ஆருத்ரா தரிசனம்.. கொரோனா வழிகாட்டுதல்களை பின்பற்றி.. சிதம்பரம் நடராஜர் கோவில் தேரோட்டத்திற்கு அனுமதி
கடலூர்: இன்று (டிசம்பர் 19) நடைபெறும் சிதம்பரம் நடராஜர் கோவில் தேரோட்டத்திற்கு முதலில் அனுமதி மறுக்கப்பட்ட நிலையில், தற்போது கொரோனா விதிமுறைகளைப் பின்பற்றி கோயில் தேரோட்டத்தை நடத்த மாவட்ட நிர்வாகம் அனுமதி அளித்துள்ளது.
கடலூர் மாவட்டம் சிதம்பரத்தில் புகழ்பெற்ற நடராஜர் கோயில் அமைந்துள்ளது. மார்கழி ஆருத்ரா உற்சவத்தை முன்னிட்டு இந்தக் கோயிலில் இன்று (டிச.19) தேரோட்டமும், நாளை (டிச.20) ஆருத்ரா தரிசனமும் நடைபெறும் என ஏற்கனவே அறிவிக்கப்பட்டிருந்தது.
இந்தச் சூழலில் கொரோனா ஊரடங்கு அமலில் உள்ளதால் தேரோட்டத்துக்கு அனுமதி அளிக்கச் சிதம்பரம் கோட்டாட்சியர்க் கே.ரவி தலைமையில் நடைபெற்ற கூட்டத்தில் தெரிவிக்கப்பட்டது. அதேபோல மார்கழி ஆருத்ரா தரிசன விழாவையும் பக்தர்கள் அனுமதி இல்லாமல் நடத்தவும் முடிவு எடுக்கப்பட்டது.

இருந்தாலும் கூட கோயிலின் 5 தேர்களும் அலங்கரிக்கப்பட்டு தயார் நிலையில் வைக்கப்பட்டன. இதற்கிடையே கோயில் தேரோடத்திற்கு அனுமதி அளிக்க வேண்டும் என்பதை வலியுறுத்திச் சிவ பக்தர்கள் கோயில் எதிரே உள்ள சாலையில் மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
இதையடுத்து ஆருத்ரா தரிசனத்தை முன்னிட்டு சிதம்பரத்தில் நாளை நடராஜர் கோயில் தேரோட்டத்துக்கு மாவட்ட நிர்வாகம் அனுமதி அளித்துள்ளது. கொரோனா பாதுகாப்பு வழிமுறைகளைப் பின்பற்றி நடராஜர் கோயில் தேரோட்டத்தை நடத்த மாவட்ட நிர்வாகம் அனுமதி அளித்துள்ளதாகக் கடலூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் சக்தி கணேசன் தெரிவித்தார்.
சமூக இடைவெளியைப் பின்பற்றி மாஸ்க் அணிந்து, குறைந்த அளவிலான பக்தர்களோடு தேரோட்டம் நடத்தவும் மாவட்ட நிர்வாகம் வேண்டுகோள் விடுத்துள்ளது. தேரோட்டத்திற்கு அனுமதி அளிக்கப்பட்டதை அடுத்து போராட்டம் நடத்தியவர்கள் கலைந்து சென்றனர்.
திருப்பாவை, திருவெம்பாவை பாடல்கள் - 2 #Margazhi,#Thiruppaavai