காரைக்கால்- இலங்கை யாழ். காங்கேசன்துறை துறைமுகம் இடையே கப்பல் போக்குவரத்து? இலங்கை அரசு ஒப்புதல்?
கொழும்பு: புதுச்சேரி யூனியன் பிரதேசத்தின் காரைக்கால் மற்றும் இலங்கை யாழ்ப்பாணத்தின் காங்கேசன்துறை துறைமுகம் இடையே கப்பல் போக்குவரத்தை தொடங்குவதற்கும் தமிழகத்தின் திருச்சி மற்றும் யாழ்ப்பாணத்தின் பலாலி இடையே விமான சேவையை தொடங்குவதற்கும் இலங்கை அரசு ஒப்புதல் தெரிவித்துள்ளதாக மீன்வளத்துறை அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா தெரிவித்துள்ளார்.
இந்தியாவின் தமிழகம் மற்றும் இலங்கை இடையே ரயில், கப்பல் மற்றும் விமான சேவை நீண்டகாலமாக இருந்து வந்தது. ரயில் மற்றும் கப்பல் சேவைகள் இப்போது நடைமுறையில் இல்லை. விமான சேவையும் கொழும்பு வழியாகத்தான் இருந்து வருகிறது.

இதனால் தமிழகத்தின் தூத்துக்குடி, ராமேஸ்வரம் மற்றும் புதுச்சேரியின் காரைக்கால் துறைமுகங்களில் இருந்து இலங்கையில் தமிழர்களின் தாயகப் பிரதேசமான வட மாகாணத்துக்கு கப்பல் மற்றும் படகுப் போக்குவரத்து குறித்து ஆலோசிக்கப்பட்டது. ஆனால் இந்த திட்டம் வெற்றிகரமாக நடைமுறைக்கு வரவில்லை.
அதேபோல் யாழ்ப்பாணம் பலாலி விமான நிலையத்தில் இருந்து திருச்சிக்கு நேரடி விமானங்களை இயக்க வேண்டும் என்பதும் நீண்டகால கோரிக்கை. இது தொடர்பாக கருத்து தெரிவித்த இலங்கை மீன்வளத்துறை அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா, காரைக்கால் மற்றும் யாழ்ப்பாணம் காங்கேசன்துறை துறைமுகம் இடையேயான படகு அல்லது கப்பல் போக்குவரத்துக்கும் திருச்சி- பலாலி விமான சேவைக்கும் இலங்கை அரசு ஒப்புதல் தெரிவித்துள்ளது என்றார்.