கேம் ஓவர்! உச்ச நீதிமன்றத்தின் ஒரே உத்தரவால்..எடப்பாடிக்கு 3 ஸ்வீட் நியூஸ்..கோர்டில் நடந்தது என்ன?
டெல்லி: உச்ச நீதிமன்றத்தில் அதிமுக பொதுக்குழு தொடர்பாக இன்று நடந்த வழக்கில் வாதங்கள் அனல் பறந்தன. அதிமுக பொதுக்குழுவில் தடை விதிக்க முடியாது, இது தொடர்பாக எந்த உத்தரவையும் பிறப்பிக்க முடியாது, என்று உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. எடப்பாடி பழனிசாமி தரப்பிற்கு இதனால் 3 நல்ல செய்திகள் கிடைத்துள்ளன.
அதிமுக பொதுக்குழுவில் 23 தீர்மானங்கள் மற்றும் நிறைவேற்ற வேண்டும் என்று சென்னை உயர் நீதிமன்றம் கடந்த 23ம் தேதி உத்தரவிட்டது. இந்த உத்தரவு காலாவதியாகிவிட்டது என்று உயர் நீதிமன்றம் கூறி உள்ளது.
இருந்தாலும், 23 தீர்மானங்களுக்கு மட்டுமே உயர் நீதிமன்றம் அனுமதி அளித்ததற்கு எதிர்ப்பு தெரிவித்து எடப்பாடி பழனிசாமி ஆதரவு நிர்வாகிகள் நத்தம் விசுவநாதன் உள்ளிட்ட 10 நிர்வாகிகள் உச்ச நீதிமன்றத்தில் வழக்கு தொடுத்தனர்.
தீர்ப்பால் பின்னடைவு.. 'அடுத்த மூவ்’க்கு ரெடியான ஓபிஎஸ்.. நடக்காது.. தொண்டர்களை வைத்து மெகா பிளான்!

விசாரணை
இந்த வழக்குதான் இன்று உச்ச நீதிமன்றத்தில் விசாரணைக்கு வந்தது. நீதிபதிகள் தினேஷ் மஹேஸ்வரி, கிருஷ்ண முராரி ஆகியோர் இந்த வழக்கை விசாரித்தனர். எடப்பாடி பழனிச்சாமி சார்பாக மூத்த வழக்கறிஞர் சிஎஸ் வைத்தியநாதன் ஆஜரானார். கேவியட் மனு தாக்கல் செய்த ஓ பன்னீர்செல்வம் சார்பாக மணிந்தார் சிங் ஆஜரானார்.

எடப்பாடி தரப்பு வாதம் என்ன?
எடப்பாடி தரப்பு: 23 தீர்மானங்களுக்கு மட்டுமே உயர் நீதிமன்றம் அனுமதி அளித்தது தவறு. கட்சி விவகாரங்களில் நீதிமன்றம் தலையிட முடியாது. அதோடு 23 தீர்மான பொதுக்குழு தொடர்பாக உயர் நீதிமன்றத்தில் உள்ள அவமதிப்பு வழக்கிற்கும் இடைக்கால தடை விதிக்க வேண்டும்.
நீதிபதிகள்: உயர் நீதிமன்றத்தில் நிலுவையில் உள்ள வழக்கில் நாங்கள் தலையிட விரும்பவில்லை .
ஓபிஎஸ் தரப்பு: ஒருங்கிணைப்பாளர், இணை ஒருங்கிணைப்பாளர் பதவி இன்னும் உள்ளது. செப்டம்பர் வரை பதவிக்கு கால அவகாசம் உள்ளது. அதை மாற்ற முயற்சி செய்கிறார்கள்.

என்ன வாதம்
நீதிபதிகள்: கட்சிக்குள் என்ன செய்கிறார்கள்.. என்ன முடிவு எடுக்கிறார்கள் என்பதில் நாங்கள் கருத்து தெரிவிக்க முடியாது. உட்கட்சி விவகாரங்களில் உச்ச நீதிமன்றம் தலையிட முடியாது.
ஓபிஎஸ் தரப்பு: 23 தீர்மானங்களை நிறைவேற்ற உயர் நீதிமன்றம் உத்தரவிட்டது. ஆனால் அதை பொதுக்குழு பின்பற்றவில்லை.
நீதிபதிகள்: 23 தீர்மானங்களை மட்டுமே பொதுக்குழு நிறைவேற்ற வேண்டும் என்று நாங்கள் உத்தரவிட முடியாது. பொதுக்குழு விவகாரங்களில் நாங்கள் தலையிட முடியாது,
ஓபிஎஸ் தரப்பு: ஆனால் இந்த விவகாரம் சட்ட ரீதியாக தவறு. அதனால் நீதிமன்ற தலையீடு அவசியம்.

நீதிபதிகள் உத்தரவு
நீதிபதிகள்: இது உட்கட்சி விவகாரம்.. நீங்கள் பேசி தீர்த்துக்கொள்ளுங்கள். நாங்கள் இதில் எந்த உத்தரவையும் பிரிக்க முடியாது. எங்களின் நீதி கைகளை எல்லா இடங்களிலும் நீட்ட நாங்கள் தயாராக இல்லை.
ஓபிஎஸ் தரப்பு: 5 வருடத்திற்கு இருக்கும் பதவியை இடையில் நீக்க பார்க்கிறார்கள்.
நீதிபதிகள்: கேவியட் மனு தாக்கல் செய்தவரும், மனுதாரர்களும் பொதுக்குழு உறுப்பினர்கள்தான். இதை ஏன் நீங்கள் பொதுக்குழுவில் பேசி தீர்த்துக்கொள்ள கூடாது. ஏன் இங்கே கொண்டுவருகிறீர்கள் ?
ஓபிஎஸ் தரப்பு: இரட்டை தலைமையை நீக்கி ஒற்றை தலைமை கொண்டு வர பார்க்கிறார்கள். அது சட்டப்படி தவறு என்பதால் நீதிமன்றத்தை நாடு உள்ளோம்.

நீதிபதிகள் கேள்வி
நீதிபதிகள்: அதை நீங்கள் பொதுக்குழுவில்தான் தீர்மானிக்க வேண்டும்.
ஓபிஎஸ் தரப்பு: இங்கே நீதிபதிகள் பிறப்பிக்கும் உத்தரவு மற்ற வழக்குகளில் சிக்கலை ஏற்படுத்த கூடாது. மற்ற வழக்குகளுக்கு பிரச்னையை ஏற்படுத்த முடியாது.
எடப்பாடி தரப்பு: கட்சியில் 2 சதவிகிதம் கூட ஆதரவு இல்லாத நபர் கட்சி ஜனனயகத்திற்கு எதிராக செயல்படுகிறார்.
நீதிபதிகள்: நாங்கள் பொதுக்குழுவிற்கு தடை விதிக்க முடியாது. அடுத்த மீட்டிங் நடக்கலாம்.
நீதிபதிகள்: அதிமுக பொதுக்குழு விவகாரம் தொடர்பாக சென்னை உயர் நீதிமன்ற இரு நீதிபதிகள் பிறப்பித்த உத்தரவுக்கு இடைக்கால தடை விதிக்கிறோம், என்று நீதிபதிகள் உத்தரவிட்டனர்.

3 குட் நியூஸ்
இந்த உத்தரவு காரணமாக எடப்பாடி பழனிசாமி தரப்பிற்கு 3 விதமான நல்ல செய்திகள் கிடைத்துள்ளன.
1 - பொதுக்குழுவிற்கு - உச்ச நீதிமன்றம் தடை விதிக்கவில்லை.
2 - பொதுக்குழுவில் நீதிமன்றம் தலையிட கூடாது என்று உச்ச நீதிமன்றம் கூறியுள்ளது. இதனால் தனி நீதிபதியும் உயர் நீதிமன்ற விசாரணையில் இன்று தடை விதிக்க வாய்ப்பு இல்லை. இந்த உத்தரவை எடப்பாடி தரப்பு இன்று உயர் நீதிமன்றத்தில் எடுத்துக்காட்டாக காட்டும்.
3- 23 தீர்மானங்கள் மட்டும் நிறைவேற்ற வேண்டும் என்ற சென்னை உயர் நீதிமன்ற இரு நீதிபதிகள் பிறப்பித்த உத்தரவுக்கு இடைக்கால தடை விதிக்கப்பட்டுள்ளது. இதனால் பொதுக்குழுவில் ஜூலை 11ம் தேதி என்ன தீர்மானம் வேண்டுமானாலும் நிறைவேற்ற முடியும்.

தேவையில்லை
கட்சி விவகாரங்களில் கோர்ட் தலையிடாது என்று உச்ச நீதிமன்றம் கூறி உள்ளதால், இனி அவமதிப்பு வழக்கிலும் எடப்பாடிக்கு எதிராக தீர்ப்பு வர வாய்ப்பு குறைவு. அந்த வழக்கு இப்போது ஒருவகையில், தற்போது அர்த்தமற்றதாகிவிடும். அதோடு தற்போது அதிமுக பொதுக்குழுவில் தனித்தீர்மானம் நிறைவேற்றி எடப்பாடி பழனிசாமி இடைக்கால பொதுச்செயலாளர் ஆக முடியும்.