இலங்கையில் இனி கூப்பன் கொடுத்தால்தான் பெட்ரோல், டீசல் கிடைக்கும்... அலாரம் அடிக்கும் பிரதமர் ரணில்
கொழும்பு: இலங்கையில் பெட்ரோல், டீசலுக்கான தட்டுப்பாடு மேலும் 3 வார காலத்துக்கு நீடிக்கும் என்றும் பெட்ரோல், டீசல் பெறுவதற்கு கூப்பன் முறையை அமல்படுத்துவதை தவிர்க்கவும் முடியாது என்றும் அந்நாட்டு நாடாளுமன்றத்தில் பிரதமர் ரணில் விக்கிரமசிங்கே தெரிவித்தார்.
இலங்கை நாடாளுமன்றத்தில் இன்று ரணில் விக்கிரமசிங்கே பேசியதாவது: நமது முதன்மையான கவனம் நாட்டின் பொருளாதார நிலைத்தன்மையில் உள்ளது. ஆனால், பொருளாதார நிலைமைத் தன்மையை ஏற்படுத்துவதன் மூலம் மட்டும் நாம் இந்நிலையிலிருந்து மீள முடியாது. நம் நாட்டின் பொருளாதாரத்தை மீட்டெடுக்க வேண்டும். இது இரண்டு, மூன்று நாட்களில் செய்து முடிக்கும் காரியமல்ல. இந்த சவாலை அற்புதங்களால் செய்துவிட முடியாது. வெற்று முழக்கங்களால், மந்திரத்தால், உணர்ச்சிகளால் இதை சாதிக்க முடியாது. புத்திசாலித்தனமான திட்டங்களை செயற்படுத்துவதற்கு கடின உழைப்பு மற்றும் அர்ப்பணிப்பும் அவசியம்.

இலங்கை ஒரு மாதத்திற்கு 500 மில்லியன் டாலர்களை எரிபொருளுக்காக செலவிடுகின்றது. தற்போதைய நெருக்கடியால் எரிபொருள் விலை அதிகரிக்கும் அபாயம் உள்ளது. உலக அளவில் கச்சா எண்ணெய் விலை 40 விழுக்காடு வரை உயரும் என சிலர் கூறப்படுகிறது. இந்த பின்னணியில் எரிபொருளுக்கான கூப்பன் முறையை (பெட்ரோல், டீசல் பெறுவதற்கு கூப்பன் முறை) அறிமுகப்படுத்தும் யோசனையை நிராகரிக்க முடியாது. எப்படியாவது அடுத்த 6 மாதங்களுக்கு 3,300 மில்லியன் டாலர் மதிப்பிலான பெட்ரோல், டீசலை நாம் பெற்றாக வேண்டும்.
எரிவாயுவை இறக்குமதி செய்வதற்காக ஒரு மாதத்திற்கு 40 மில்லியன் டாலர்கள் செலவாகும். நாம் தற்போது எரிவாயு இறக்குமதி செய்ய பலதரப்பு உதவி மற்றும் இந்திய கடன்களைப் பயன்படுத்துகிறோம். அடுத்த 6 மாதங்களுக்கு பெட்ரோல், டீசலைப் பெற 250 மில்லியன் அமெரிக்க டாலர்கள் தேவைப்படுகின்றது. நாட்டில் அடுத்த 3 வாரங்கள் எரிபொருள் தேவை மிக கடினமான காலமாக இருக்கும். நாம் அனைவரும் எரிபொருள் மற்றும் எரிவாயுவை முடிந்தவரை கவனமாக உபயோகப்படுத்த வேண்டிய நேரம் இது. தேவையின்றி எரிபொருள் மற்றும் எரிவாயுவை பதுக்குவதையும் தவிர்க்குமாறு கேட்டுக் கொள்கிறேன். இந்த கடினமான 3 வாரங்களின் பின்னர் எரிபொருள் மற்றும் உணவை சிரமமின்றி வழங்குவதற்கு நாம் முயற்சி செய்கின்றோம். இவ்வாறு ரணில் விக்கிரமசிங்கே கூறினார்.