உலக வங்கியிடம் இருந்து அடுத்த சில மாதங்களில் இலங்கைக்கு 700 மில்லியன் டாலர் கடன் உதவி?
கொழும்பு: உலக வங்கியிடம் இருந்து அடுத்த சில மாதங்களில் இலங்கைக்கு 700 மில்லியன் டாலர் கடனுதவி கிடைக்கும் என்று அந்நாட்டு வெளியுறவுத்துறை அமைச்சகம் நம்பிக்கை தெரிவித்துள்ளது.
மோசமான பொருளாதார பேரழிவில் சிக்கியிருக்கும் இலங்கை இந்த நெருக்கடியில் இருந்து தத்தளிக்க பல்வேறு முயற்சிகளை மேற்கொண்டுள்ளது. புதியதாக அமைந்துள்ள பிரதமர் ரணில் விக்கிரமசிங்கே தலைமையிலான அரசு இதற்கான தீவிர நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது.

இதன் ஒரு கட்டமாக கொழும்பில் உள்ள உலக வங்கியின் இலங்கைக்கான அதிகாரி சியோ காந்தாவை இலங்கை வெளியுறவுத்துறை அமைச்சர் பேராசிரியர் ஜி.எல். பீரிஸ் சில நாட்களுக்கு முன்னர் சந்தித்துப் பேசினார்.
இச்சந்திப்பின் போது சர்வதேச நாணய நிதியம், ஏனைய சர்வதேச நிறுவனங்கள் மற்றும் நன்கொடை வழங்கும் நாடுகள் ஆகியவற்றிடமிருந்து நீண்டகால உதவிகள் கிடைக்கும் வரை உலக வங்கி இலங்கைக்கு உதவ வேண்டும் என்று ஜி.எல்.பீரிஸ் உதவி கோரினார். மேலும் இலங்கை நாடாளுமன்றத்தில் விரைவில் தாக்கல் செய்யப்பட உள்ள பட்ஜெட்டில் பற்றாக்குறையைக் குறைப்பதில் உள்ள சவால்களையும் ஜி.எல்.பீரிஸ் எடுத்துரைத்தார்.
ஆகையால் இலங்கை பொருளாதார சிக்கல்களுக்கு நிலையான தீர்வுகள் கிடைக்கும் வரை உலக வங்கியின் குறுகிய கால நிதி உதவி பாராட்டத்தக்கதாக அமையும் என்றார் ஜி.எல்.பீரிஸ்.
இதற்கு பதிலளித்த உலகவங்கி அதிகாரி சியோ காந்தா, ஆசிய அபிவிருத்தி வங்கி, ஆசிய உட்கட்டமைப்பு முதலீட்டு வங்கி மற்றும் ஐ.நா. அலுவலகம் போன்ற நிறுவனங்களுடன் இணைந்து உலக வங்கி செயல்பட்டு வருகிறது. இந்த இக்கட்டான நேரத்தில் இலங்கை மக்களுக்கு உதவுவதற்காக அவை ஏற்கனவே அறிவித்த திட்டங்களை ´மீண்டும் செயற்படுத்துமாறு வலியுறுத்தி உள்ளோம் என்றார்.
இச்சந்திப்பைத் தொடர்ந்து அடுத்த சில மாதங்களுக்குள் உலக வங்கி சுமார் 700 மில்லியன் அமெரிக்க டாலர் கடன் உதவி வழங்கும் என நம்பிக்கை தெரிவித்துள்ளார் வெளியுறவுத் துறை அமைச்சர் ஜி.எல்.பீரிஸ்.