கடல் கடந்த காதல்: லண்டன் பெண்ணை தமிழ் முறைப்படி கரம் பிடித்த கடலூர் இளைஞர்!
கடலூர்: லண்டனை சேர்ந்த பெண்ணுக்கும் கடலூர் பொறியாளர் ஒருவருக்கும் தமிழ் முறைப்படி திருமணம் நடைபெற்றது.
கடலூர் உண்ணாமலை செட்டி சாவடி பத்மாவதி நகரை சேர்ந்தவர் ராஜாமணி ஓய்வு பெற்ற அரசு ஊழியர். இவரது மனைவி ஈஸ்வரி. இவர்களின் மகன் ரஞ்சித். இவர் பொறியாளர் படிப்பு முடித்து கடந்த சில ஆண்டுகளாக சுவிட்சர்லாந்து நாட்டில் பணிபுரிந்து வருகிறார்.
5 மாவட்டங்களில் வேகமெடுக்கும் கொரோனா தொற்று.. “உடனே டெஸ்ட் பண்ணுங்க” - ராதாகிருஷ்ணன் சொன்னது என்ன?
இந்த நிலையில், லண்டன் நாட்டை சேர்ந்த அன்னாலுய்சா இவர் அந்த நாட்டில் தனது குடும்பத்துடன் வசித்து வந்தார். ரஞ்சித் மற்றும் அன்னாலுய்சா சுவிட்சர்லாந்தில் உள்ள தனியார் கம்பெனியில் வேலை செய்தபோது இவர்களுக்குள் பழக்கம் ஏற்பட்டது.

காதல் மலர்ந்தது
இது நாளடைவில் காதலாக மலர்ந்தது. இதனைத் தொடர்ந்து 2 பேரும் கடந்த சில ஆண்டுகளாக காதலித்து வருகின்றனர். இந்த நிலையில் கடலூர் அடுத்த திருவந்திபுரம் பகுதியில் உள்ள தனியார் திருமண மண்டபத்தில் இரு வீட்டார் சம்மதத்துடன் தமிழ் முறையில் ரஞ்சித்துக்கும், அன்னாலுய்சாவுக்கும் திருமணம் நடைபெற்றது.

பாரம்பரிய முறை
பாரம்பரிய முறைப்படி ரஞ்சித், அன்னாலுய்சாவுக்கு திருமாங்கல்யம் அணிவித்து வேத மந்திரங்கள் முழங்க பெற்றோர்கள் மற்றும் உறவினர்கள் முன்னிலையில் திருமணம் நடைபெற்றது. பின்னர் மணமகன் ரஞ்சித் கூறுகையில், நான் பொறியாளர் பட்டபடிப்பு முடித்து கடந்த பல ஆண்டுகளாக சுவிட்சர்லாந்து நாட்டில் தனியார் நிறுவனத்தில் வேலை செய்து வருகிறேன்.

நல்ல புரிதல்
அப்போது ஒரே நிறுவனத்தில் நானும், அன்னாலுய்சாவும் பணி புரிந்து வந்தோம். அப்போது இருவரும் நல்ல நண்பர்களாக பழகி வந்தோம். பின்னர் நாளடைவில் இருவருக்கும் நல்ல புரிதல் ஏற்பட்டு எங்கள் நட்பு காதலாக மாறியது. இருவரும் நீண்ட வருடங்களாக காதலித்து வந்த நிலையில் இருவீட்டார் சம்மதம் கிடைத்தது.

தமிழர்களின் முறைப்படி திருமணம்
இதையடுத்து தமிழர்களின் முறைப்படி திருமணம் செய்ய வேண்டும் என தீர்மானித்து இருவீட்டு பெற்றோர்களிடம் தொடர்ந்து பேசி வந்தோம். இருவீட்டார் சம்மதம் பெற்று தான் தமிழ் பாரம்பரிய முறைப்படி திருமணம் செய்து கொள்ள வேண்டும் என்ற கட்டுப்பாட்டில் இருவீட்டு பெற்றோர்களிடம் உரிய அனுமதி பெற்று இன்று திருமணம் நடைபெற்று உள்ளது என்றார்.

கணவர் ரஞ்சித்
அன்னாலுய்சா கூறுகையில், நானும் எனது கணவர் ரஞ்சித்தும் பல ஆண்டுகளாக காதலித்து வந்தோம். மேலும் இந்திய கலாச்சாரம் என்னை வெகுவாக கவர்ந்து மிகவும் பிடித்தது. மேலும் தமிழ் பாரம்பரிய முறைப்படி பட்டு வேஷ்டி, பட்டு சேலை மங்கல வாத்தியம் முழங்க திருமணம் நடைபெற்றது.

ரஞ்சித்தை காதலித்தேன்
ரஞ்சித்தை மிகவும் காதலித்து வந்தேன். அவரை திருமணம் செய்து தமிழ் பாரம்பரியத்தை முழுவதுமாக கற்றுக் கொண்டு புரிதல் ஏற்படுத்தி வாழவேண்டும் என்ற எண்ணத்தில் இன்று ரஞ்சித்தை திருமணம் செய்து கொண்டு உள்ளேன். இவ்வாறு கூறினார். இதனைத் தொடர்ந்து மடல் மூலமாக காதல், செல்போன் மூலமாக காதல் இருந்து வந்த நிலையில் கடல் கடந்து காதல் மலர்ந்து தற்போது தமிழ் பாரம்பரியம் பிடித்த காரணத்தினால் பல ஆண்டுகளாக பெற்றோரின் ஒப்புதலுக்கு காத்திருந்து தற்போது ஒப்புதல் பெற்று திருமணம் நடைபெற்றுள்ளது.