இந்தியா vs சீனா.. இரு நாடுகளின் "இரும்பு பிடியில்" சிக்கிய இலங்கை.. எந்த பக்கம் போகிறது களம்?
கொழும்பு: பொருளாதார நெருக்கடியில் தத்தளிக்கும் இலங்கைக்கு இந்தியா பெருமளவு கடனுதவிகளை வழங்குகிறது; சீனாவும் இலங்கைக்கு உதவிக் கரம் நீட்டுகிறது; தெற்காசிய அரசியலின் அண்ணன்களாகிய சீனாவையும் இந்தியாவையும் சமன் செய்ய வேண்டிய நெருக்கடியில் இலங்கை உள்ளது என்கின்றனர் அரசியல் பார்வையாளர்கள்.
பாதுகாப்பு விவகாரங்களில் இந்தியாதான் எங்களுக்கு முதல் நட்பு நாடு; அதேநேரத்தில் பொருளாதார ரீதியாக சீனாவின் உதவியும் எங்களுக்கு தேவை என்கிறார் இலங்கைக்கான முன்னாள் வெளியுறவுத்துறை செயலாளர் ஜெயந்த் கொலம்பகே.
ஐ.நா.வுக்கான இலங்கையின் நிரந்தர பிரதிநிதி தயான் ஜெயதிலகே கூறுகையில், இலங்கைக்குள் கோத்தபாய ராஜபக்சேவுக்கு அப்படி ஒன்றும் செல்வாக்கும் இல்லை; சர்வதேச சமூகத்திடமும் நன்மதிப்பும் கோத்தபாயவுக்கும் இல்லை. அதனால்தான் சர்வதேசத்திடம் இருந்து போதுமான நிதியை கோத்தபாய ராஜபக்சேவால் பெறவும் முடியவில்லை என சுட்டிக் காட்டுகிறார். மேலும், சீனாவுடன் இலங்கை மிக நெருக்கமான உறவை பேணி வருகிறது. சீனாவும் இலங்கைக்கு தேவையானதை கொடுக்கிறது என்பதுதான் யதார்த்தமான நிலை என்கிறார் ஜெயதிலகே.
அட.. திருவனந்தபுரத்தில் எரிபொருள் நிரப்பும் இலங்கை விமானங்கள்! இந்தியாவிற்கு அதிகரிக்கும் வருமானம்

கோத்தபாயவும் சீனாவும்
அதேபோல் சீனாவையும் இந்தியாவையும் ஒரே தராசில் வைத்து சமன் செய்யக் கூடிய வல்லமை மகிந்த ராஜபக்சேவுக்கு இருந்தது. ஆனால் கோத்தபாய ராஜபக்சேவோ மூர்க்கமாக சீனாவை நோக்கிய பார்வை கொண்டவராக மட்டுமே இருந்தார். இது அமெரிக்காவையும் இந்தியாவையும் அதிருப்தி அடையவும் செய்தது என்கின்றனர் அரசியல் பார்வையாளர்கள். இலங்கையின் மூத்த பத்திரிகையாளர் ஷிகார் அனீஸ் கூறுகையில், சீனாவிடம் இருந்து இலங்கை கடன்பெறுவது எளிதாக இருக்கிறது. இதனாலேயே இந்தியா, அமெரிக்கா, ஐரோப்பிய ஒன்றியம் ஆகியவற்றுடனான உறவில் பாதிப்புகளும் எதிரொலிக்க செய்கின்றன என்கிறார்.

இந்தியா நோக்கி
ஆனால் இலங்கையின் பொருளாதார நெருக்கடியானது இந்தியாவுடனான உறவை சீரமைத்தாக வேண்டிய திசைக்கு தள்ளிவிட்டது. இதற்கு நல்ல உதாரணம், மன்னார் வளைகுடாவில் பிரமாண்ட காற்றாலை திட்டத்தை சீனாவுக்குதான் முதலில் கொடுத்தது இலங்கை. ஆனால் வேறவழியே இல்லாமல் சீனாவிடம் இருந்து திரும்பப் பெற்றது இலங்கை என்கிற களநிலவரமும் சுட்டிக்காட்டப்படுகிறது. சீனாவைப் பொறுத்தவரை இலங்கை ஒரு வர்த்தக நட்பு நாடு. இலங்கையில் பெருமளவு முதலீடு செய்யவும் சீனா விரும்புகிறது. இலங்கை மீதான சீனாவின் இந்த கரிசனத்துக்கு காரணம் பூகோள ரீதியாக அதன் அமைவிடம் மிக முக்கியமானது என்கின்றனர் அரசியல் பார்வையாளர்கள்.

இந்தியா ஜப்பான்
இலங்கையின் பொருளாதார நெருக்கடி நிலைமையானது அந்நாட்டின் வெளியுறவு கொள்கையில் மிகப் பெரிய மாற்றத்தை நிகழ்த்தி வருகிறது. இந்த ஆண்டின் தொடக்கத்தில் இருந்து இந்தியா பெரிய அளவு கடனுதவி, எரிபொருட்கள், உணவுப் பொருட்கள் என இடைவிடாமல் வழங்கி வருகிறது. அதேபோல ஜப்பானும் இலங்கைக்கு உதவிகளை வாரி வழங்குகிறது. இதனால்தான் இந்தியாவுக்கும் ஜப்பானுக்கும் தற்போதைய பிரதமர் ரணில் விக்கிரமசிங்கே வெளிப்படையாகவே நன்றி தெரிவித்தார். ரணில் விக்கிரமசிங்கேவை பிரதமராக்கியதில் சில நாடுகளுக்கு பங்கு இருக்கிறது என்கிற பார்வையையும் நாம் மறைத்துவிடவும் முடியாது என்பதையும் நினைவில் கொள்ளலாம்.

ஒரே தராசு
இப்போதைய நிலையில் இலங்கையானது இந்தியாவுடனும் சீனாவுடனும் நட்பு பாராட்டியாக வேண்டிய நெருக்கடியில் சிக்கிக் கொண்டிருக்கிறது. இரு நாடுகளுடனும் சமமான உறவை பேணியாக வேண்டிய கட்டாயத்தில் இருக்கிறது. ஒரே தராசில் இரு நாடுகளையும் இலங்கை சமனாக வைத்திருக்க வேண்டும். இல்லை எனில் தராசு நிலைகுலைவது போல இலங்கையின் அரசியலும் பொருளாதாரமும் ஏதோ ஒரு சக்தியால் சீரழிவுக்கு போவதை தவிர்க்கவும் முடியாது என விவரிக்கின்றனர் இலங்கையின் மூத்த பத்திரிகையாளர்கள்.