இலங்கை: முன் பதிவு செய்தால் கோட்டா முறையில் பெட்ரோல், டீசல் விற்பனை- அமலுக்கு வருகிறது!
கொழும்பு: இலங்கையில் வாரந்தோறும் முன்பதிவு செய்பவருக்கு மட்டும் பெட்ரோல், டீசல் விற்பனை செய்யும் புதிய நடைமுறை அடுத்த மாதம் முதல் நடைமுறைப்படுத்தப்படும் என்று அந்நாட்டின் மின்சக்தி, எரிசக்தித்துறை அமைச்சர் கஞ்சன விஜேசேகர தெரிவித்தார்.
இலங்கையில் மிக மோசமான பொருளாதார நெருக்கடியால் மக்களின் அன்றாட வாழ்க்கை பெருமளவு முடங்கி உள்ளது. இலங்கைக்கான பெட்ரோல், டீசல் கொண்டு வரும் கப்பல்களுக்கு உரிய பணம் கொடுக்க அந்நாட்டிடம் பணம் இல்லை.

இதனால் இந்தியா உள்ளிட்ட நாடுகள் அளிக்கும் கடனுதவியில் பெட்ரோல், டீசல் கப்பல்களுக்கு பணத்தைக் கொடுத்து வாங்குகிறது இலங்கை. இந்த நிலைமையால் இலங்கையில் பெட்ரோல், டீசல் தட்டுப்பாடு பல மாதங்களாக நீடிக்கிறது. இலங்கை பெட்ரோல் விற்பனை நிலையங்களில் பல கிலோ மீட்டர் தொலைவுக்கு நீண்ட வரிசைகளில் பொதுமக்கள் காத்திருக்கின்றனர். பெரும்பாலான விற்பனை நிலையங்களில் பெட்ரோல், டீசல் கையிருப்பும் இல்லை என்கிற நிலைமைதான் உள்ளது. இதனால் பொதுமக்கள் பெரும் துயரத்துக்குள்ளாகி உள்ளனர்.
இந்த நிலையில் இலங்கை மின்சக்தி மற்றும் எரிசக்தி அமைச்சர் கஞ்சன விஜேசேகர, பெட்ரோல், டீசல் விநியோகம் தொடர்பாக சில கருத்துகளை தமது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளார். அதில், இலங்கையில் 24 மணிநேரமும் மின்சாரத்தை வழங்கவும் பெட்ரோல், டீசல், மண்ணெண்ணெய் விநியோகத்தை சீராக சாத்தியமாக்கும் வரையிலும் ஜூலை மாதம் முதல் புதிய நடைமுறையை அமல்படுத்தும் யோசனை உள்ளது. அதாவது எரிபொருள் தேவை உள்ளவர்கள் முன்பதிவு செய்து கொண்டால் வாரம் ஒரு முறை கோட்டா முறையில் அவர்களுக்கு பெட்ரோல், டீசல், மண்ணெண்ணெய் விநியோகிக்கப்படும்.
இலங்கை அரசு தற்போது ஒருவாரத்துக்கான எரிபொருட்களைத்தான் இறக்குமதி செய்து வருகிறது. 4 மணிநேரத்துக்கு மின்சாரம் வழங்க பெட்ரோல், டீசல் உள்ளிட்டவைகளுக்கு ஒரு மாதத்துக்கு 100 மில்லியன் டாலர் செலவிடப்படுகிறது. இப்போது ஒரு மாதத்துக்கான எரிபொருட்கள் செலவும் 750 மில்லியன் டாலராகிவிட்டது. இதனால் 24 மணிநேரம் மின்சாரம் கிடைக்கும் வரையில் பெட்ரோல், டீசல், மண்ணெண்ணெய் விற்பனைக்கு இத்தகைய கோட்டா முறை அவசியமாகிறது. இந்த கோட்டா முறை ஜூலை முதல் அமலுக்கு வரும் என்றார்.