இலங்கையில் 4 புதிய அமைச்சர்கள் நியமனம் - அதிபர் கோத்தபாய ராஜபக்சே அறிவிப்பு
கொழும்பு: இலங்கையில் ரணில் விக்ரமசிங்க அமைச்சரவையில் 4 புதிய அமைச்சர்களை அதிபர் கோத்தபாய ராஜபக்சே நியமித்தார். ஜனாதிபதி மாளிகையில் புதிய அமைச்சர்கள் பதவிப்பிரமாணம் நடைபெற்றுள்ளது.
பொருளாதார நெருக்கடிக்கு தீர்வு காணாத ராஜபக்சே சகோதரர்கள் அரசில் இருந்து வெளியேற வேண்டும் எனக்கோரி இலங்கையில் போராட்டம் நீடிக்கிறது.

மக்கள் போராட்டம் காரணமாக மகிந்த ராஜபக்சே மே 9ஆம் தேதி பதவி விலகினார். இலங்கை வரலாற்றில் இல்லாத அளவுக்கு தலைவிரித்தாடிய இந்த கலவரத்தை கட்டுப்படுத்த ராணுவத்தை களமிறக்கிய அதிபர் கோத்தபாய ராஜபக்சே, வன்முறையாளர்களை கண்டதும் சுட உத்தரவும் வழங்கினார். அத்துடன் நாடு முழுவதும் ஊரடங்கும் அமல்படுத்தப்பட்டது.
இந்த நடவடிக்கைகளால் வன்முறை சம்பவங்கள் ஓய்ந்து நாடு முழுவதும் அமைதி திரும்பியது. இதையடுத்து, இலங்கையின் புதிய பிரதமராக ரணில் விக்ரமசிங்க மே 12ஆம் இலங்கை பிரதமராகப் பதவியேற்றார். அவரையும் பிரதமராக ஏற்றுக்கொள்ள மக்கள் தயாராக இல்லை. ரணில் கெட் அவுட் என்று கூறி மக்கள் முழக்கமிட்டனர்.
இதனால் அமைச்சரவை பதவியேற்பதில் சிக்கல் நீடித்தது. இந்த நிலையில் ரணில் விக்ரமசிங்க அமைச்சரவையில் நால்வர் இன்று இணைந்தனர். தினேஷ் குணவர்த்தனே பொதுப்பணித்துறை அமைச்சராகவும், மின்சாரத்துறை அமைச்சராக காஞ்சனாவும் பதவியேற்றனர். ஜி.எல்.பெரீஸ் நிதித்துறை, பிரசன்ன ரணதுங்கா நகர்ப்புற வளர்ச்சித்துறை அமைச்சராகவும் பொறுப்பேற்றார்.
இவர்கள் நால்வருமே மகிந்த ராஜபக்சே மற்றும் கோத்தபாய ராஜபக்சேவின் ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன கட்சியைச் சேர்ந்தவர்களாவர். புதிய அமைச்சர்கள் பதவி பிரமாணம் கொழும்பு - கோட்டை ஜனாதிபதி மாளிகையில் இன்று நடைபெற்றதாக ஜனாதிபதி ஊடக பிரிவு தெரிவித்துள்ளது.