அதானிக்காக பிரதமர் மோடி நெருக்கடி தந்த விவகாரம்- மன்னிப்பு கேட்ட இலங்கை மின்சபை தலைவர் பெர்டினாண்டோ
கொழும்பு: இலங்கை மன்னர் சூரிய மற்றும் காற்றாலை மின்சக்தி திட்டத்தை அதானி குழுமத்துக்கு வழங்கும் விவகாரத்தில் இந்திய பிரதமர் நரேந்திர மோடி மீது புகார் கூறியதற்காக இலங்கை மின்சார சபையின் தலைவர் பெர்டினாண்டோ மன்னிப்பு கோரியிருப்பது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
இலங்கையில் துறைமுகங்கள், மின்திட்டங்கள் உள்ளிட்டவைகளை கைப்பற்றுவதில் தெற்காசியாவின் பெரிய அண்ணன்களாகிய இந்தியாவும் சீனாவும் இடைவிடாமல் மல்லுக்கட்டி வருகின்றன. தென்னிலங்கையின் கொழும்பு, அம்பந்தோட்டா துறைமுகங்களை சீனா கையகப்படுத்தியது. கிழக்கு இலங்கையின் திருகோணமலை இந்தியாவிடம் இருக்கிறது.
இலங்கை மின்சார திட்டத்தை அதானியிடம் கொடுக்க சொன்னாரா மோடி? எழுந்த சர்ச்சை.. கோத்தபய மறுப்பு

மன்னார் காற்றாலை திட்டமும் சீனாவும்
இந்த வரிசையில் மன்னார் வளைகுடாவின் மிக பிரமாண்டமான காற்றாலை மின்திட்டமும் இடம்பிடித்தது. மன்னார் வளைகுடா என்பதால் இத்திட்டம் இந்தியாவுக்க்குதான் கொடுக்கப்படும் என கூறப்பட்டு வந்தது. ஆனால் யாருமே எதிர்பார்க்காத வகையில் மன்னார் காற்றாலை மின் திட்டத்தை திடீரென சீனாவுக்கு தாரை வார்த்து கொடுத்தது இலங்கை.

இந்தியா மல்லுக்கட்டு
இது இந்தியா- இலங்கை உறவில் மிகப் பெரிய புகைச்சலை ஏற்படுத்தியது. மன்னார் வளைகுடா என்பது இந்தியாவின் தென் எல்லைப் பகுதி. இங்கிருந்து கூப்பிடு தொலைவில்தான் இந்தியாவின் எல்லையான அரிச்சல் முனை உள்ளது. இதனால் இந்தியாவின் பாதுகாப்பு மிகப் பெரிய அச்சுறுத்தல் என்கிற விமர்சனங்கள் கடுமையாக முன்வைக்கப்பட்டன. இது தொடர்பாக இந்திய தரப்பிலும் இலங்கையிடம் ஆட்சேபனை தெரிவிக்கப்பட்டிருந்தது.

சீனாவுக்கு மறுப்பு
இதன்பின்னர் ஒருகட்டத்தில் திடீரென சீனாவிடம் இருந்து மன்னார் காற்றாலை திட்டத்தை இலங்கை பறித்துக் கொண்டது. இத்திட்டம் இந்தியாவிடம் வழங்கப்பட்டது. இந்தியாவின் அதானி குழுமத்திடம் மன்னார் காற்றாலைத் திட்டம் கொடுக்கப்படுவது தொடர்பாக தகவல்கள் வெளியாகின. இது தொடர்பாக பல்வேறு சர்ச்சைகளும் எழுந்தன.

பிரதமர் மோடி மீது புகார்
இதனையடுத்து இலங்கை நாடாளுமன்ற கூட்டுக் குழு இது தொடர்பாக விசாரணை நடத்தியது. இந்த விசாரணைக் குழுவின் முன்பாக ஆஜரான இலங்கை மின்சார சபையின் தலைவர் பெர்டினாண்டோ, மன்னார் காற்றாலை மின் திட்டத்தை அதானி குழுமத்துக்கு வழங்க வேண்டும் என இந்திய பிரதமர் மோடி தமக்கு நெருக்கடி தந்தார் என ஜனாதிபதி கோத்தபாய ராஜபக்சே தம்மிடம் கூறியதாக பெர்டினாண்டோ கூறினார். இது இந்திய, இலங்கை அரசியலில் மிகப் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியிருந்தது.

மன்னிப்பு கேட்ட இலங்கை மின்சபை தலைவர்
ஆனால் இலங்கை ஜனாதிபதி கோத்தபாய ராஜபக்சே இதை திட்டவட்டமாக நிராகரித்திருந்தார். இது தொடர்பாக தாம் கூறவில்லை என விளக்கம் அளித்திருந்தார் கோத்தபாய. இந்த நிலையில் இலங்கை மின்சார சபையின் தலைவர் பெர்டினாண்டோவும் தாம் பிரதமர் மோடி தொடர்பாக தவறுதலாக கூறிவிட்டதாக மன்னிப்பு கோரி இருக்கிறார். இலங்கை மின்சார சபையின் தலைவர் பெர்டினாண்டோ இது தொடர்பாக கூறுகையில், எதிர்பாராத அழுத்தம் மற்றும் உணர்ச்சிகளின் காரணமாக மன்னார் காற்றாலைத் திட்டத்தை அதானி குழுமத்துக்கு தருமாறு இந்திய பிரதமர் வலியுறுத்தினார் என்ற வார்த்தையை வரம்பில்லாமல் வெளிப்படுத்த நான் தள்ளப்பட்டேன். இது முற்றிலும் தவறானது என கூறியிருக்கிறார். பெர்டினாண்டோ இப்படி மறுப்பும் மன்னிப்பும் கோரியிருந்தாலும் இந்த விவகாரம் இப்போது ஓயாது என்றே தெரிகிறது.