இந்திய ரூபாயை பயன்படுத்துமா இலங்கை? மக்கள் தெருக்களில் பஞ்சத்தால் செத்து மடியும் நிலை வருமாம்!
கொழும்பு: ரூபாய் மதிப்பு வீழ்ச்சி அடைந்துவிட்ட நிலையில் இலங்கை இந்திய ரூபாயை பயன்படுத்தும் நிலைமை உருவாகும்; செப்டம்பர் மாதத்தில் இலங்கை வரலாறு காணாத பெரும் பஞ்சத்தை எதிர்கொள்ளும்; தெருக்களில் செத்து மடியும் நிலை வரும் என்று அந்நாட்டின் முன்னாள் கணக்காய்வாளர் காமினி விஜேசிங்க தெரிவித்துள்ளார்.
இலங்கை நிலவரம் தொடர்பாக காமினி விஜேசிங்க கூறியதாவது:

இலங்கை ரூபாயின் மதிப்பு கடுமையாக வீழ்ச்சி அடைந்துவிட்டது. இதனால் இலங்கையின் வர்த்தக நடவடிக்கைகளுக்கு இந்திய ரூபாயை பயன்படுத்துகிற நிலைமை உருவாகும். இலங்கையில் மிக மோசமான உணவுப் பஞ்சம் ஏற்படப் போகிறது. இதனை இப்போதே தடுக்க நடவடிக்கை எடுக்க வேண்டும். இல்லை எனில் தெருக்களில் மக்கள் செத்து மடியும் நிலை வரும்.
இலங்கை மிக மோசமான நிலைமையில் இருப்பதை ஆட்சியாளர்கள் உணரவே இல்லை. இலங்கை தமக்கு தேவையான உணவை உற்பத்தி செய்வது மிகப் பெரிய அளவில் குறைந்துபோய்விட்டது. இதுதான் நாட்டின் உணவு பஞ்சத்துக்கு காரணமாகப் போகிறது. கிட்டத்தட்ட சுனாமி 2-வது அலை போல பெரும் அழிவு ஏற்படப் போகிறது. செப்டம்பர் மாதத்தில் இந்த பேரழிவு உணரப்படும்.
இலங்கையில் பொருளாதார சிக்கல் இருக்கிறது; விவசாயத்துறையை மீண்டும் கட்டி எழுப்பியாக வேண்டும். ஆனால் ஜனாதிபதியின் அதிகாரம் குறித்து அமைச்சரவையில் விவாதித்து கொண்டிருக்கிறார்கள். இப்போதைய நிலையில் விவசாயத்துக்கான டீசல் உடனடி தேவை. அதனை விவசாயிகளுக்கு வழங்க வேண்டும். இதனை செய்யாமல் விட்டால் அரிசி இறக்குமதி செய்தாக வேண்டிய நிலைமை வரும். அரிசியை இறக்குமதி செய்யக் கூடிய பணமோ இலங்கையிடம் இல்லை.
இலங்கை மோசமான பொருளாதார நெருக்கடியில் சிக்கி இருப்பதால் ஆடைத் தொழிற்சாலைகளை வேறு நாடுகளுக்கு கொண்டு செல்வதற்கு தயாராகின்றனர். இந்தியாவின் ரூபாயை பயன்படுத்துகிற நிலைமை உருவாகலாம். இந்தியாவுடனான கொடுக்கல் வாங்கல்கள் தொடர்பில் மிகுந்த கவனமாக செயற்பட வேண்டும். இந்தியா வழங்கும் கடன்களை திருப்பி செலுத்த முடியாத பட்சத்தில் நாட்டிலுள்ள துறைமுகங்கள் உள்ளிட்டவற்றை இந்தியாவுக்கு வழங்க வேண்டிய நிலை ஏற்படும். இவ்வாறு காமினி விஜேசிங்கே கூறியுள்ளார்.