அப்படியா... ரஜினி ரசிகர் மன்றத்தில் இணைகிறதா காந்திய மக்கள் இயக்கம்..??
கோவை: கோவை கவுண்டம்பாளையம் பகுதியில் தமிழருவிமணியன் தலைமையில் நடந்த காந்தியமக்கள் இயக்கத்தின் ஆலோசனை கூட்டத்தில் ரஜினி மக்கள் மன்றத்தில், காந்திய மக்கள் இயக்கத்தை இணைக்க தீர்மானம் நிறைவேற்றி உள்ளனர்.

ரஜினிகாந்த் அரசியல் கட்சி தொடங்க உள்ளதாக அறிவித்து பின்னர் வாராமல் போனார். அதற்காக மன்னிப்பு கேட்டுக்கொண்டார். உடல் நிலையை காரணம் காட்டி இந்த முடிவை ரஜினி அறிவித்தார்.
ரஜினிகாந்த் அரசியலுக்கு வரமாட்டேன். கட்சி தொடங்க மாட்டேன் என்று அறிவித்தால் விரக்தி அடைந்த காந்திய மக்கள் இயக்க தலைவர் தமிழருவி மணியன் அரசியலில் இருந்து நிரந்தரமாக விடைபெறுவதாக கூறினார்.

கோவையில் கூட்டம்
இந்த சூழலில் ரஜினிகாந்த் ரசிகர்கள் பலர் இன்று சென்னை வள்ளுவர் கோட்டத்தில் ரஜினியை அரசியலுக்கு வர வலியுறுத்தி ஆர்ப்பாட்டம் நடத்தினர். இந்த பக்கம் இப்படி ஒரு போராட்டம் நடந்து கொண்டிருக்க மறுபக்கம் கோவை கவுண்டம்பாளையம் காந்திய மக்கள் இயக்கத்தின் மாநில அளவிலான கூட்டம் இன்று நடந்தது,.

அரசியலுக்கு வருகிறார்
இதில் அந்த இயக்கத்தின் தலைவர் தமிழருவி மணியன் கலந்து கொண்டார். இதில் கலந்து கொண்ட 37 மாவட்டங்களில் இருந்து வந்திருந்த நிர்வாகிகள் கேட்டு கொண்டதால் மீண்டும் அரசியலில் தொடர்வதாக தெரிவித்துள்ளார்.

ரஜினி ரசிகர் மன்றம்
இந்த ஆலோசனை கூட்டத்தில் ரஜினி மக்கள் மன்றத்தில் , காந்திய மக்கள் இயக்கத்தை இணைக்க தீர்மானம் நிறைவேற்றி உள்ளனர். இதன் மூலம் காந்திய மக்கள் இயக்கம் ரஜினி மக்கள் மன்றத்தில் இணைகிறது. ரஜினி அரசியலுக்கு வரப்போவது இல்லை என்று அறிவித்த பின்னரும் இப்படியான நிகழ்வுகள் நடப்பது ஆச்சர்யத்தை ஏற்படுத்தி உள்ளது.

எந்த கட்சிக்கு ஆதரவு
ரஜினி ரசிகர்களின் கோரிக்கையை ஏற்று அரசியலுக்கு வர வாய்ப்பு உள்ளதா அல்லது ஏதேனும் ஒரு கட்சிக்கு ஆதரவு அளிப்பாரா அது எந்த கட்சி என்பது போன்ற யூகங்கள் எழுகின்றன. ரஜினியின் நிலைப்பாடு மீண்டும் மாறினால் சட்டசபை தேர்தல் இந்த முறை வித்தியாசமான களமாக இருக்க வாய்ப்பு உள்ளது.