"ஆபிசுக்கு வரவே வேண்டாம்!" பெட்ரோல்-டீசல் சுத்தமாக காலி! வேறு வழியின்றி இலங்கை எடுத்த முக்கிய முடிவு
கொழும்பு: இலங்கையில் ஏற்பட்டுள்ள எரிபொருள் தட்டுப்பாடு மோசமான நிலையை எட்டியுள்ள நிலையில், அந்நாட்டு அரசு வேறு வழியின்றி சில நடவடிக்கைகளை எடுத்துள்ளது.
இலங்கையில் ஏற்பட்டுள்ள பொருளாதார நிலை நாளுக்கு நாள் மோசமடைந்து வருகிறது. நிலைமையைச் சமாளிக்க அந்நாட்டின் பிரதமர் ரணில் விக்ரமசிங்க எடுத்துள்ள நடவடிக்கைகளும் பெரியளவில் பலன் தருவதாக இல்லை.
உலகின் பல்வேறு நாடுகளிடம் இருந்து இலங்கை உதவிகளைக் கோரி உள்ள போதிலும், இந்தியா மட்டுமே இலங்கைக்கு உதவி வருவதாக ரணில் விக்ரமசிங்க வேதனை தெரிவித்துள்ளார்.
அடப்பாவமே! ஆம்புலன்ஸுக்கு கூட டீசல் இல்லை.. 8 மணி நேரம் காத்திருக்க வேண்டிய அவலம்.. திணறும் இலங்கை!

இலங்கை
இலங்கை நாட்டின் அந்நிய செலாவணி மிக மோசமாக உள்ளது. வெளிநாடுகளில் இருந்து எரிபொருள், மருந்துகள் உள்ளிட்ட அத்தியாவசிய பொருட்களை இறக்குமதி செய்யக் கூட இலங்கையிடம் அந்நிய செலாவணி இல்லை. இதனால் அங்கு மிக மோசமான எரிபொருள் பற்றாக்குறை ஏற்பட்டுள்ளது. ஆம்புலன்ஸ் வாகனங்கள் கூட எரிபொருள் நிரப்பப் பல மணி நேரம் வரை காத்திருக்க வேண்டிய சூழலே நிலவுகிறது.

அந்நிய செலாவணி
இந்தச் சூழலில் கடுமையான எரிபொருள் தட்டுப்பாடு காரணமாக இரண்டு வாரங்களுக்கு அரசு ஊழியர்களை வீட்டிலிருந்து வேலை செய்யுமாறு இலங்கை அரசு உத்தரவிட்டுள்ளது. மிகவும் அவசியமான எரிபொருள் இறக்குமதிக்குக் கூட அந்நிய செலாவணி இல்லாமல், அதை ரெடி செய்ய இலங்கை போராடி வருகிறது. தற்போது இலங்கையிடம் இருக்கும் பெட்ரோல்- டீசல் இருப்பு இன்னும் சில நாட்களில் தீர்ந்துவிடும் என்று கணிக்கப்பட்டுள்ளது.

பொருளாதார நெருக்கடி
இலங்கை அரசின் தவறான நிர்வாகம் கொரோனா பரவல் சூழல் காரணமாக 2.2 கோடி மக்களைக் கொண்ட இலங்கை சுதந்திரம் அடைந்தது முதல் இல்லாத அளவுக்கு மோசமான பொருளாதார நெருக்கடியை எதிர்கொண்டுள்ளது. இதனால் இலங்கை அரசு ஊழியர்கள் அடுத்த இரு மாதங்களுக்கு வீட்டில் இருந்தபடியே பணிபுரிந்தால் போதும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

வீட்டில் இருந்து வேலை
இது குறித்து அந்நாட்டின் உள்துறை அமைச்சகம் வெளியிட்டுள்ள அறிக்கையில், "எரிபொருள் விநியோகத்தில் கடுமையான சிக்கல் உள்ளது. பொது போக்குவரத்தும் மோசமாக உள்ளதைக் கருத்தில் கொண்டு குறைந்தபட்ச ஊழியர்கள் மட்டும் பணிக்கு வந்தால் போதும் என அறிவிக்கப்படுகிறது. 10 லட்சம் அரசு ஊழியர்களில், சுகாதாரம் போன்ற அத்தியாவசிய பணி செய்பவர்கள் மட்டும் அலுவலகத்திற்கு வந்தால் போதும்!" என்று அறிவிக்கப்பட்டுள்ளது. முன்னதாக கடந்த சில நாட்களுக்கு முன்பு தான், எரிபொருள் பற்றாக்குறையைச் சமாளிக்கவும், வீடுகளில் உணவுப் பயிரிடுவதை ஊக்குவிக்கவும் பொதுத்துறை ஊழியர்கள் 4 நாட்கள் மட்டும் பணிக்கு வந்தால் போதும் என அறிவிக்கப்பட்டது.

சர்வதேச நிதியம்
அங்கு எரிபொருள் நிரப்ப பெட்ரோல் நிலையங்களில் வாகனங்கள் பல கிலோமீட்டர் காத்திருக்க வேண்டிய சூழல் ஏற்பட்டுள்ளது. இந்தியா இலங்கைக்கு உதவினாலும் கூட சர்வதேச நிதியம் உதவினால் மட்டும் இலங்கையால் இந்த மோசமான நிலைமையில் இருந்து மீண்டு வர முடியும். இலங்கைக்கு உதவ அடுத்த நான்கு மாதங்களில் நெருக்கடியால் 47 மில்லியன் டாலர் தேவை என்று சர்வதேச நிதியம் குறிப்பிட்டுள்ளது.