள் போல் நடித்து 20 லட்சத்தை அபேஸ் செய்த கில்லாடிகள்.. தானா சேந்த கூட்டத்தை தேடும் போலீசார்
கோவை: கோவை அருகே சூர்யா நடித்த தானா சேர்ந்த கூட்டம் படத்தில் வருவதைப் போல வருமான வரித்துறை அதிகாரிகள் போல் நடித்து லாரி உரிமையாளர் வீட்டில் 20 லட்சத்தை கொள்ளையடித்துச் சென்ற டிப்டாப் ஆசாமிகள் காவல்துறையினர் தேடி வருகின்றனர்.
வருமானத்திற்கு அதிகமாக சொத்து சேர்ப்பது வரு மானத்தை மறைப்பது போன்ற குற்றங்களில் ஈடுபடும் நபர்கள் அல்லது வரும் புகார்கள் குறித்து வருமான வரித்துறை அதிகாரிகள் சோதனை நடத்துவது வழக்கம்.
அவ்வாறு சோதனை நடத்த வரும் போது உரிய ஆவணங்கள் மற்றும் உள்ளூர் காவல் நிலையத்திற்கு தகவல் அளிக்க வேண்டும் என்பது உள்ளிட்ட பல விதிமுறைகள் உள்ளன.

கோவையில் அதிர்ச்சி
இந்த நிலையில் தானாசேர்ந்தகூட்டம் திரைப்படத்தில் வருவது போல லாரி உரிமையாளர் வீட்டில் வருமான வரித்துறை அதிகாரி போல் நடித்து சோதனை நடத்துவதாக கூறி லட்சம் ரூபாய் பணம் செக்புக் மற்றும் ஆவணங்களை எடுத்துச் சென்ற மர்ம நபர்கள் குறித்து காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்

வருமான வரித்துறை சோதனை
கோவை மாவட்டம் கிணத்துக்கடவு அருகே வடபுதூர் கோவை-பொள்ளாச்சி மெயின் ரோட்டில் பரோடா வங்கி அருகே வசித்து வருபவர் பஞ்சலிங்கம். லாரி உரிமையாளரான இவர் இன்று மதியம் ஒரு மணியளவில் வீட்டில் இருந்த போது இன்னோவா காரில் வந்த ஐந்து டிப்டாப் ஆசாமிகள் நாங்கள் வருமான வரித்துறையிலிருந்து வருகிறோம் உங்கள் வீட்டை சோதனை செய்ய வேண்டும் என கூறியுள்ளனர்.

ரூ.20 லட்சம் கொள்ளை
உண்மையான அதிகாரிகளையே மிஞ்சும் அளவுக்கு ஆக்சன் செய்த அவர்கள் வீட்டில் இருந்தவர்களின் செல்போன்களை வாங்கி வைத்துக்கொண்டு வீட்டை தாளிட்டுவிட்டு சோதனை செய்வது போல் நடித்துள்ளனர். பின்னர் வீட்டிலிருந்த பீரோவில் வைத்திருந்த 20 லட்சம் ரொக்கம் பணம் பரோடா வங்கி கணக்கு புத்தகம், செக் புக் ஆகியவற்றை எடுத்துக்கொண்டதுடன் சிசிடிவி கேமரா காட்சிகள் பதிவான ஹார்ட் டிஸ்க்யையும் எடுத்துச்சென்றனர்.

போலீசில் புகார்
பின்னர் வந்தவர்கள் டிப்டாப் ஆடையில் இருந்த டுபாக்கூர் ஆசாமிகள் என்று தெரிந்த பஞ்சலிங்கம் இதுகுறித்து கிணத்துக்கடவு காவல் நிலையத்திற்கு தகவல் தெரிவித்தார். அங்கு வந்த போலீஸ் இன்ஸ்பெக்டர் செந்தில்குமார் வீட்டை ஆய்வு செய்தார். கொள்ளையர்களை பிடிக்க மாவட்ட எஸ்.பி செல்வ நாகரத்தினம் உத்தரவின் பேரில் காவல் ஆய்வாளர் செந்தில்குமார் தலைமையில் தனிப்படை அமைத்து கோவை-பொள்ளாச்சி மெயின் ரோட்டில் வைத்துள்ள சிசிடிவி காட்சிகளை வைத்து தேடி வருகின்றனர்.