கண்ணிமைக்கும் நேரத்தில் ரூ.6 லட்சம் அபேஸ்.. கொள்ளையர்களை தேடும் போலீஸ்
கடலூர்: கடலூரில் பட்டப்பகலில் இருசக்கர வாகனத்தில் வைத்திருந்த 6 லட்சம் ரூபாய் பணத்தை கண்ணிமைக்கும் நேரத்தில் லாவகமாக கொள்ளையடித்துச் சென்ற பலே கொள்ளையர்களை சிசிடிவி காட்சிகளின் அடிப்படையில் காவல்துறையினர் தேடி வருகின்றனர்.
கடலூர் மாவட்டம் குறிஞ்சிப்பாடியை அடுத்த சம்பாரெட்டிபாளையத்தை சேர்ந்தவர் பங்காரு சாமி. விவசாயியான இவர் நேற்று கடலூர் முதுநகரில் உள்ள வங்கியில் 6 லட்சம் ரூபாய் பணத்தை எடுத்துக் கொண்டு கடலூர் அருகே சாவடியில் உள்ள அண்ணன் மகனிடம் பணத்தை கொடுப்பதற்காக இருசக்கர வாகனத்தில் வந்துள்ளார்.
தமிழகத்தில் 5 நாட்களுக்கு மழை இருக்கு - சென்னையில் சாரல் மழைதான்
6 லட்சம் ரூபாய் பணத்தை இருசக்கர வாகனத்தின் இருக்கையின் கீழ் உள்ள பெட்டியில் வைத்து வந்துள்ளார். அப்போது கடலூர் திருப்பாதிரிப்புலியூர் வண்டிப்பாளையம் சாலையில் உள்ள ஒரு பேக்கரி கடை வாசலில் இரு சக்கர வாகனத்தை நிறுத்திவிட்டு இனிப்பு வாங்கினார்.

ரூ.6 லட்சம் கொள்ளை
திரும்பி வந்து பார்த்தபோது இருசக்கர வாகனம் இருக்கையின் லாக் உடைந்திருந்தது. அதனைத் திறந்து பார்த்தபோது 6 லட்சம் பணம் இல்லாததால் அதிர்ச்சி அடைந்த சத்தம் போட்டார். இதுகுறித்து திருப்பாதிரிப்புலியூர் காவல் நிலையத்தில் பங்காருசாமி புகார் அளித்ததன் பேரில் காவல்துறையினர் பேக்கரி கடையில் பொருத்தப்பட்டிருந்த சிசிடிவி கேமரா பதிவுகளை ஆய்வு செய்தனர்.

லாக்கரை உடைத்துக் கொள்ளை
அதில் பங்காருசாமி இருசக்கர வாகனத்தை நிறுத்திய சில நிமிடங்களில் இரு வாலிபர்கள் பல்சர் பைக்கில் வந்து இறங்கினார் ஒருவர் இரு சக்கர வாகனத்தின் அருகே கீழே அமர்ந்து லாக்கரை உடைத்து பணத்தை எடுத்து சென்றது பதிவாகியுள்ளது. குறிப்பாக இருசக்கர வாகனத்தில் இருந்து சில அடி தூரத்தில் பங்காரு சாமி இருந்தார் ஆனால் அவர் அருகில் நின்றிருந்த மற்றொரு நபர் கைலியை கழட்டி கட்டுவதுபோல் மறைத்து நின்று கொண்டது கேமராவில் பதிவாகியுள்ளது.

கொள்ளையர்கள் குறித்து விசாரணை
பங்காரு சாமி வங்கியில் பணம் எடுப்பதை நோட்டமிட்ட மூவரும் அதைப் பின்தொடர்ந்து வந்து இந்த துணிகர சம்பவத்தை அரங்கேற்றி இது தெரியவந்தது. கண்காணிப்பு கேமராவில் பதிவான காட்சிகளின் அடிப்படையில் திருப்பாதிரிப்புலியூர் காவல்துறையினர் பணத்தை திருடி தப்பிச் சென்ற மூன்று நபர்களையும் தேடி வருகின்றனர்.

பொதுமக்கள் கோரிக்கை
பட்டப்பகலில் பொதுமக்கள் நடமாட்டம் மிகுந்த பகுதியில் , வாகனத்தின் உரிமையாளர் அருகில் நிற்கும்போதே 6 லட்சம் ரூபாய் பணத்தை மர்ம நபர்கள் கொள்ளையடித்துச் சென்ற சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இந்நிலையில் கடலூர் மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் கடந்த சில நாட்களாகவே கொள்ளை, வழிப்பறி போன்ற சம்பவங்கள் அதிகமாக நடைபெற்று வருவதாகவும், குற்ற சம்பவங்களை தடுக்கும் வகையில் போலீசார் ரோந்து பணியில் ஈடுபட வேண்டும் என அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.