'எல்லாத்தையுமே அரசியலாக்குனா எப்படீங்க'.. கட்சிகளுக்கு இது தெரிய வேண்டாமா?.. அண்ணாமலை கேள்வி
கோவை: மக்களின் மீது நம்பிக்கை இல்லாததால் தமிழக அரசு ஊரடங்கு போட்டுள்ளது என்று தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை தெரிவித்தார். கோவையில் நிருபர்களுக்கு பேட்டியளித்த அவர் பல்வேறு விஷயங்கள் குறித்து பேசினார்.
தமிழகத்தை காட்டிலும் சில மாநிலங்களில் கொரோனா தொற்று அதிகமாக இருக்கும் போது அம்மாநில அரசு கட்டுபாடுகளை விதித்து ஆலயங்களை திறக்க அனுமதி வழங்கியுள்ளது. ஆனால் தமிழகத்தில் முக்கிய திருவிழாவான தைப்பூச தினமன்று கோவில்கள் மூடப்பட்டிருக்கிறது என்று அண்ணாமலை குற்றம்சாட்டினார்.
ஒரே தொகுதிக்கு குறி வைக்கும் தம்பதி.. குழம்பி திணறும் பாஜக.. சரோஜினி நகர் யாருக்கு.. உ.பி பரபரப்பு

மக்களின் மீது நம்பிக்கை இல்லை
மக்களின் மீது நம்பிக்கை இல்லாமல் இந்த அரசு ஊரடங்கு போடப்பட்டுள்ளது. எனவே கட்டுபாடுகளுடன் வெள்ளி, சனி, ஞாயிற்றுக்கிழமை களிலும் கோவிலை திறக்க வேண்டும் என்றும் அவர் கோரிக்கை விடுத்தார். பொங்கல் பரிசு பொருட்கள் குறித்து பேசிய அண்ணாமலை தமிழக அரசு வழங்கிய பொங்கல் பரிசில் சில இடங்களில் தரமற்ற பொருட்கள் இருந்ததாக புகார்கள் எழுந்தும் தெரிந்தே அது விநியோகம் செய்யப்பட்டுள்ளது. இதற்குக் காரணமான அமைச்சர்கள் மீதும், அதிகாரிகள் மீதும் எப்போது முதல்வர் ஸ்டாலின் நடவடிக்கை எடுப்பார்? என்றும் கேள்வி எழுப்பினார். அமைச்சர்கள் மீது நடவடிக்கை எடுக்கவில்லை என்றால் அது கேளி கூத்தாகிவிடுமெனவும் தெரிவித்தார்.

எல்லாத்தையும் அரசியலாக்க கூடாது
ஐ.ஏ.எஸ், ஐ.பி.எஸ் அதிகாரிகளை நேரடியாக மத்திய அரசு எடுத்து கொள்ளும் சட்ட திருத்தம் குறித்து நிருபர்கள் அவரிடம் கேள்வி எழுப்பினார்கள். இதற்கு பதில் அளித்த அண்ணாமலை வழக்கமாக மாநில அரசு ஐ.ஏ.எஸ், ஐ.பி.எஸ் அதிகாரிகள் மத்திய அரசிற்கு செல்ல அனுமதி வழங்காததால் மத்திய அரசு தாமாகவே இதனை செய்ய முடிவெடுத்துள்ளது. எல்லாத்தையுமே அரசியலாக்க கூடாது. ஐ.ஏ.எஸ், ஐ.பி.எஸ் அதிகாரிகள் மத்திய அரசுக்கும், மாநில அரசுக்கும் பாலமாக விளங்குகின்றனர் இதனை அரசு அலுவலர்கள் அரசியல் கட்சியினர் புரிந்து கொள்ள வேண்டுமென கேட்டுக்கொண்டார்.

சிபிஐ விசாரணை வேண்டும்
தஞ்சாவூர் மாணவி தற்கொலை செய்து கொண்ட விவகாரம் தொடர்பாக பேசிய அவர் இந்த சம்பவம் தொடர்பாக சிபிஐ விசாரணை வேண்டும் என்றார். அந்த மாணவியின் தற்கொலை தூண்டப்பட்ட தற்கொலை என தெரிகிறது. இதற்கு காரணமானவர்களை கைது செய்யாமல் அம்மாவட்ட எஸ்.பி தனக்கு ஒன்றும் தெரியாது என கூறுவது வேடிக்கையாக உள்ளது எனவும் அண்ணாமலை தெரிவித்தார்.

இப்படி இருந்தால் எப்படி?
இப்படி இருந்தால் காவல்துறை மீது மக்களுக்கு எப்படி நம்பிக்கை வரும் என கேள்வி எழுப்பிய அண்ணாமலை காவல்துறை அந்த மாணவியின் வாக்குமூலத்தை வீடியோ எடுத்தவரை விட்டு விட்டு அதில் உள்ள உண்மையை ஆராய வேண்டும் என்று கூறினார்.