காட்டுமன்னார்கோயில் தொகுதி- தாமரையை மலர வைக்க தீவிரம் காட்டும் பாஜகவில் இணைந்த விஎம்எஸ் சரவணக்குமார்
சிதம்பரம்: காட்டுமன்னார்கோயில் சட்டசபை தொகுதில் பாஜக வேட்பாளராக போட்டியிட்டால் ஜாதி, மதம் கடந்த ஒரு மக்கள் சேவகராக திகழ்வதால் நிச்சயம் வெற்றி பெறுவேன்; இளையபெருமாள், வள்ளல்பெருமான் ஆகிய தலைவர்களைப் போல மக்களுக்கும் சேவையாற்றுகிற வாய்ப்பையும் பெறுவேன் என்கிறார் அண்மையில் பாஜகவில் இணைந்த வி.எம்.எஸ். சரவணக்குமார்.
காங்கிரஸ் கட்சியில் 35 ஆண்டுகளாக பல்வேறு பொறுப்புகளை வகித்தவர் வி.எம்.எஸ். சரவணக்குமார். 1987-ம் ஆண்டு அண்ணாமலை பல்கலையில் பி.பார்ம் படித்த போது மாணவர் காங்கிரஸ் தலைவராக இருந்தார்.
1991-ல் கடலூர் மாவட்ட சேவாதள காங்கிரஸ் அமைப்பு செயலாளரானார். 1996-ல் தமது 26 வயதில் மங்களூரு சட்டசபை தொகுதியில் காங்கிர்ரஸ் கட்சியின் வேட்பாளராக போட்டியிட்டார். சொற்ப வாக்குகள் வித்தியாசத்தில் 2-ம் இடத்தைப் பிடித்தவர் வி.எம்.எஸ். சரவணக்குமார்.

ஐஎன்டியூசி தேசிய பொதுச்செயலாளர்
2002-ல் தமிழக இளைஞர் காங்கிரஸின் மாநில செயலாளர் தொடங்கி ஐ.என்.டி.யூ.சியின் தேசிய பொதுச்செயலாளர் பதவி வரை பல்வேறு பொறுப்புகளை வகித்தவர் வி.எம்.எஸ்.சரவணக்குமார். இந்த நிலையில்தான் கடந்த சில நாட்களுக்கு முன்னதாக பாரதிய ஜனதா கட்சியின் தலைவர் எல். முருகனை சந்தித்து அந்த கட்சியில் இணைத்து கொண்டார் சரவணக்குமார்.

காட்டுமன்னார்கோவில் பாஜக வேட்பாளர்
தற்போது காட்டுமன்னார்கோயில் சட்டசபை தொகுதி பாஜக வேட்பாளராக களம் காணுவதற்கான தீவிர முயற்சிகளை மேற்கொண்டு வருகிறார். இது தொடர்பாக நாம் சரவணக்குமாரிடம் உரையாடிய போது, பாரதிய ஜனதா கட்சி குறித்து திமுக, காங்கிரஸ், விசிக போன்றவை தவறான பிரசாரம் செய்து வருகின்றன.

வெற்றி வாய்ப்பு அதிகம்
பாரதிய ஜனதா கட்சியின் வேட்பாளராக தாம் போட்டியிட்டால் மிக எளிதாக காட்டுமன்னார்கோயில் தொகுதியில் வெற்றி பெற முடியும். இந்த தொகுதியில் வன்னியர், இஸ்லாமியர்கள், கிறிஸ்தவர்கள் என அனைத்து ஜாதி, மதத்தினரும் இருக்கின்றனர். ஏற்கனவே மக்களுக்கு சேவையாற்றுகிற அமைப்புகளை நடத்தி மக்களின் பேரன்பைப் பெற்றுள்ளேன். பாஜக வேட்பாளராக களமிறங்கினால் என்னை இந்த மண்ணின் மைந்தராக மக்கள் பார்த்து வாக்களிப்பார்கள்.

மக்கள் பணிக்கான தலைவர்
கட்சி, சித்தாந்தத்துக்கு அப்பால் ஒரு நல்ல மக்கள் சேவகராக திகழ வேண்டும் என்பதுதான் என் இலக்கு. தமிழகத்தின் முதுபெரும் அரசியல் தலைவர்களான இளையபெருமாள், வள்ளல்பெருமான் ஆகியோருக்கு பின் இந்த பகுதியில் மக்கள் உரிமைக்கு போராடுகிற மக்கள் நலனுக்கு குரல் கொடுக்கிற உழைக்கிற தலைவர்கள் உருவாகவில்லை.

வெல்லும் நம்பிக்கை
இந்த மக்களுக்கு சேவையாற்றுகிற வாய்ப்பாகவே தேர்தலில் போட்டியிடுவதை பார்க்கிறேன். மக்கள் நலனில் அக்கறையோடு செயல்படுகிறது பாரதிய ஜனதா கட்சி. ஆகையால் பாஜகவில் இணைந்திருக்கிறேன். இந்த தேர்தலில் காட்டுமன்னார்கோயில் தொகுதியில் போட்டியிட பாஜக தலைமை வாய்ப்பு வழங்கும்; அப்படி வாய்ப்பு கிடைத்தால் தமிழகத்தி 20 ஆண்டுகளுக்குப் பின் சட்டசபைக்குள் நுழையும் பாஜக எம்.எல்.ஏ.க்களில் ஒருவராக இருப்பேன் என்கிற நம்பிக்கையும் இருக்கிறது என்கிறார் வி.எம்.எஸ். சரவணகுமார்.

நிச்சயம் வெல்வார்
காட்டுமன்னார்கோவில் தொகுதி வாக்காளர்களிடம் நாம் பேசிய போது, தமிழக பாஜக தலைவர் எல். முருகன் மிக சிறப்பாக செயல்பட்டு வருகிறார். இந்த தேர்தலில் புதுமுகங்கள் நிறைய பேருக்கு வாய்ப்பு கொடுப்பார் என தெரிகிறது. காட்டுமன்னார்கோவில் தொகுதியில் 35 ஆண்டுகளாக பிரதிபலன் எதுவும் பார்க்காமல் மக்கள் சேவையாற்றி வருகிறார் வி.எஸ். சரவணக்குமார். மக்களின் போற்றுதலுக்குரியவராக திகழும் வி.எஸ். சரவணக்குமார் இப்போது பாஜகவில் இணைந்துள்ளார். பாஜக தலைவர் எல். முருகன் தலைமையில் வி.எம்.எஸ். சரவணக்குமார் இணைந்திருப்பது மகிழ்ச்சி. எங்கள் தொகுதியில் வி.எம்.எஸ். சரவணக்குமார் பாஜக வேட்பாளராக நிறுத்தப்பட்டால் நிச்சயம் அமோக வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெறுவார் என்பதில் எந்த சந்தேகமும் இல்லை.

என்ன நன்மைகள்?
பாஜக மிக எளிதாக வெல்லும் வாய்ப்புள்ள தொகுதிகளில் காட்டுமன்னார்கோவில் முக்கியமான ஒன்று. ஆகையால் மக்களின் பேராதரவை பெற்ற வி.எம்.எஸ். சரவணக்குமாரை பாஜக இங்கே வேட்பாளராக அறிவிக்க வேண்டும். பாஜக தலைவர் எல். முருகன் எங்கள் விருப்பத்தை நிறைவேற்றுவார் என எதிர்பார்ப்புடன் இருக்கிறோம். வி.எம்.எஸ். சரவணக்குமார் வெற்றி பெற்றால் இந்த தொகுதி பெரும் வளர்ச்சியை பெறும். இளைஞர்களுக்கு வேலை வாய்ப்பு கிடைக்கும் என பெரும் நம்பிக்கையுடன் காத்திருக்கிறோம் என்றனர்.