“மத்திய அரசு எங்கயுமே இந்தியை திணிக்கல” - அதே மேடையிலேயே அமைச்சர் பொன்முடிக்கு பதில் சொன்ன ஆளுநர்!
கோவை: எந்த இடத்திலும் எந்த நேரத்திலும் மத்திய அரசு இந்தி மொழியை திணிக்கவில்லை என தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவி அமைச்சர் பொன்முடிக்கு பதிலளிக்கும் வகையில் அதே மேடையில் பேசினார்.
கோவை பாரதியார் பல்கலைக்கழகத்தின் பட்டமளிப்பு விழா இன்று நடைபெற்றது. இதில் தமிழ்நாடு ஆளுநர் ஆர்.என்.ரவி மற்றும் உயர் கல்வித்துறை அமைச்சர் க.பொன்முடி, முன்னாள் இஸ்ரோ தலைவர் க.சிவன் ஆகியோர் கலந்து கொண்டனர்.

இந்த விழாவில் பேசிய அமைச்சர் பொன்முடி, "நாங்கள் இந்தியை எதிர்க்கவில்லை. இந்தி திணிப்பை தான் எதிர்க்கிறோம். ஆளுநர் தமிழ்நாட்டின் உணர்வுகளை புரிந்துகொண்டு எங்களுக்கு உதவுவார் என நம்புகிறேன். மாநிலத்தின் உணர்வுகளை ஒன்றிய அரசிடம் தெரிவிக்க வேண்டும்" எனப் பேசினார்.
பின்னர் இந்த நிகழ்வில் பேசிய ஆளுநர் ஆர்.என்.ரவி, "பட்டம் பெற்ற அனைத்து மாணவ மாணவிகளுக்கும் வாழ்த்துகளை தெரிவித்துக் கொள்கிறேன். வாழ்க்கையில் நீங்கள் புதிய பொறுப்புகளை சந்திக்க இருக்கிறீர்கள்.
சவால்களை எதிர்கொள்ளாமல் வெற்றிகளைப் பெற முடியாது. நாட்டின் 75வது சுதந்திர தினத்தில் என்ன சாதித்தோம் என்ன சாதித்திருக்கிறோம்? நாடு நூறாவது ஆண்டு சுதந்திரத்தை கொண்டாடும்போது இந்தியா உலக நாடுகளுக்கு தலைமையாக இருக்கும்.
இன்னும் சில வருடங்களில் நாடு நல்ல நிலையை எட்டும். சுகாதார வசதிகள், நல்ல குடிநீர், மின்சாரம், கல்வி, உணவு என அனைத்திலும் இந்தியா தன்னிறைவு அடையும். குறிப்பாக கடந்த 7 ஆண்டுகளில் மருத்துவ கல்லூரிகள் மற்றும் ஆரம்ப சுகாதார நிலையங்கள் இரட்டிப்பாகி இருக்கிறது.
இந்த வெற்றிப் பயணத்தில் தமிழ்நாடு முக்கிய பங்காற்றி வருகிறது. எந்த இடத்திலும் எந்த நேரத்திலும் மத்திய அரசு இந்தி மொழியை திணிக்கவில்லை. மாநில மொழிகளும் வளர வேண்டும். புதிய கல்விக்கொள்கையில் அந்தந்த மாநில மொழிகளுக்கு முக்கியத்துவம் அளிக்கப்படுகிறது." எனப் பேசினார்.