மகாபிரபு நீங்க இங்கயும் வந்துட்டீங்களா.. கோவை வெள்ளியங்கிரியில் பறந்த தவெக கொடி
கோவை: கோவை வெள்ளியங்கிரி மலை செல்வது அவ்வளவு சுலபமான காரியம் இல்லை. சவால்கள் நிறைந்த இந்தப் பயணம் வித்தியாசமான அனுபவங்களை தரும். இந்நிலையில் மர்ம நபர்கள் சிலர் இன்று வெள்ளியங்கிரி மலையில் நடிகர் விஜய் தொடங்கியுள்ள தவெக கொடியை மரத்தில் கட்டி பறக்கவிட்ட சம்பவம் சர்ச்சையை கிளப்பியுள்ளது.
கோவை மாவட்டம், வெள்ளியங்கிரி மலையில் சுயம்பு லிங்க ஆண்டவர் கோயில் உள்ளது. மாநிலம் கடந்து பிரபலமான இந்த கோயிலுக்கு வருடத்தின் எல்லா நாட்களுக்கு செல்ல முடியாது. பாதுகாக்கப்பட்ட வனப்பகுதி என்பதால் ஒவ்வொரு ஆண்டும் பிப்ரவரி, மார்ச், ஏப்ரல், மே ஆகிய மாதங்கள் மட்டுமே இங்கு பக்தர்கள் அனுமதிக்கப்படுவார்கள்.

அடிவாரத்தில் இருந்து சுமார் 8 கி.மீ தொலைவு, ஏழு மலைகளை கடந்துதான் இந்த கோயிலுக்கு செல்ல வேண்டும். இயற்கையின் பேரழகு நிறைந்த அந்த பகுதிக்கு செல்வதில் ஏராளமான சவால்களும் உள்ளன. முக்கியமாக கடந்தாண்டு வெள்ளியங்கிரி மலை ஏறிய சிலருக்கு திடீர் உடல்நலக்குறைவு ஏற்பட்டு உயிரிழந்தனர்.
இந்நிலையில் இந்தாண்டு பக்தர்கள் வெள்ளியங்கிரி மலைக்கு பக்தர்கள் அனுமதிக்கப்பட்டு வருகிறார்கள். தமிழ்நாடு முழுவதும் இருந்து மட்டுமல்லாமல் கேரளா, கர்நாடகா, வட இந்தியாவில் இருந்துகூட ஏராளமான பக்தர்கள் ஆர்வத்துடன் வெள்ளியங்கிரி மலைக்கு சென்று வருகிறார்கள். கடந்தாண்டை விட இந்த முறை பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது.
பக்தர்கள் கடைபிடிக்க வேண்டியது குறித்து விழிப்புணர்வு மேற்கொள்ளப்பட்டு வருகிறது. கடந்த சில நாட்களுக்கு முன்பு வெள்ளியங்கிரி மலையின் கேரள எல்லையை ஒட்டி சிறிய காட்டுத்தீ ஏற்பட்டது. கோடை காலம் என்பதால் வனப்பகுதியில் காட்டுத்தீ ஏற்படுவது இயல்புதான். வனத்துறையினர் உடனடியாக சம்பவ இடத்துக்கு விரைந்து தீயை அணைத்து பரவாமல் பார்த்து கொண்டனர்.
வெயில் அதிகம் இருப்பதால் எளிதில் தீப்பற்றக் கூடிய பொருட்களை கொண்டு செல்லக் கூடாது என்று வனத்துறை அறிவித்துள்ளது. இதேபோல யானை உள்ளிட்ட வனவிலங்குகளின் பிரச்னையும் உள்ளது. நேற்று வெள்ளியங்கிரி அடிவாரத்தில் ஒற்றை காட்டு யானை புகுந்து பரபரப்பை ஏற்படுத்தியது. வனத்துறையினர் அதை விரட்ட முயற்சித்தபோது, அந்த யானை வனத்துறையின் வாகனத்தை முட்டி எதிர்ப்பு தெரிவித்தது
இந்நிலையில், இன்று மதியம் வெள்ளியங்கிரி மலை கோயிலுக்கு செல்லும் வழியில் உள்ள ஒரு மரத்தின் மீது மர்ம நபர்கள் நடிகர் விஜய்யின் தமிழக வெற்றிக் கழகம் கட்சி கொடியை கட்டி பறக்க விட்டுள்ளனர். இதுதொடர்பான புகைப்படம் மற்றும் வீடியோ சமூக வலைதளங்களில் வெளியாகி வைரலாக பரவி வருகிறது.
விஜய் ரசிகர்கள், தவெகவினர், "கொடி பறக்குதா?" என்று இதை கொண்டாடினாலும், பக்தர்கள் இதற்கு எதிர்ப்பு தெரிவித்து வருகிறார்கள். "கோயிலில் கூட அரசியல் செய்வதா.. சம்பந்தப்பட்டவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்." என்று கூறி வருகிறார்கள். தகவல் அறிந்து சம்பவ இடத்துக்கு சென்ற வனத்துறையினர் மரத்தில் கட்டப்பட்டிருந்த தவெக கொடியை அகற்றினார்கள். வெள்ளியங்கிரி மலையில் தவெக கொடியை பறக்க விட்டது யார் என்று காவல்துறை மற்றும் வனத்துறையினர் விசாரணை நடத்தி வருகிறார்கள்.
பொதுவாக வெள்ளியங்கிரி மலை ஏறுவதற்கு முன்பு அடிவாரத்தில் பக்தர்களின் உடைமைகளை வனத்துறையினர் சோதனை நடத்துவார்கள். இந்த சோதனைக்கு பிறகு தான் பக்தர்கள் மலையில் ஏறுவதற்கு அனுமதிக்கப்படுவார்கள்.
இந்த பலத்த சோதனையையும் மீறி வெள்ளியங்கிரி மலையில் தவெக கொடி ஏற்றப்பட்டிருப்பது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. எதிர்ப்புகள் வலுத்து வருவதால் வனத்துறை பக்தர்களின் உடைமைகளை இன்னும் தீவிர பரிசோதனைக்கு உட்படுத்தி வருகிறார்கள்.












Click it and Unblock the Notifications