இந்தியா, சீனா, ஜப்பான் தலைமையில் இலங்கைக்கு கடன் வழங்க மாநாடு.. ஒர்க் அவுட் ஆகுமா ரணில் ஸ்கெட்ச்?
கொழும்பு: இந்தியா, சீனா மற்றும் ஜப்பான் தலைமையில் இலங்கைக்கு கடன் வழங்க வகை செய்யும் மாநாட்டை நடத்த முயற்சிப்பதாக இலங்கை பிரதமர் ரணில் விக்கிரமசிங்கே தெரிவித்துள்ளார்.
இலங்கை நாடாளுமன்றத்தில் இன்று ரணில் விக்கிரமசிங்கே பேசியதாவது: எமக்கு கடனும் உதவியும் வழங்கும் நாடுகள் வரிசையில் இந்தியா, சீனா, ஜப்பான் ஆகிய நாடுகள் முன்னணியில் உள்ளன. எப்பொழுதும் எமக்கு ஆதரவாக இருந்த இந்நாடுகளுடனான உறவுகள் தற்போது முறிந்துள்ளன. அந்த உறவுகளை மீண்டும் ஏற்படுத்த வேண்டும்.
மிக விரைவில் நடைபெறும் இந்தியா- சீனா அடுத்தகட்ட ராணுவ பேச்சுவார்த்தை.. ஏன் முக்கியம் தெரியுமா

ஜப்பானும் இலங்கையும்
ஜப்பான் நீண்ட கால நண்பர். எமது நாட்டிற்கு பெரிதும் உதவிய நட்பு நாடு. ஆனால் கடந்த காலங்களில் நடந்த துரதிஷ்டமான சம்பவங்களால் அவர்கள் இப்போது எம்முடன் நிற்கவில்லை. சில திட்டங்களை நிறுத்திவைப்பது குறித்து எமது நாடு ஜப்பானுக்கு முறையாக அறிவிக்கவில்லை. சில சமயங்களில் காரணம் கூறப்படவில்லை. தனிநபர் ஒருவர் சமர்ப்பித்த அறிக்கைகளின்படி ஜப்பான் எமது நாட்டில் மேற்கொண்ட சில திட்டங்கள் பாதியில் நிறுத்தப்பட்டுள்ளன.

இந்தியா-ஜப்பான்
ஜப்பானும் இந்தியாவும் எங்களுக்கு இரு மின் உற்பத்தி நிலையங்களை வழங்குவதற்கு இணங்கின. எந்தவொரு நியாயமான காரணமும் இன்றி குறித்த இரு திட்டங்களும் ரத்தாகின. 2019ஆம் ஆண்டிற்குள் சுமார் 3 பில்லியன் டாலர் மதிப்பிலான திட்டங்களை வழங்க ஜப்பான் இணங்கியது. இந்த திட்டங்கள் அனைத்தும் எந்த காரணமும் இல்லாமல் நிறுத்தி வைக்கப்பட்டன. அடிப்படையற்ற காரணங்களுக்காக நட்பு நாடுகளால் எமக்கு வழங்கப்பட்ட மதிப்புமிக்க திட்டங்களை இடைநிறுத்துவது குறித்து விசாரணை நடத்துமாறு பொது நிதிக்கான நாடாளுமன்றக் குழுவை வலியுறுத்துகிறேன்.

நிதிக்கான மாநாடு
நட்பு நாடுகளை அந்நியப்படுத்தியதன் பின்னர், எமக்கு உதவ இந்தியா முன்வந்தது. இந்த கடினமான நேரத்தில் அவர்களுக்கு எமது மரியாதையையும் நன்றியையும் தெரிவித்துக் கொள்கிறோம். ஜப்பானுடன் பழைய நட்புறவை மீண்டும் ஏற்படுத்தவும் பணியாற்றி வருகிறோம்.
எமது கடன் வழங்கும் நண்பர்களை ஒன்றிணைக்க உதவி மாநாட்டை நடத்த சர்வதேச நாணய நிதியத்திற்கு அழைப்பு விடுத்தோம். இந்தியா, சீனா, ஜப்பான் ஆகிய நாடுகளின் தலைமையில் இதுபோன்ற மாநாட்டை நடத்துவது எமது நாட்டிற்கு பெரும் பலம். சீனாவும் ஜப்பானும் வெவ்வேறு கடன் அணுகுமுறைகளைக் கொண்டுள்ளன. இவ்வாறான ஒரு மாநாட்டின் மூலம் கடன் வழங்கும் அணுகுமுறைகளில் சில உடன்பாடுகளை எட்ட முடியும் என்பது எமது நம்பிக்கை.

புதிய பொருளாதார கொள்கை
இதுவரை வாங்கிய கடனை திருப்பி செலுத்தும் பொறுப்பு எமக்குள்ளது. பலதரப்பு இறக்குமதியாளர்களிடமிருந்து பெறப்பட்ட பல கடன் தவணைகளை இந்த மாதம் திருப்பிச் செலுத்த வேண்டும். கடன் தவணைகளை செலுத்தவில்லை. எதிர்காலத்தில் புதிய கடன்களை எடுக்க வேண்டியிருக்கும், அந்த கடனை திருப்பிச் செலுத்த வேண்டிய பொறுப்பு எமக்குள்ளது. பிற நாடுகளில் பெற்ற கடனை திருப்பி செலுத்தும் திட்டத்தை கொண்டுவந்தவுடன், எமது நாடு பெற்றுள்ள தனிநபர் கடன்கள் மீது கவனம் செலுத்த வேண்டும். சர்வதேச நிதி ஆலோசனை நிறுவனமான lezard மற்றும் சர்வதேச சட்ட ஆலோசனை நிறுவனமான Clifford Chance ஆகியோரிடம் இருந்து நிபுணர் ஆலோசனையைப் பெறுவோம். பெற்ற கடனை அடைக்க அந்நிய செலாவணி இருக்க வேண்டும். அந்நியச் செலாவணியைப் பெறுவதற்கு ஏற்றுமதிப் பொருளாதாரத்தை விரைவாகப் பலப்படுத்த வேண்டும். சிங்கப்பூர், துபாய் ஆகிய பொருளாதார மையங்களுக்கு மத்தியில் மற்றுமொரு பொருளாதார மையமாக இலங்கை வளர வாய்ப்புள்ளது. இலங்கைக்கு புதிய பொருளாதாரத்தை உருவாக்குவதே எமது இறுதி இலக்கு. சுதந்திரத்தின் நூற்றாண்டு விழாவான 2048ஆம் ஆண்டளவில் இலங்கையை அபிவிருத்தியடைந்த நாடாக மாற்றுவதே இலக்காகும். இவ்வாறு ரணில் விக்கிரமசிங்கே உரையாற்றினார்.