வெங்கய்யா நாயுடுவின் குன்னூர் ஹெலிகாப்டர் பயணம் ரத்து ஏன்? கோவையில் தங்கி காலையில் சென்றதன் பின்னணி!
கோவை: ஊட்டி வெலிங்டன் ராணுவ பயிற்சி தளத்திற்கு செல்ல இருந்த குடியரசு துணைத் தலைவர் வெங்கையா நாயுடுவின் ஹெலிகாப்டர் பயணம் நேற்று இரவு ரத்து செய்யப்பட்டது.
இந்திய துணை குடியரசு தலைவர் வெங்கையா நாயுடு ஊட்டி வெலிங்டன் ராணுவ பயிற்சி அகாடமியில் நடைபெறும் நிகழ்ச்சி ஒன்றில் கலந்து கொள்வதற்காக கோவை வந்தார்.
அதிர்ச்சி! வானிலிருந்து பறந்து வந்து.. குஜராத்தில் 3 இடத்தில் விழுந்த இரும்பு பந்துகள்! நடந்தது என்ன
அங்கிருந்து அவர் நேற்றிரவே ஹெலிகாப்டர் மூலமாக ஊட்டி செல்வதாக திட்டமிடப்பட்டிருந்தது. ஆனால், பயணம் ஒத்திவைக்கப்பட்டு இன்று காலை சென்றுள்ளார்.

வெங்கையா நாயுடு
குடியரசு துணை தலைவர் வெங்கையா நாயுடு வெலிங்டன் ராணுவ அதிகாரிகள் பயிற்சி கல்லூரியில் நடக்கும் நிகழ்ச்சியில் பங்கேற்பதற்காக கடந்த 15ஆம் தேதியே கோவை வருவதாக இருந்தது.
ஆனால், ஐக்கிய அரபு அமீரகத்தின் அதிபர் ஷேக் கலீபா பின் ஷையத் அல் நயான் மறைவையடுத்து அவரது உடலுக்கு அஞ்சலி செலுத்துவதற்காக வெங்கையா நாயுடு அபுதாபி சென்றார். இதனால் ஊட்டி நிகழ்ச்சி ஒத்தி வைக்கப்பட்டது.

கோவை வந்தார்
இதையடுத்து நேற்று அபுதாபியில் இருந்து சிறப்பு விமானம் மூலம் கோவை விமான நிலையம் வந்தார் துணை குடியரசு தலைவர் வெங்கையா நாயுடு. அவருடன் மனைவி உஷாவும் வருகை தந்தார். துணை குடியரசு தலைவர் வெங்கையா நாயுடுவுக்கு கோவை மாவட்ட ஆட்சியர் சமீரன், கோவை மாநகராட்சி ஆணைய ராஜகோபால் சுன்கரா, கோவை மேயர் கல்பனா உள்ளிட்டோர் வரவேற்பு அளித்தனர்.

வெலிங்டன் பயணம்
குடியரசு துணை தலைவர் வெங்கையா நாயுடு, நீலகிரி மாவட்டம் குன்னூரில் உள்ள வெலிங்டன் ராணுவ பயிற்சி கல்லூரியில் நடக்கும் நிகழ்ச்சியில் கலந்து கொள்கிறார். இதற்காக கோவையில் இருந்து ராணுவ ஹெலிகாப்டா் மூலம் குன்னூர் வெலிங்டன் ராணுவ கல்லூரிக்கு செல்வதாக திட்டமிடப்பட்டிருந்தது.
இதற்கிடையே தமிழ்நாட்டில் கடந்த சில நாட்களாக மழை பெய்து வருகிறது. ஊட்டி, கோத்தகிரி, குன்னூர் பகுதிகளில் தொடர்ந்து மழை பெய்து வரும் நிலையில் மலைப்பாதையில் மண்சரிவும் ஏற்பட்டுள்ளது.

பயணம் ரத்து
வெலிங்டன் ராணுவ பயிற்சி அகாடமியில் கலந்து கொள்ள கோவை வந்த குடியரசு துணை தலைவர் வெங்கையா நாயுடு, விமானப்படை ஹெலிகாப்டரில் ஊட்டி செல்ல இருந்த நிலையில், மோசமான வானிலை காரணமாக குடியரசு துணை தலைவரின் பயணம் ரத்து செய்யப்படுவதாக அறிவிப்பு வெளியானது.
காரணம், சில மாதங்களுக்கு முன்னதாக முப்படை தளபதி பிபின் ராவத் சென்ற ஹெலிகாப்டர் மோசமான வானிலையால் விபத்துக்கு உள்ளானது. இதனால் எந்த ரிஸ்க்கும் வேண்டாம் என முடிவெடுக்கப்பட்டுள்ளது.

கோவையிலேயே தங்கினார்
இதையடுத்து, கோவை ரெட்பீல்டில் உள்ள விருந்தினர் மாளிகையில் இரவு தங்கி, காலையில் சாலை மார்க்கமாக ஊட்டி செல்வார் எனக் கூறப்பட்டது.
அதன்படி, இன்று காலை கோவையில் இருந்து கோத்தகிரி வழியாக குன்னூர் சென்றுள்ள குடியரசு துணை தலைவர் வெங்கயா நாயுடு வெலிங்டன் ராணுவ பயிற்சி கல்லூரிக்கு வந்து சேர்ந்தார். அதைத்தொடர்ந்து கல்லூரியை பார்வையிட்டு அங்கு நடைபெறும் நிகழ்ச்சியில் உரையாற்றுகிறார்.

ஊட்டியில்
பின்னர் ஊட்டி சென்று ராஜ்பவனில் தங்குகிறார். 20-ஆம் தேதிவரை ஊட்டியில் தங்கி இருக்கும் வெங்கையா நாயுடு, அன்று காலை 8 மணிக்கு ராஜ்பவனில் இருந்து ஊட்டி தீட்டுக்கல் மைதானம் சென்று அங்கிருந்து ஹெலிகாப்டர் மூலம் கோவை விமானநிலையம் வருகிறார். பின்னர் கோவை விமானநிலையத்தில் இருந்து ஐதராபாத்துக்கு புறப்பட்டுச் செல்கிறார். துணை குடியரசுத் தலைவர் வெங்கையா நாயுடு வருகையையொட்டி கோவை மற்றும் நீலகிரி மாவட்டம் குன்னூர், ஊட்டியில் போலீஸ் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது. இதற்கிடையே தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவியும் நீலகிரி மாவட்டத்தில் இருப்பதால் இருவரும் சந்திக்க வாய்ப்பிருப்பதாகவும் கூறப்படுகிறது.