சுனிலுக்கு ‘அந்த கும்பல்’ போன் செய்தது ஏன்? - யார் போட்ட திட்டம்? - சிக்கப்போகும் முக்கிய புள்ளி!
கூடலூர்: கொடநாடு கொலை கொள்ளை வழக்கில் கைதான கூலிப்படையினருக்கும், சஜீவன் தரப்பினருக்கும் இடையேயான நெருக்கம் குறித்து போலீசார் தீவிர விசாரணை மேற்கொண்டுள்ளனர்.
சுனில், காரில் சென்ற கும்பலை தப்பிக்க வைத்தது ஏன்? யார் சொல்லி அவர் இதைச் செய்தார் என விசாரணையில் கிடுக்கிப்பிடி கேள்விகள் எழுப்பப்பட்டுள்ளன.
இதனால், விரைவில் பெரிய அரசியல் புள்ளிகள் விசாரணை வளையத்திற்குள் வரலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.
கொடநாடு கொலைக்கும் எனக்கும் எந்த தொடர்பும் இல்லை - மவுனம் கலைந்த மர வியாபாரி சஜீவன்

கொடநாடு கொலை வழக்கு
முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவுக்கு சொந்தமான கொடநாடு பங்களாவில் கடந்த 2017ஆம் ஆண்டு எஸ்டேட் காவலாளி ஓம்பகதூர் கொலை செய்யப்பட்டார். மேலும், கொடநாடு பங்களாவில் ஏராளமான ஆவணங்கள், கொள்ளையடிக்கப்பட்டன.
இந்த வழக்கில் மனோஜ், சயன் உள்ளிட்டோர் கைது செய்யப்பட்டிருந்தனர். இந்த கொலை கொள்ளை சம்பவத்துக்கு மூளையாக செயல்பட்ட முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் கார் ஓட்டுநர் கனகராஜ் சாலை விபத்தில் மர்மமான முறையில் உயிரிழந்தார்.

விசாரணை மீண்டும் தீவிரம்
தி.மு.க ஆட்சிக்கு வந்தபிறகு கொடநாடு கொலை , கொள்ளை வழக்கு விசாரணை மீண்டும் தீவிரமடைந்துள்ளது. சசிகலா, அ.தி.மு.க முன்னாள் எம்.எல்.ஏ ஆறுகுட்டி, அவர் மகன் அசோக், ஆறுகுட்டியின் உதவியாளர் நாராயணசாமி, அ.தி.மு.க பிரமுகர் அனுபவ் ரவி உள்ளிட்டோரிடம் போலிஸார் விசாரணை மேற்கொண்டனர்.
என்ஜினியர் அசோக், மர வியாபாரியும், அ.தி.மு.க பிரமுகருமான சஜீவன் ஆகியோரிடமும் விசாரணை நடைபெற்றது. தொடர்ந்து, சஜீவனின் சகோதரர்கள் சிபி, சுனில் ஆகியோரிடமும் விசாரணை நடந்தது.

உதவியாளரிடம் தொடர் விசாரணை
ஜெயலலிதாவின் உதவியாளராக பணியாற்றிய பூங்குன்றனிடம் ஏற்கனவே 2 முறை போலீசார் விசாரித்தனர். இந்நிலையில், 3-வது முறையாக அவருக்கு சம்மன் அனுப்பி விசாரணை நடத்தப்பட்டது. அவரிடம் கொடநாடு பங்களாவுக்கு அடிக்கடி வந்து சென்றவர்கள் யார் என்பது பற்றி விசாரிக்கப்பட்டுள்ளது.
கொடநாடு வழக்கில் 6-வது குற்றவாளியாக சேர்க்கப்பட்டுள்ள பிஜின்குட்டியின் சகோதரர் மோசசிடம் விசாரிக்க அவருக்கு சம்மன் அனுப்பப்பட்டது. அதன்படி விசாரணைக்கு ஆஜரான மோசஸிடம் ஐ.ஜி. சுதாகர் தலைமையிலான போலீசார் விசாரணை நடத்தினர்.

கபோர்டு தயாரித்தவர்
ஜெயலலிதாவின் கொடநாடு பங்களாவில் கபோர்டுகள் செய்து தந்தவர் சஜீவனின் சகோதரர் சுனில். அவருக்கு இந்த பங்களாவின் முக்கிய அறைகள் பற்றி தெரியும்.
அதுமட்டுமல்லாமல், கொடநாடு கொலை, கொள்ளை நடந்த 2017ம் ஆண்டு ஏப்ரல் 23ஆம் தேதி இரவில் கூடலூர் செக்போஸ்ட்டில் வாகன சோதனையில் ஈடுபட்டிருந்த போலீசார் அந்த வழியாக வந்த காரை நிறுத்தி சோதனை செய்தனர்.
அப்போது அந்த காரில் இருந்தவர்களிடம் போலீசார் விசாரணை நடத்தினர். அப்போது அந்த கும்பலில் ஒருவர் சுனிலை செல்போனில் தொடர்புகொண்டு தெரிவித்துள்ளார்.

வழக்கில் சிக்கிய சுனில்
பின்னர் கூடலூர் செக்போஸ்ட்டுக்கு வந்த சுனில் தனது அரசியல் செல்வாக்கை பயன்படுத்தி அந்த கும்பலை தப்பிக்க வைத்துள்ளார். எனவே இந்த கொள்ளை வழக்கில் அவருக்கு முக்கிய பங்கு இருக்கும் எனச் சந்தேகிக்கப்படுகிறது.
கொடநாடு பங்களாவில் வைக்கப்பட்டிருந்த ஆவணங்கள், சொத்துக்கள் குறித்த விவரம், பங்களாவுக்குள் யாரெல்லாம் வந்தனர் என்பது குறித்து சுனிலிடம் விசாரிக்கப்பட்டுள்ளது.

முக்கிய புள்ளி
சுனில் அந்த காரில் சென்ற கும்பலை தப்பிக்க வைத்தது ஏன்? யார் சொல்லி அவர் இதைச் செய்தார், அந்த கும்பலுக்கும் இவருக்கும் என்ன தொடர்பு எனும் விவரங்கள் தெரியவந்தால் இந்த வழக்கில் பல அரசியல் புள்ளிகள் ஆதாரத்தோடு மாட்டுவார்கள்.
கொடநாடு வழக்கில் விசாரணை தீவிரமடைந்து இறுதிக்கட்டத்தை எட்டியிருப்பதால் விரைவில் அதிர்ச்சி தரும் தகவல்களை எதிர்பார்க்கலாம் என்கின்றனர் விபரமறிந்தவர்கள்.