ரம்ஜான் பண்டிகை நாளில் ஊரடங்கு.. வீட்டில் தொழுக உத்தரவு - மத்திய பிரதேசத்தின் கார்கோனில் கட்டுப்பாடு
போபால்: ராமநவமி கலவரம் நடந்து வீடுகள் இடிக்கப்பட்ட மத்திய பிரதேசத்தின் கார்கோன் மாவட்டத்தில் ரம்ஜான் பண்டிகைக்கு வாய்ப்புள்ள நாட்களான மே 2 மற்றும் 3 ஆகிய தேதிகளில் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டு இருக்கிறது.
கடந்த மாதம் 10 ஆம் தேதி ராம நவமி பண்டிகையின்போது நாடு முழுவதும் பல்வேறு மாநிலங்களில் ராம நவமி ஊர்வலங்கள் இந்துத்துவ அமைப்பினரால் நடத்தப்பட்டது.
அப்போது மத்திய பிரதேசம், உத்தரப்பிரதேசம், கர்நாடகா, ஜார்க்கண்ட், மேற்கு வங்கம், பீகார், அரியானா, ராஜஸ்தான் உள்ளிட்ட பல மாநிலங்களில் மத மோதல்கள் வெடித்தன.
இலங்கைக்கு மத்திய அரசு உதவி செஞ்சது ஏன் தீர்மானத்துல இல்லை? முதல்வர் ஸ்டாலினுக்கு அண்ணாமலை கேள்வி

புல்டோசரில் இடிக்கப்பட்ட வீடுகள்
குறிப்பாக மத்திய பிரதேசத்தின் கார்கோன் மாவட்டத்தில் ராம நவமி ஊர்வலம் சென்றவர்கள் அங்கிருந்த மசூதிகள், இஸ்லாமியர்கள் குடியிருப்புகளில் தாக்குதல் நடத்தினர். இதில் பலர் படுகாயமடைந்தனர். ஆனால், ஊர்வலத்தின்போது இஸ்லாமியர்கள் கல்வீசியதாக கூறி அவர்களின் விடுகளை ஆக்கிரமிப்புகள் என்று சொல்லி புல்டோசரை கொண்டு இடிக்கப்பட்டன.

ரம்ஜான் பண்டிகை
இந்த நிலையில், ரமலான் நோன்பு நிறைவடைந்து நாளை அல்லது மே 3 ஆம் தேதி இஸ்லாமியர்கள் ரம்ஜான் பண்டிகையை கொண்டாட உள்ளனர். மத்திய பிரதேச மக்களும் பிரச்சனைகளை ஒதுக்கிவைத்துவிட்டு ரம்ஜானை மகிழ்ச்சியோடு கொண்டாட தயாராகி வரும் நிலையில், கார்கோன் மாவட்ட ஆட்சியர் பிறப்பித்துள்ள உத்தரவு மக்களை அதிர்ச்சியடைய வைத்துள்ளது.

ஊரடங்கு உத்தரவு
மோதல்களை தவிர்க்க மே 2 மற்றும் மே 3 ஆம் தேதி கார்கோன் மாவட்டம் முழுவதும் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்படும் என கூடுதல் மாவட்ட ஆட்சியர் சுமெர் சிங் முஜல்டா உத்தரவிட்டு உள்ளார். இதுகுறித்து தெரித்துள்ள அவர், "ஈத் தொழுகையை வீடுகளில் இஸ்லாமியர்கள் நிறைவேற்றிக்கொள்ள வேண்டும். அதேபோல் அக்ஷய் திருதி மற்றும் பரசுராம் ஜெயந்தி ஊர்வலங்கள் செல்லவும் அனுமதிக்கப்படாது." என தெரிவித்துள்ளார்.

கடைகள் திறக்கப்படும்
ஊரடங்கு தொடர்பான அறிவிப்புகள் கடைகளுக்கு தெரிவிக்கப்பட்டுவிட்டதாக கூறிய அவர், கடைகள் திறந்திருக்க வேண்டும் எனவும், தேர்வுகளுக்கு செல்லும் மாணவர்களுக்கு மட்டும் அனுமதிச் சீட்டு வழங்கப்படும் என்றும் அவர் கூறியுள்ளார். சூழலுக்கு ஏற்ப உத்தரவுகள் மாற்றியமைக்கப்படும் எனவும் கார்கோன் கூடுதல் மாவட்ட ஆட்சியர் தெரிவித்து இருக்கிறார்.