விறுவிறுப்படையும் குடியரசுத் தலைவர் தேர்தல்.. தமிழ்நாட்டை சேர்ந்தவர் உட்பட 11 பேர் வேட்புமனு
டெல்லி: குடியரசுத் தலைவர் தேர்தல் வேட்புமனுத் தாக்கல் நேற்று தொடங்கிய நிலையில் தமிழ்நாட்டை சேர்ந்தவர் உட்பட 11 பேர் வேட்புமனுத் தாக்கல் செய்து உள்ளனர்.
இந்திய குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்தின் பதவிக்காலம் அடுத்த மாதத்துடன் நிறைவடைகிறது.
இதனை தொடர்ந்து வரும் ஜூலை 18 ஆம் தேதி நாட்டின் 15 வது குடியரசுத் தலைவரை தேர்வு செய்வதற்கான தேர்தல் நடைபெறும் என தேர்தல் ஆணையம் கடந்த 9 ஆம் தேதி அறிவித்தது.
காங்கிரஸ் என்ன நினைக்கிறது? நைசாக கேட்ட பிரதமர் மோடி - குடியரசுத் தலைவர் தேர்தல் விசயமாகதான்

பாஜக தீவிரம்
தேர்தல் ஆணையத்தின் அறிவிப்பை தொடர்ந்து குடியரசுத் தலைவர் வேட்பாளரை தேர்வு செய்வதற்கான முயற்சியில் பாஜக முழு மூச்சாக இறங்கி இருக்கிறது. கூட்டணி கட்சிகள், நட்பு கட்சிகளிடம் இதுகுறித்து பேச்சுவார்த்தை நடத்தி வரும் பாஜக, மத்திய அரசு இனி வரும் காலங்களில் கொண்டு வரும் முக்கிய மசோதாக்களை ஒருமனதாக ஏற்கும் வகையில் தங்களுடன் ஒத்த கொள்கை கொண்டவரை குடியரசுத் தலைவராக நியமிக்க திட்டமிட்டு இருக்கிறது.

எதிர்க்கட்சிகள் கூட்டம்
இந்த நிலையில், மேற்கு வங்க முதலமைச்சர் மம்தா பானர்ஜி திமுக, காங்கிரஸ் உள்ளிட்ட 22 கட்சித் தலைவர்களுக்கு குடியரசுத் தலைவர் தேர்தல் தொடர்பாக பேச்சுவார்த்தை நடத்த அழைப்பு விடுத்தார். நேற்று டெல்லியில் நடைபெற்ற இந்த கூட்டத்தில் 13 கட்சிகள் பங்கேற்றன. காங்கிரஸ் சார்பில் மல்லிகார்ஜுன கார்கே, ஜெய்ராம் ரமேஷ், ரந்தீப் சிங் சுர்ஜேவாலா, திமுக சார்பில் டி.ஆர்.பாலு, மதசார்பற்ற ஜனதா தளம் சார்பில் தேவகவுடா, குமாரசாமி, சிவசேனா சார்பில் பிரியங்கா சதுர்வேதி உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.

சரத் பவார் மறுப்பு
இதில் தேசியவாத காங்கிரஸ் தலைவர் சரத் பவாரை குடியரசுத் தலைவர் வேட்பாளராக நிறுத்த பலரும் விருப்பம் தெரிவித்தனர். ஆனால், அவர் அதற்கு திட்டவட்டமாக மறுப்பு தெரிவித்தார். எனவே மேற்கு வங்க முன்னாள் ஆளுநரும், கடந்த முறை குடியரசு துணைத் தலைவர் தேர்தலில் போட்டியிட்டவருமான கோபாலகிருஷ்ண காந்தியை குடியரசுத் தலைவர் வேட்பாளராக தேர்ந்தெடுக்க எதிர்க்கட்சிகள் விருப்பம் தெரிவித்ததாக கூறப்படுகிறது.

11 பேர் மனுத்தாக்கல்
இதற்கிடையே குடியரசுத் தலைவர் தேர்தலுக்கான வேட்புமனுத் தாக்கல் நேற்று தொடங்கியது. முதல் நாளிலேயே 11 பேர் தங்கள் வேட்புமனுவை மாநிலங்களவை தலைமை செயலாளரிடம் தாக்கல் செய்தனர். இவர்கள் தமிழ்நாடு, டெல்லி, மகாராஷ்டிரா, ஆந்திரா ஆகிய மாநிலங்களை சேர்ந்தவர்களாவர். மேலும் ஒருவரின் வேட்புமனு நிராகரிக்கப்பட்டு உள்ளது. வேட்புமனுவை வாபஸ் பெருவதற்கான கடைசி நாள் ஜூலை 2 ஆம் தேதி என்பது குறிப்பிடத்தக்கது.