"ரொம்ப ரொம்ப நன்றிங்க!" தக்க நேரத்தில் இலங்கைக்கு உதவிய இந்தியா.. நெகிழ்ந்துபோன ரணில் விக்ரமசிங்க
கொழும்பு: இலங்கையில் பொருளாதார பாதிப்பு நீடிக்கும் நிலையில், அதை மீட்க எடுக்கப்படும் நடவடிக்கை குறித்து அந்நாட்டின் பிரதமர் ரணில் விக்ரமசிங்க சில முக்கிய கருத்துகளைத் தெரிவித்துள்ளார்.
கொரோனா பரவல் உள்ளிட்ட பல்வேறு காரணங்களால் இலங்கை நாட்டில் பொருளாதாரம் மிகக் கடுமையாகப் பாதிக்கப்பட்டது. நிலையை மேம்படுத்த அந்நாட்டு அரசு எடுத்த நடவடிக்கைகளும் கூட பலன் தரவில்லை.
சொகுசு கப்பல் போதை வழக்கு.. ஷாருக்கான் மகன் ஆர்யன் கான் மட்டும் தப்பியது எப்படி? 5 முக்கிய காரணங்கள்
இதனால் அந்நாட்டு மக்கள் போராட்டத்தில் இறங்கினர். மக்கள் போராட்டத்தில் திடீரென வன்முறை வெடித்ததில் அரசியல்வாதிகளின் வீடுகள் தீ வைத்துக் கொளுத்தப்பட்டன.

புதிய பிரதமர்
இதையடுத்து முதலில் பிரதமர் பதவியிலிருந்து விலக மாட்டேன் எனப் பிடிவாதம் பிடித்த மகிந்த ராஜபக்ச, பின்னர் நிலைமை மோசமானதை உணர்ந்து பதவி விலகினார். இப்படி மிகவும் இக்கட்டான சூழலில், ரணில் விக்ரமசிங்க இலங்கை நாட்டின் பிரதமராகப் பதவியேற்றுக் கொண்டார். பதவியேற்ற உடன் நாட்டு மக்களுக்கு உரையாற்றிய ரணில் விக்ரமசிங்க, வரும் காலம் மோசமாக இருக்கும் என்றும் நாட்டின் நிலைமையை மீட்டெடுக்க இரு மாதங்கள் ஆகும் என்றும் தெரிவித்திருந்தார்.

இந்தியா உதவி
ஒரு புறம் மக்கள் போராட்டம் தொடரும் நிலையில், மறுபுறம் உலக நாடுகளிடம் இருந்து உதவிகளைப் பெறும் நடவடிக்கையிலும் ரணில் விக்ரமசிங்க அரசு இறங்கியது. அண்டை நாடான இலங்கைக்கு உதவும் வகையில் இந்தியா 1 பில்லியன் டாலர் கடனுதவியை அறிவித்து இருந்தது. அதேபோல எரிபொருள் பற்றாக்குறையைச் சமாளிக்கப் பல ஆயிரம் டன் டீசலையும் இந்தியா வழங்கி இருந்தது. அதேபோல தமிழக அரசு சார்பிலும் இலங்கைக்கு உதவி பொருட்கள் அனுப்பப்பட்டது. இந்நிலையில், தக்க நேரத்தில் உதவிய இந்தியாவுக்கு இலங்கையின் பிரதமர் ரணில் விக்ரமசிங்க நன்றி தெரிவித்துள்ளார்.

இந்தியாவுக்கு நன்றி
இது குறித்து அவர் தனது ட்விட்டர் பக்கத்தில், "இந்தியா மற்றும் ஜப்பானின் உதவி: இலங்கைக்கு உதவத் தேவையான திட்டத்தை குவாட் உறுப்பினர்கள் (அமெரிக்கா, இந்தியா, ஜப்பான் மற்றும் ஆஸ்திரேலியா) முன்பு முன்மொழிந்த இந்தியா மற்றும் ஜப்பானின் பாசிட்டிவ் முயற்சிக்கு நான் நன்றியுள்ளவனாக இருப்பேன். நான் இந்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் உடன் உரையாடினேன். இந்த இக்கட்டான காலகட்டத்தில் இந்தியா அளித்த ஆதரவிற்கு நமது நாட்டின் சார்பில் பாராட்டுகளைத் தெரிவித்தேன். வரும் காலத்தில் இரு நாடுகளுக்கு இடையேயான உறவு மேலும் வலுவாக இருக்கும் என நான் நம்புகிறேன்.

விவசாயத் துறை
நான் விவசாயத் துறையின் பிரதிநிதிகளைச் சந்தித்தேன், வரவிருக்கும் உணவுப் பற்றாக்குறை உள்ளிட்ட சவால்கள் குறித்து நாங்கள் விவாதித்தோம். விவசாயிகளுக்கு உரம் போதுமான அளவு வழங்கப்படுவதை உறுதி செய்ய 600 மில்லியன் டாலர் தேவைப்படுகிறது. விவசாயப் பொருட்கள் தடையின்றி வழங்குவதையும் விநியோகிப்பதையும் உறுதி செய்ய நான் நாடாளுமன்றத்தில் முன்வைக்கத் திட்டமிட்டுள்ள அத்தியாவசிய விவசாயப் பொருட்கள் சட்டம் குறித்து விவாதித்தோம்.

தனியார் மற்றும் வங்கித் துறை
கடந்த சில நாட்களாக, புதிய பட்ஜெட் திட்டம் மற்றும் எதிர்காலப் பொருளாதாரத் திட்டங்களைப் பற்றி விவாதிக்கக் கருவூலம் மற்றும் பொருளாதார ஆலோசகர்களுடன் வர்த்தக சபைகளின் பிரதிநிதிகளையும் சந்தித்தேன்.
இந்த வாரம் மத்திய வங்கி அதிகாரிகள், உள்ளூர் மற்றும் வெளிநாட்டு வங்கியாளர்களைச் சந்தித்தேன். சர்வதேச வட்டி விகிதங்கள் உயரும் அபாயம் மற்றும் உலகளவில் உணவுப் பொருட்களின் விலைகள் அதிகரித்து வருவதால் ஏற்படும் ஆபத்து குறித்து விவாதித்தோம். இப்போது நமக்குச் சிறிது நேரம் உள்ளது. இந்த நேரத்தில் சரியான கொள்கைகளை எடுத்தால் பாதிப்பைக் குறைக்க முடியும்.

சர்வதேச நிதியம்
சர்வதேச நிதியத்தின் அதிகாரிகளைத் தொடர்பு கொண்டேன் ஆலோசனை நடத்தினேன். அப்போது IMF கடன் வழங்கும் திட்டத்தால் ஆதரிக்கப்படும் ஒரு பொருளாதார திட்டம் குறித்து நாங்கள் விவாதித்தோம். நாங்கள் எதிர்கொள்ளும் பிரச்சினைகளுக்கு உறுதியான தீர்வுகளைக் காண இது ஒரு முக்கிய நடவடிக்கையாக இருப்பதால், பேச்சுவார்த்தைகளை விரைவாகக் கண்காணித்து, ஜூன் இரண்டாவது வாரத்திற்குள் முக்கிய நடவடிக்கையை எடுக்க உள்ளோம்.

புதிய சட்ட திருத்தம்
21வது திருத்தச் சட்ட வரைவு தொடர்பான கருத்துக்களை முன்வைக்க அனைத்து கட்சித் தலைவர்கள் கூட்டம் நடைபெற்றது. இன்றைய கூட்டத்தில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு கலந்துகொள்ள முடியாத காரணத்தினால் இறுதிக்கட்ட கூட்டம் ஜூன் 3ஆம் நடைபெறவுள்ளது. அரசியலமைப்பின் 21வது சட்டத்தில் திருத்தம் செய்வது குறித்து ஒருமித்த கருத்து ஏற்பட்டதில் மகிழ்ச்சி!" என்று பதிவிட்டுள்ளார்.