இந்திய தொழிலதிபருக்கு சொந்தமான மாலத்தீவு பங்களாவில்தான் பதுங்கி இருந்தாரா மகிந்த ராஜபக்சே?
கொழும்பு: இலங்கையில் மக்கள் புரட்சிக்கு அஞ்சி பிரதமர் பதவியை ராஜினாமா செய்த மகிந்த ராஜபக்சே, மாலத்தீவுக்கு தப்பிச் சென்று அங்கு இந்திய தொழிலதிபர் ஒருவருக்கு சொந்தமான பங்களாவில்தான் பதுங்கி இருந்ததாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
இலங்கையில் பொருளாதார நெருக்கடியைத் தொடர்ந்து மக்கள் கிளர்ச்சியில் ஈடுபட்டுள்ளனர். மக்கள் புரட்சியைத் தொடர்ந்து பிரதமர் பதவியில் இருந்து மகிந்த ராஜபக்சே ராஜினாமா செய்தார். ஆனால் அதற்கு முன்னதாக போராட்டத்தில் ஈடுபட்ட பொதுமக்கள் மீது வன்முறையை கட்டவிழ்த்துவிட்டார் மகிந்த ராஜ்பகசே.

இதனால் கொந்தளித்துப் போன பொதுமக்கள் மகிந்த ராஜபக்சேவின் பூர்வீக வீடு, பெற்றோர் கல்லறைகள், சிலைகள், அவரது ஆதரவு அரசியல்வாதிகளின் பங்களாக்கள், வர்த்தக நிறுவனங்கள் என அத்தனையையும் தீக்கிரையாக்கினர். இதனால் உயிருக்கு அஞ்சி கொழும்பைவிட்டு தப்பி ஓடிய மகிந்த ராஜபக்சே, திருகோணமலையில் இலங்கை கடற்படை முகாமில் பதுங்கி இருந்தார்.
மகிந்த ராஜபக்சே மே 9-ல் விதைத்த வன்முறை விதையில் தாமே சிக்கினார்- நாடாளுமன்றத்தில் சரத் பொன்சேகா
இந்த நிலையில் இலங்கையில் இருந்து தப்பி மாலத்தீவில்தான் மகிந்த ராஜபக்சே சில நாட்கள் பதுங்கி இருந்ததாக அந்நாட்டு ஊடகங்கள் செய்திகள் வெளியிட்டுள்ளன. மாலத்தீவின் முன்னாள் ஜனாதிபதியும் தற்போதைய சபாநாயகருமான நசீத், மகிந்த ராஜபக்சே குடும்பத்துக்கு மிக நெருக்கமானவர்; அவரது கூட்டாளிகளில் ஒருவரான இந்திய தொழிலதிபருக்கு சொந்தமான பங்களாவில்தான் மகிந்தவும் அவரது குடும்பத்தினரும் பதுங்கி இருந்ததாகவும் அந்த தகவல்கள் தெரிவிக்கின்றன. இந்த நசீத்தை தான் தற்போது இலங்கைக்கான வெளிநாட்டு நிவாரணங்களைப் பெறுவதற்கான ஒருங்கிணைப்பாளராக ரணில் விக்கிரமசிங்கே நியமித்திருக்கிறார்.
இதனைத் தொடர்ந்து மகிந்த ராஜபக்சே நிரந்தரமாக அதே பங்களாவில் பதுங்கி இருக்கும் வகையில் இந்திய தொழிலதிபரிடம் பேரம் பேசியதாகவும் இதற்கு இந்திய தொழிலதிபரும் ஒப்புக் கொண்டதாகவும் கூறப்படுகிறது. ஆனால் இந்த தகவல்களை மகிந்தவின் மகன் நாமல் ராஜபக்சே நிராகரித்துள்ளார்.