சிஏஏ-வை நம்பி இந்தியா வந்த 800 பாகிஸ்தான் இந்துக்கள்... குடியுரிமை கிடைக்காமல் நாடு திரும்பிய அவலம்
டெல்லி: குடியுரிமை திருத்தச் சட்டத்தின் மூலம் குடியுரிமை கிடைக்காத்தால் இந்தியாவை நம்பி வந்த 800 இந்து மக்கள் மீண்டும் பாகிஸ்தானுக்கே திரும்பிச் சென்று இருக்கின்றனர்.
இதுகுறித்து இந்தியாவில் உள்ள பாகிஸ்தானிய சிறுபான்மையினரின் உரிமைகளுக்காக குரல் கொடுத்து வரும் அமைப்பான சீமந்த் லோக் சங்கதன் (SLS) அறிக்கை வெளியிட்டு இருக்கிறது.
அதில், "பாகிஸ்தானிலிருந்து ராஜஸ்தானுக்கு வந்த சுமார் 800 இந்துக்கள், மதத் துன்புறுத்தலின் அடிப்படையில் இந்தியக் குடியுரிமை கோரி விண்ணப்பித்து இருந்தனர்.

800 பாகிஸ்தான் இந்துக்கள்
தங்களுக்கு இந்திய குடியுரிமை கிடைக்கும் என பல ஆண்டுகளாக காத்திருந்தும் கிடைக்காததால் 2021 ஆம் ஆண்டு ஏமாற்றத்துடன் அவர்கள் பாகிஸ்தானுக்கே திரும்பிச் சென்றனர். அவர்களின் குடியுரிமை விண்ணப்பத்தில் எந்த முன்னேற்றமும் இல்லை. இந்திய அரசுத்தரப்பில் இதற்காக எந்த முயற்சியும் எடுக்கப்படவில்லை என்பதை அறிந்ததற்கு பிறகே 800 பேரும் பாகிஸ்தானுக்குத் திரும்பினர்.

பாகிஸ்தான் ஊடகங்கள்
பாகிஸ்தான் திரும்பி அந்த 800 இந்து மக்களை வைத்து பாகிஸ்தான் ஊடகங்களில் இந்தியாவை விமர்சித்து வருகின்றனர். இவர்களை வைத்து இந்தியாவின் குடியுரிமை திருத்தச் சட்டத்தை அந்நாட்டு ஊடகங்கள் விமர்சித்தனர். அவர்கள் அனைவரையும் ஊடகங்களுக்கு முன்பாக அணிவகுத்து நிறுத்தி, இந்தியாவில் மோசமாக நடத்தப்பட்டதாகக் கூற கட்டாயப்படுத்தப்படுகிறார்கள்" என்று குறிப்பிடப்பட்டுள்ளது.

ஆன்லைன் விண்ணப்பம்
இந்திய உள்துறை அமைச்சகம் 2018 ஆம் ஆண்டு இணையவழி குடியுரிமை விண்ணப்ப செயல்முறையைத் தொடங்கியது. இதற்காக 7 மாநிலங்களில் உள்ள 16 ஆட்சியர்கள் தனியாக நியமிக்கப்பட்டனர். பாகிஸ்தான், ஆப்கானிஸ்தான் மற்றும் வங்கதேசத்தைச் சேர்ந்த இந்துக்கள், கிறிஸ்தவர்கள், சீக்கியர்கள், பார்சிகள், ஜெயின் மற்றும் பௌத்தர்களுக்கு குடியுரிமை வழங்குவதற்கான விண்ணப்பங்கள் பெறப்பட்டன.

காலாவதியான பாஸ்போர்ட்டுகள்
மே 2021 ஆம் ஆண்டில் குடியுரிமை சட்டத்தின் கீழ் 6 மதங்களை சேர்ந்த விண்ணப்பதாரர்களுக்கு குடியுரிமைச் சான்றிதழ் வழங்குவதற்கு குஜராத், சத்தீஸ்கர், ராஜஸ்தான், அரியானா மற்றும் பஞ்சாப் ஆகிய 5 மாநிலங்களில் உள்ள மேலும் 13 மாவட்ட ஆட்சியர்களுக்கு உள்துறை அமைச்சகம் அதிகாரம் அளித்தது. இதுகுறித்த முழு செயல்முறையும் ஆன்லைனில் இருந்தாலும், காலாவதியான பாகிஸ்தானிய பாஸ்போர்ட்டுகளை இணையதளம் ஏற்காது.
பாகிஸ்தான் வேண்டாமென்று இந்தியாவில் தஞ்சம் புகுந்தவர்களும் டெல்லியில் உள்ள பாகிஸ்தான் தூதரகத்திற்கு விரைந்து சென்று தங்களுடைய பாஸ்போர்ட்டை புதுப்பித்துக் கொள்ள வேண்டிய நிர்பந்தம் ஏற்பட்டுள்ளது. புதுப்பிக்காவிட்டால் இந்திய குடியுரிமை கிடைக்காது என்ற நிலை ஏற்பட்டு உள்ளது.

அதிக பணம் தேவை
இதுகுறித்து ஜோத்பூரை சேர்ந்த சிங் என்பவர் கூறுகையில், "பத்து பேர் கொண்ட ஒரு இந்து குடும்பம் பாகிஸ்தான் உயர் தூதரகத்தில் பாஸ்போர்ட்களை புதுப்பிக்க இந்திய மதிப்பில் ₹1 லட்சத்துக்கும் மேல் கட்டணம் வழங்க வேண்டிய நிர்பந்தம் ஏற்பட்டுள்ளது. கடும் நிதி நெருக்கடிகளுக்கு மத்தியில் பணம் செலவழித்து இந்தியாவை நம்பி வந்துள்ள பாகிஸ்தான் மக்கள் பாஸ்போர்ட்டை புதுப்பிக்க செலவிட தேவைப்படுவது பெரும் தொகை. வேறு நாட்டிலிருந்து வந்தவர்கள் டெல்லிக்கு சென்று இவ்வளவு பெரிய தொகையை திரட்டுவது சாத்தியமில்லை. ஆன்லைனில் விண்ணப்பிக்கும் வசதி இருக்கும் நிலையில் நேரில் சென்று விண்ணப்பங்களை வழங்கவும் நிர்பந்திக்கப்படுகின்றனர்." என்றார்.