பேயோட்ட வந்த பெண்ணுக்கு பாலியல் தொல்லை.. கைதான தர்கா நிர்வாகி.. காவல் நிலையத்திலிருந்து எஸ்கேப்!
கடலூர்: விருத்தாசலம் அருகே பெண்ணாடம் கிராமத்தில் பேய் ஓட்டச் சென்ற பெண்ணிடம் பாலியல் அத்துமீறலில் ஈடுபட்ட புகாரில் கைதாகி தப்பிச்சென்ற தர்கா நிர்வாகியை போலீசார் தேடி வருகின்றனர்.
கடலூர் மாவட்டம் விருத்தாசலம் அடுத்த திட்டக்குடியைச் சேர்ந்த திருமணமான 22 வயது இளம் பெண் அடிக்கடி உடல்நலம் சரியில்லாமல் அவதிப்பட்டு வந்துள்ளார். மருத்துவமனைக்கு சென்றும் குணமடையாததால் பெண்ணுக்கு பேய் பிடித்திருக்கலாம் என அக்கம் பக்கத்தினர் கூறி இருக்கின்றனர். இதிலிருந்து குணமடைய பெண்ணாடத்தில் உள்ள தர்காவுக்கு செல்லுமாறும் பெண்ணிடம் ஊர் மக்கள் பரிந்துரைத்து உள்ளனர்.

இதனை தொடர்ந்து அந்த பெண் அண்மையில் உறவினர்களுடன் தர்காவுக்கு சென்று இருக்கிறார். அங்கிருந்த தர்கா நிர்வாகி அப்துல் கனி (54) என்பவரிடம் பெண்ணின் நிலை குறித்து உறவினர்கள் தெரிவித்து உள்ளனர். இதையடுத்து உறவினர்களை வெளியே நிற்க வைத்துவிட்டு பெண்ணை மட்டும் அழைத்துச் சென்றுள்ளார் அப்துல் கனி. சிறிது நேரம் கழித்து வெளியே வந்த அந்த பெண் பேய் ஓட்டுவதாகக் கூறி அப்துல் கனி தன்னிடம் பாலியல் அத்துமீறலில் ஈடுபட்டதாக உறவினர்களிடம் தெரிவித்து உள்ளார்.
உல்லாச வீடியோவை காட்டி.. 6 மாதங்களாக 22 வயது பெண் பலாத்காரம்.. திமுக நிர்வாகிகள் உள்பட 8 பேர் கைது
ஆத்திரமடைந்த உறவினர்கள் அப்பெண்ணை மீட்டு, அப்துல் கனியை பிடித்து பெண்ணாடம் காவல் நிலையத்தில் ஒப்படைத்தனர். இதுதொடர்பாக அளிக்கப்பட்ட புகாரின் அடிப்படையில் பெண்ணாடம் போலீசார் அப்துல் கனி மீது வழக்குப்பதிவு செய்தனர். இதனிடையே காவல் நிலையத்தில் வைக்கப்பட்டிருந்த அப்துல் கனி அங்கிருந்து தப்பிச்சென்றதால் பரபரப்பு ஏற்பட்டது. இதனை தொடர்ந்து போலீசார் வழக்குப்பதிவு செய்து தப்பிச் சென்று தலைமறைவான தர்கா நிர்வாகி அப்துல் கனியை தீவிரமாக தேடி வருகின்றனர்.