ஒட்டுமொத்தமாக ஸ்தம்பித்து நிற்கும் இலங்கை.. தக்க நேரத்தில் தோள் கொடுக்கும் இந்தியா! மக்கள் நிம்மதி
கொழும்பு: மிகக் கடுமையான பொருளாதார நிதி நெருக்கடியில் சிக்கித் தவிக்கும் இலங்கைக்கு தன்னால் முடிந்த அனைத்து உதவிகளையும் இந்தியா செய்து வருகிறது.
இலங்கை நாட்டில் நிலவும் பொருளாதார நெருக்கடி நாளுக்கு நாள் மோசமாகிக் கொண்டே செல்கிறது. அத்தியாவசிய பொருட்களைக் கூட பொதுமக்களால் எளிதாக வாங்க முடியாத சூழலே அங்கு நிலவுகிறது.
புதிதாகப் பிரதமராகப் பதவியேற்றுள்ள ரணில் விக்ரமசிங்க நிலைமை சரி செய்ய இரு மாதங்கள் வரை ஆகும் என்று ஏற்கனவே தெரிவித்துவிட்டார். இது அந்நாட்டு மக்களிடையே கடும் கொந்தளிப்பை ஏற்படுத்தி உள்ளது.
பிக்கப் வேன், ரூ.2 லட்சத்துடன் வடமாநிலத்தவர்கள் எஸ்கேப்! பிடிக்க முடியாது என முதலாளிக்கு வீடியோ

இலங்கை
இப்போது இலங்கையில் ஒரு நாள் தேவையைப் பூர்த்தி செய்யக் கூடிய அளவுக்கு மட்டுமே எரிபொருள் கையிருப்பில் உள்ளதாகப் புதிதாகப் பிரதமராகத் தேர்ந்தெடுக்கப்பட்ட பிரதமர் ரணில் விக்கிரமசிங்க தெரிவித்தார். ரணில் விக்கிரமசிங்க மேலும் கூறுகையில், "தற்போது, நம்மிடம் ஒரு நாளுக்கான பெட்ரோல் மட்டுமே உள்ளன. அடுத்த இரண்டு மாதங்கள் நமது வாழ்க்கை மிகவும் கடினமானதாக இருக்கும்" என்று கூறி இருந்தார்.

டீசல்
எரிபொருள் பற்றாக்குறை அங்குத் தலைவிரித்து ஆடும் நிலையில், மக்களின் கோபம் கையை மீறிச் செல்லும் சூழல் ஏற்படும் ஆபத்து உள்ளது. இதனிடையே எரிபொருள் பற்றாக்குறையைச் சற்றே சமாளிக்கும் வகையில், ஏற்கனவே அறிவித்துள்ள கடன் திட்டத்தின் கீழ், இந்தியா மேலும் இரண்டு கப்பல்களில் டீசலை வரும் மே 18 மற்றும் மே 29ஆம் தேதிகளில் அனுப்ப உள்ளன.

தியாகம் செய்ய வேண்டும்
மேலும், வெளிச் சந்தையில் டாலர்களை வழங்கி பொருட்களை இறக்குமதி செய்யவும் தேவையான நடவடிக்கை எடுக்கப்படுவதாகப் பிரதமர் ரணில் விக்கிரமசிங்க தெரிவித்தார். நாட்டை இந்த இக்கட்டான சூழலில் இருந்து மீட்டெடுக்கப் பொதுமக்கள் சில தியாகங்களைச் செய்வதற்கும் தயாராக இருக்க வேண்டும் என்று ரணில் விக்கிரமசிங்க வேண்டுகோள் விடுத்திருந்தார்.

மின்வெட்டு
இலங்கையில் இப்போது இருக்கும் எரிபொருள் பற்றாக்குறையைத் தீர்க்க குறைந்தது 75 மில்லியன் அமெரிக்க டாலர் தேவை. இலங்கையில் நான்கில் ஒரு பங்கு மின்சாரம் எரிபொருளின் மூலமே உற்பத்தி செய்யப்படுகிறது. இந்த பற்றாக்குறை நாட்டு மக்களை இருளில் தள்ளி உள்ளது. இதன் காரணமாக சில பகுதிகளில் தினசரி மின்வெட்டு ஒரு நாளைக்கு 15 மணி நேரமாக அதிகரிக்க வாய்ப்பு உள்ளது.

மருந்து
இதைத் தவிர இலங்கையில் மருந்துகளுக்கும் கடும் பற்றாக்குறையும் உள்ளது. கொரோனா பெருந்தொற்றுக்கு மத்தியில் இது மக்களின் ஆரோக்கியம் குறித்த அச்சத்தை எழுப்புகிறது. மேலும், அங்குள்ள 14 லட்சம் அரச ஊழியர்களுக்கு மே மாத சம்பளத்தை வழங்குவதற்குக் கூட அரசிடம் போதிய நிதி இல்லை எனப் பிரதமர் விக்ரமசிங்க தெரிவித்துள்ளார்.

இந்தியாவைச் சார்ந்திருக்க வேண்டும்
இப்படியொரு மோசமான நிதி நெருக்கடியில் சிக்கி இருப்பதால், உணவுப் பொருட்கள், எரிபொருள் மற்றும் மருந்து உள்ளிட்ட அத்தியாவசியப் பொருட்களுக்கு அண்டை இந்தியாவைச் சார்ந்திருக்க வேண்டிய சூழல் இலங்கைக்கு ஏற்பட்டுள்ளது. இலங்கைக்கு ஏற்கனவே 3 பில்லியன் டாலர் மதிப்புள்ள கடன் மற்றும் நாணய பரிமாற்றங்கள் இந்தியாவால் நீட்டிக்கப்பட்டுள்ளன. மேலும், குறைந்தபட்சம் 2 பில்லியன் டாலர் திரும்ப பெரும் தேதியையும் தள்ளி வைத்துள்ளது.

உரம்
உள்நாட்டில் தட்டுப்பாடு ஏற்படக் கூடாது என்பதற்காக இந்தியாவில் யூரியா உரம் ஏற்றுமதி தடை விதிக்கப்பட்டுள்ள போதிலும், இலங்கை அரசின் வேண்டுகோளின் பேரில், இந்தியா சமீபத்தில் 65,000 மெட்ரிக் டன் யூரியாவை வழங்கியுள்ளது. ஏற்னனவே இலங்கைக்கு 3 பில்லியன் டாலர் கடன் உதவியை இந்தியா அறிவித்துள்ள நிலையில், புதிய அரசு உடனும் இணைந்து பணியாற்ற இந்தியா விருப்பம் தெரிவித்துள்ளது.

தேவை
பொருளாதார நெருக்கடியில் இருந்து விடுபட இலங்கைக்கு இந்த ஆண்டு குறைந்தபட்சம் 3 முதல் 4 பில்லியன் டாலர்கள் தேவை. கடந்த மூன்று மாதங்களில் மட்டும் எரிபொருள் மற்றும் உணவுக்கான கடன் வசதிகள் உட்பட கிட்டத்தட்ட 2.5 பில்லியன் டாலர்களை இந்தியா இலங்கைக்கு வழங்கியுள்ளது. இந்த ஆண்டு மார்ச் முதல் 270,000 மெட்ரிக் டன் எரிபொருளையும் இந்தியா அனுப்பி உள்ளது. இவை தவிர சுமார் 40,000 டன் அரிசி இலங்கைக்கு அனுப்பப்பட்டுள்ளது. மேலும், பெட்ரோலிய பொருட்களை வாங்கக் கடன், நைட்ரஜன் உரம் உள்ளிட்டவற்றையும் இந்தியா வழங்கி உள்ளது.

இந்தியா உதவி
இலங்கையில் அதிகரித்து வரும் பணவீக்கத்திற்கு மத்தியில் அத்தியாவசிய பொருட்களை வாங்கக் கடந்த ஏப்ரல் 10ஆம் தேதி காய்கறிகள் மற்றும் தினசரி ரேஷன் பொருட்களை இந்தியா இலங்கைக்கு அனுப்பியது. சர்க்கரை, அரிசி மற்றும் கோதுமை நிரப்பப்பட்ட கப்பல்களும் டெல்லியில் இருந்து கொழும்புக்கு அனுப்பப்பட்டன. இப்படி இந்தியா தன்னால் முடிந்த அனைத்து வகைகளிலும் இலங்கைக்கு உதவி வருவது குறிப்பிடத்தக்கது.