கோயம்புத்தூர் அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Oneindia App Download

ஈமு கோழி மோசடி வழக்கு: தீரன் சின்னமலை பேரவை தலைவர் யுவராஜூக்கு 10 ஆண்டு சிறை

ஆணவக்கொலை வழக்கில் கைது செய்யப்பட்டு சிறையில் உள்ள யுவராஜூக்கு ஈமு கோழி நிறுவனம் நடத்தி மோசடி செய்த வழக்கில் பத்தாண்டு சிறை தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.

Google Oneindia Tamil News

கோவை: ஈமு கோழி நிறுவனம் நடத்தி 2.7 கோடி ரூபாய் மோசடி செய்த வழக்கில், தீரன் சின்னமலை பேரவை தலைவர் யுவராஜ் உட்பட 3 பேருக்கு 10 ஆண்டு சிறை தண்டணையும், 2.47 கோடி அபராதமும் விதித்து கோவை முதலீட்டாளர் பாதுகாப்பு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. சேலம் மாவட்டம் ஓமலூரை சேர்ந்த கோகுல்ராஜ் ஆணவக்கொலை வழக்கில் யுவராஜ் முக்கிய குற்றவாளி ஆவார்.

கோவை, ஈரோடு, திருப்பூர் உள்ளிட்ட கொங்கு மண்டலத்தில் உள்ள மாவட்டங்களில் கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு ஈமு கோழி வளர்ப்பில் பல ஆயிரக்கணக்கான மக்கள் லட்சக்கணக்கில் முதலீடு செய்து பணத்தை இழந்துள்ளனர். இதுதொடர்பான வழக்குகள் கோவை முதலீட்டாளர் நல பாதுகாப்பு நீதிமன்றத்தில் நடந்து வருகின்றன.

Yuvraj 10 years imprisonment for emu farming scam

ஈரோடு மாவட்டம் பெருந்துறையை தலைமையிடமாக கொண்டு, கடந்த 2012 ஆம் ஆண்டு சுதி ஈமூ கோழி நிறுவனம் செயல்பட்டு வந்தது. இந்த ஈமு கோழி நிறுவனத்தை தீரன் சின்னமலை பேரவையின் மாநிலத்தலைவர் யுவராஜ் மற்றும் ஈரோடு சூரம்பட்டியை சேர்ந்த வாசு, பெருந்துறையை சேர்ந்த தமிழ்நேசன் ஆகியோர் இணைந்து நடத்தி வந்தனர்.

பத்திரிகை மற்றும் ஊடகங்களில் ஈமு கோழி வளர்ப்பு,முதலீட்டு திட்டங்கள் பற்றி கவர்ச்சிகரமான விளம்பரங்கள் அளித்தனர். அதில் முதல் பண்ணைத் திட்டத்தில் ஒன்றரை இலட்ச ரூபாய் முதலீடு செய்தால், ஒரு செட் அமைத்துக் கொடுத்து முதலீட்டாளர்களுக்கு 6 ஈமுக் கோழிகள் கொடுத்து, அதற்கு தேவையான தீவணங்கள் மற்றும் மருந்துகள் கொடுப்பதாகவும், மாதந்தோறும் 7 ஆயிரம் ரூபாய் பராமரிப்புத் தொகை வழங்கப்படும் எனவும், வருட முடிவில் ஊக்கத் தொகையாக 20 ஆயிரம் ரூபாய் வழங்கப்படும் எனவும் விளம்பரம் செய்யப்பட்டது.

சும்மா டேங்கர் லாரிய வெடிக்க வச்சு 500 பேரை போட்டு தள்ளிடுவேன்.. மிரட்டல் ஆடியோ விடுத்த கோழி அருள் சும்மா டேங்கர் லாரிய வெடிக்க வச்சு 500 பேரை போட்டு தள்ளிடுவேன்.. மிரட்டல் ஆடியோ விடுத்த கோழி அருள்

இரண்டாவது பண்ணைத் திட்டத்தில் ஒன்றரை இலட்ச ரூபாய் முதலீடு செய்தால் நிறுவனமே 6 ஈமுக் கோழிகளை பராமரித்தும், முதலீட்டாளர்களுக்கு மாதந்தோறும் 8 ஆயிரம் ரூபாய் கொடுப்பதாகவும், வருட முடிவில் 20 ஆயிரம் ரூபாய் ஊக்கத்தொகை வழங்கப்படும் எனவும் தெரிவித்துள்ளனர்.

இந்த விளம்பரங்களை நம்பி முதலீடு செய்தவர்களுக்கு முறையாக பணத்தை திருப்பி தராமல் ஏமாற்றியதோடு தலைமறைவாகி விட்டதாக புகார்கள் எழுந்தது. இந்த நிறுவனத்தில் முதலீடு செய்த 121 பேரிடம் 2 கோடியே 70 லட்சம் ரூபாய் மோசடி செய்ததாக புகார்கள் அளிக்கப்பட்டது. நாமக்கல் மாவட்டம் திருச்செங்கோடு பகுதியை சேர்ந்த பழனிச்சாமி என்பவர் கொடுத்த புகாரின் பேரில், யுவராஜ், தமிழ்நேசன், வாசு ஆகிய 3 பேர் மீதும் ஈரோடு மாவட்ட பொருளாதார குற்றப் பிரிவு காவல் துறையினர் வழக்குப் பதிவு செய்து, 3 பேரையும் கைது செய்தனர்.

இந்த வழக்கு விசாரணை கோவையில் உள்ள முதலீட்டார் நல பாதுகாப்பு நீதிமன்றத்தில் பல ஆண்டுகாலமாக நடந்து வந்தது. இந்த வழக்கில் நேற்று கோவை முதலிட்டாளர் நல நீதிமன்ற நீதிபதி ரவி தீர்ப்பு வழங்கினார். முக்கிய குற்றவாளியான யுவராஜ் மதுரை சிறையில் இருந்து அழைத்து வரப்பட்டார். யுவராஜ் வருகையை முன்னிட்டு, கோவை நீதிமன்ற வளாகத்தை சுற்றி அவரது ஆதரவாளர்கள் ஏராளமானோர் குவிந்திருந்தனர்.

நீதிபதி தீர்ப்பை வாசிக்க ஆரம்பித்தார். ஊழல் புகார் குற்றவாளிகளான யுவராஜ், வாசு, தமிழ்நேசன் ஆகிய மூன்று பேருக்கும் தலா 10 ஆண்டுகள் சிறை தண்டணையும், மூன்று பேருக்கும் சேர்ந்து 2.47 கோடி அபராதமும் விதித்து ரவி தீர்ப்பு வழங்கினார். இதில் தமிழ்நேசன் நீதிமன்றத்தில் ஆஜர் ஆகாததால், அவருக்கு பிணையில் வர முடியாத பிடிவாரண்ட் பிறப்பிக்கபட்டது.

சிறை தண்டனை பெற்ற யுவராஜ், சேலம் மாவட்டம் ஓமலூரைச் சேர்ந்த கோகுல்ராஜ் ஆணவக்கொலை வழக்கில் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ளார் என்பதும் இவர் மீது மேலும் பல வழக்குகள் உள்ளதும் குறிப்பிடத்தக்கது. இந்த நிலையில் ஈமு கோழி மோசடி வழக்கில் விதிக்கப்பட்ட பத்தாண்டு சிறை தண்டனை குறித்த தீர்ப்பை யுவராஜ் சிரித்துக் கொண்டே ஏற்றுக் கொண்டார்.

English summary
Yuvraj, who was arrested in a murder case, has been sentenced to 10 years in prison for fraudulently operating an Emu Farm company.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X