கடலூர் அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Oneindia App Download

சிதம்பரம் நடராஜர் கோவிலில் கனகசபை மீதேறி பக்தர்கள் வழிபட அரசாணை...தமிழக அரசு அதிரடி

சிதம்பரம் நடராஜர் கோவிலில் கனகசபை மீது ஏறி பக்தர்கள் வழிபட அனுமதி தந்து தமிழக அரசு அரசாணை வெளியிடப்பட்டது.

Google Oneindia Tamil News

கடலூர்: சிதம்பரம் நடராஜர் கோவிலில் கனகசபை மீது ஏறி பக்தர்கள் வழிபட அனுமதி தந்து தமிழக அரசு அரசாணை வெளியிடப்பட்டது. இந்து சமய அறநிலையத்துறை ஆணையரின் கருத்தினை தமிழக அரசு பரிசீலனை செய்து இவ்வாறு நடவடிக்கை எடுத்துள்ளது. பக்தர்களின் கோரிக்கை மற்றும் சென்னை உயர்நீதிமன்ற தீர்ப்பின்படி விதிகளை பின்பற்றி தரிசனம் செய்ய அனுமதி வழங்கப்பட்டுள்ளது.

சிதம்பரத்தில் அருள்பாலிக்கும் ஆடல்வல்லான் நடராஜர் திருக்கோயில் பஞ்சபூத ஸ்தலங்களில் ஆகாய ஸ்தலமாக விளங்கி வருவதால் உலகெங்கிலும் இருந்து பக்தர்கள் பெருமளவில் வருகை புரிகின்றனர்.

நடராஜரின் பொற்சபையாகவும் போற்றப்படுகிறது. இத்திருக்கோயிலில் மூலவரே உற்சவராக எழுந்தருள்வது சிறப்பாகும். அருள்மிகு சபாநாயகர் வீற்றிருக்கும் கனகசபை மண்டபத்தில் பக்தர்கள் அனுமதிக்கப்பட்டு சிதம்பர இரகசியத்தை தரிசிப்பது நடைமுறையில் இருந்து வந்தது.

சிதம்பரம் நடராஜர் கோயிலில் கனகசபை தரிசனம்...தீட்சிதர்களுக்கு கோரிக்கை வைத்த அமைச்சர் சேகர்பாபு சிதம்பரம் நடராஜர் கோயிலில் கனகசபை தரிசனம்...தீட்சிதர்களுக்கு கோரிக்கை வைத்த அமைச்சர் சேகர்பாபு

 கொரோனா காலத்தில் தடை

கொரோனா காலத்தில் தடை

கொரோனா பெருந்தொற்று காரணமாக திருக்கோயில்களில் பக்தர்களை அனுமதிப்பதற்கு அரசால் வழங்கப்பட்ட அரசு வழிகாட்டி நெறிமுறைகளின்படி பக்தர்களிடமிருந்து பூஜை பொருட்களை பெறுதல், அமர்ந்து தரிசனம் செய்தல் மற்றும் அங்கபிரதட்சனம் செய்தல் ஆகியவை தவிர்க்கப்பட்டு வந்தது. இந்நிலையில், தற்போது கொரோனா தொற்று பெருமளவு குறைந்துள்ளதால் வழிபாட்டு தலங்களில் பக்தர்களுக்கு விதிக்கப்பட்ட தடைகள் விலக்கப்பட்டு அனைத்து திருக்கோயில்களிலும் ஏற்கனவே இருந்த வழிபாட்டு நடைமுறைகள் மீண்டும் தொடருகிறது.

 தீட்சிதர்கள் தடை

தீட்சிதர்கள் தடை

நடராஜர் கோயிலை நிர்வகித்து வரும் தீட்சிதர்கள் கனகசபை மண்டபத்தின் மீதேறி பக்தர்கள் தரிசனம் செய்ய தடை விதித்து தீர்மானம் நிறைவேற்றயதாக பக்தர்கள் தரப்பில் பெரும் ஆட்சேபனைகள் தெரிவிக்கப்பட்டு வந்தது.
கடந்த சில மாதங்கள் முன்னர் சிதம்பரத்தை சேர்ந்த பெண் ஒருவர் நடராஜர் கோவில் கனகசபை மீது ஏறி தரிசனம் செய்ததற்காக அங்குள்ள தீட்சிதர்களால் கண்டிக்கப்பட்டார். இந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. மேலும் கனகசபை மீது ஏறி சுவாமி தரிசனம் செய்ய கோவில் தீட்சிதர்கள் தடை விதித்திருந்தனர்.

கனகசபை மீதேறி தரிசனம் செய்ய அனுமதி

கனகசபை மீதேறி தரிசனம் செய்ய அனுமதி

இதனைத் தொடர்ந்து மாவட்ட ஆட்சியர் மற்றும் கடலூர் இந்து சமய அறநிலையத்துறை உதவி ஆணையர் ஆகியோரால் விசாரணை மேற்கொள்ளப்பட்டு சமர்ப்பிக்கப்பட்ட அறிக்கைகளின் அடிப்படையில், சென்னை உயர்நீதிமன்ற தீர்ப்பின்படி ஆகம விதிகளை பின்பற்றி பக்தர்கள் தரிசனம் செய்ய அனுமதி வழங்கப்பட்டுள்ளது.

தமிழக அரசு அரசாணை

தமிழக அரசு அரசாணை

தீட்சிதர்கள் விதித்த தடையை நீக்கி தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது. இது தொடர்பாக தமிழக அரசு வெளியிட்ட அரசாணையில் 'இந்து சமய அறநிலையத்துறை ஆணையர்‌, கடலூர்‌ மாவட்டம்‌, சிதம்பரம்‌ வட்டம்‌ மற்றும்‌ நகரில்‌ உள்ள அருள்மிகு சபாநாயகர்‌ (நடராஜர்‌) திருக்கோயிலில்‌ உள்ள கனகசபை மண்டபத்தின்‌ மீதேறி குறைந்த இடைவெளியில்‌ அருள்மிகு சபாநாயகரை தரிசனம்‌ செய்ய அனுமதிக்கக்‌ கோரி திரு.எம்‌.என்‌.ராதா கிருஷ்ணன்‌ என்பவரால்‌ சென்னை உயர்நீதி மன்றத்தில்‌ தொடரப்பட்ட 1//.2.9447/2022. வழக்கில்‌, 20.04.2022 அன்று பிறப்பிக்கப்பட்ட உத்தரவில்‌, பக்தர்களை அனுமதிப்பது தொடர்பாக, கோவிட்‌ - 19 தற்போதைய நிலை மற்றும்‌ இதர காரணங்களையும்‌ மாவட்ட ஆட்சியர்‌, இந்து சமய அறநிலையத்துறை மற்றும்‌ கோயில்‌ நிர்வாகத்தினர்‌ ஆலோசித்து முடிவு செய்ய உத்தரவிடப்பட்டதன்‌ அடிப்படையில்‌ கடலூர்‌ மாவட்ட ஆட்சித்தலைவரால்‌ அறிக்கை சமர்ப்பிக்கப்பட்டுள்ளது எனவும்‌, இத்திருக்கோயிலானது பஞ்சபூத ஸ்தலங்களில்‌ ஆகாய ஸ்தலமாக விளங்கி வருவதால்‌ உலகெங்கிலும்‌ இருந்து பக்தர்கள்‌ வருகை புரிகின்றனர்‌ எனவும்‌, இத்திருக்கோயிலில்‌ மூலவரே உற்சவராக எழுந்தருள்வது சிறப்பாகும்‌ எனவும்‌, இத்திருக்கோயிலில்‌ அருள்மிகு சபாநாயகர்‌ வீற்றிருக்கும்‌ கனகசபையானது (பொன்னம்பலம்‌) மனித உடலில்‌ இதயம்‌ அமைந்துள்ளதை போன்று சற்று இடப்புறமாக அமைந்துள்ளது எனவும்‌, அவருக்கு முன்னுள்ள படிகள்‌, பஞ்சாச்சர படிகள்‌ எண்றும்‌, சிவமந்திரமான நமசிவாய என்பதை குறிப்பதாகவும்‌, கனகசபை கட்டிடத்தின்‌ தூண்கள்‌, மேற்பலகைகள்‌, குறுக்குபலகைகள்‌, மேலே பதிக்கப்பட்டுள்ள ஓடுகள்‌, அதில்‌ பயன்படுத்தப்பட்ட ஆணிகள்‌ மற்றும்‌ அர்த்தமண்ட‌ அமைப்பு ஆகியவை மனித சுவாச, ரத்த நாளங்கள்‌ மற்றும்‌ உடல்‌: இயக்கங்களாக அமைந்துள்ளதாக மாவட்ட ஆட்சியர் குறிப்பிட்டுள்ளார்.

கொரோனா கால கட்டுப்பாடுகள் நீக்கம்

கொரோனா கால கட்டுப்பாடுகள் நீக்கம்

மேலும்‌, இத்திருக்கோயிலில்‌ உள்ள கனகசபை மண்டபத்தில் பக்தர்கள் அனுமதிக்கப்பட்டு அங்கிருந்து அருள்மிகு சபாநாயகரையும்‌ அருகேயுள்ள சிதம்பர இரகசியத்தையும்‌ தரிசிப்பது நடைமுறையில்‌ இருந்து! வந்துள்ளது எனவும் கோவிட்‌-19 பெருந்தொற்று காரணமாக 'திருக்கோயில்களில்‌ பக்தர்களை அனுமதிப்பதற்கு அரசால்‌ வழங்கப்பட்ட அரசு வழிகாட்டி நெறிமுறைகளின்படி பக்தர்களிடமிருந்து பூஜை பொருட்களை பெறுதல்‌. அமர்ந்து தரிசனம்‌ செய்தல்‌, சாமிகளை தொட்டு தரிசனம்‌ செய்தல்‌ மற்றும்‌ அங்கபிரதட்சனம்‌ செய்தல்‌ ஆகியவை தவிர்க்கப்பட்டு, கோயில்‌ வளாகத்தில்‌ சமூக இடைவெளியுடன்‌ மண்டபத்தில்‌ பக்தர்கள்‌‌ தரிசனம்‌ செய்ய அனுமதிக்கப்பட்டு வந்துள்ளனர்‌ எனவும்‌, தற்போது'கொரோனா தொற்று பெருமளவு குறைந்துள்ளதால்‌ வழிப்பாட்டு தலங்களில்‌ பக்தர்களுக்கு விதிக்கப்பட்ட தடைகள்‌ விலக்கப்பட்டு அனைத்துதிருக்கோயில்களிலும்‌ ஏற்கனவே இருந்த வழிபாட்டு நடைமுறைகள்‌ மீண்டும்‌ தொடரும்‌ நிலையில்‌, சிதம்பரம்‌ அருள்மிகு சபாநாயகர்‌ திருக்கோயிலை நிர்வகித்து வரும்‌ பொது தீட்சிதர்கள்‌ கனகசபை மண்டபத்தின்‌ மீதேறி பக்தர்கள்‌ தரிசனம்‌ செய்ய தடை விதித்து தீர்மானம்‌ நிறைவேற்றியதாகவும்‌, இதனால்‌ பக்தர்கள்‌ தரப்பில்‌ பெரும்‌ ஆட்சேபணைகள்‌ தெரிவிக்கப்பட்டும்‌, பல்வேறு அமைப்புகள்‌ சார்பில்‌ போராட்டங்கள்‌ நடத்தப்பட்டு வருவதாகவும்‌, பக்தர்களிடம்‌ தீட்சிதர்கள்‌ நடந்துக்கொண்ட செயல்பாடு குறித்து குற்றவழக்கு பதிவுசெய்யப்பட்டுள்ளது என்றும்‌ சிதம்பரம்‌ கோட்டாட்சியரால்‌ பேச்சுவார்த்தை நடத்தியபோதிலும்‌ தீட்சிதர்கள்‌ பக்தர்களை கனகசபையில்‌ அனுமதிப்பதில்லை எனவும்‌ மாவட்ட ஆட்சியர்‌ அறிக்கையில்‌ தெரிவிக்கப்பட்டுள்ளதாக ஆணையர்‌ தெரிவித்துள்ளார்‌.

பக்தர்கள் வழிபட அனுமதித்து உத்தரவு

பக்தர்கள் வழிபட அனுமதித்து உத்தரவு

மேலும்‌, சிதம்பரம்‌ வருவாய்‌ கோட்டாட்சியர்‌ மற்றும்‌ கடலூர்‌, இந்து சமய அறநிலையத்துறை உதவி ஆணையர்‌ ஆகியோரால்‌ விசாரணை மேற்கொள்ளப்பட்டு சமர்ப்பிக்கப்பட்ட அறிக்கைகளின்‌ அடிப்படையில்‌, சென்னை உயர்‌ நீதிமன்ற தீர்ப்பின்படி, கோவிட்‌-19க்கு முன்பிருந்த நடைமுறைப்படி ஆகம விதிகளைப்‌ பின்பற்றி கனகசபை மீதேறி பக்தர்கள்‌ தரிசனம்‌ செய்ய மாவட்ட ஆட்சியரால்‌ பரிந்துரைக்கப்பட்டுள்ளதாகவும்‌ தெரிவித்து, கடலூர்‌ மாவட்ட ஆட்சியரது பரிந்துரையை ஏற்றும்‌, திருக்கோயிலில்‌ தொன்றுதொட்டு நடைமுறையில்‌ இருந்து வந்த பழக்க வழக்கத்தின்‌ படியும்‌, பக்தர்களின்‌ கோரிக்கைகளை ஏற்றும்‌ அருள்மிகு சபாநாயகர்‌ திருக்கோயிலின்‌ கனகசபை மீதேறி பக்தர்கள்‌ வழிபட அனுமதித்து உத்தரவு பிறப்பிக்கலாம்‌ என இந்து சமய அறநிலையத்துறை ஆணையர்‌ அரசுக்கு பரிந்துரை செய்துள்ளார்‌.

கனகசபை மிதேறி பக்தர்கள்‌ வழிபட அனுமதி

கனகசபை மிதேறி பக்தர்கள்‌ வழிபட அனுமதி

இந்து சமய அறநிலையத்துறை ஆணையரின்‌ கருத்துருவினை அரசு கவனமுடன்‌ பரிசீலனை செய்தது. பரிசீலனைக்குப்‌ பின்னர்‌, கடலூர்‌ மாவட்டம்‌, சிதம்பரம்‌ வட்டம்‌ மற்றும்‌ நகரில்‌ உள்ள அருள்மிகு சபாநாயகர்‌ (நடராஜர்‌) திருக்கோயிலில்‌ தொன்றுதொட்டு நடைமுறையில்‌ இருந்து வந்த பழக்க வழக்கத்தின்படியும்‌, பக்தர்களின்‌ கோரிக்கைகளை கருத்தில்‌ கொண்டும்‌ அருள்மிகு சபாநாயகர்‌ திருக்கோமிலின்‌ கனகசபை மிதேறி பக்தர்கள்‌ வழிபட அனுமதி வழங்கி அரசு ஆணையிடுகிறது என அந்த அரசாணையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

English summary
Chidambaram Natarajar Temple on the Kanakasabai: (சிதம்பரம் நடராஜர் கோவில் கனகசபை தரிசனம்) The Government of Tamil Nadu has issued an order giving permission to the devotees to worship at the Chidambaram Natarajar Temple on the Kanakasabai. The Government of Tamil Nadu has taken this step after considering the opinion of the Commissioner of Hindu Religious Affairs. Permission has been granted to perform darshan following the rules as per the request of the devotees and the judgment of the Chennai High Court.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X