டெல்லி அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Oneindia App Download

நடிகரின் கிளர்ச்சிப் பேச்சு.. எச்சரித்த விவசாய சங்கங்கள் - டிராக்டர் பேரணி கலவர பின்னணி

Google Oneindia Tamil News

டெல்லி: விவசாயிகளின் டிராக்டர் பேரணியில் வன்முறை நிகழ நடிகர் தீப் சித்து மற்றும் ஆர்வலர் லகா சிதானா மட்டுமே காரணம் என்று விவசாய சங்கங்கள் குற்றம் சாட்டியுள்ளன.

புதிய விவசாய சட்டங்களுக்கு எதிர்ப்புத் தெரிவித்து ஹரியானா மற்றும் பஞ்சாப் விவசாயிகள் 2 மாதத்திற்கு மேலாக டெல்லியில் போராட்டம் நடத்தி வரும் நிலையில், குடியரசு தினமான நேற்று டெல்லிக்குள் டிராக்டர் பேரணியை நடத்துவதற்கு போலீசாரிடம் அனுமதி பெற்றிருந்தனர்.

ஆனால், விவசாயிகளின் ஒரு பிரிவினர் தங்கள் டிராக்டர்களை பயன்படுத்தி, தடுப்புகளை இடித்து தள்ளி டெல்லி செங்கோட்டை பகுதிக்குள் நுழைந்து, அங்கு சீக்கியர்களின் புனிதக் கொடியை ஏற்றிய சம்பவம், நாடு முழுவதும் பரபரப்பை ஏற்படுத்தியது.

Actor Deep Sidhu, activist Lakha Sidhana major role in instigating protesters sources

சில விவசாயிகள் கையில் வாள் உள்ளிட்ட ஆயுதங்களைக் கொண்டு போலீசார் மீது தாக்குதல் நடத்த முயன்ற சம்பவங்களும் அரங்கேறின.

இதைத் தொடர்ந்து, விவசாயிகள் உடனடியாக சிங்கு எல்லைக்குத் திரும்ப வேண்டும் என்றும், இந்த விரும்பத்தகாத மற்றும் ஏற்றுக்கொள்ள முடியாத நிகழ்வுகளை நாங்கள் கண்டிக்கிறோம், அதற்காக வருந்துகிறோம் என்று விவசாய சங்கம் சார்பில் தெரிவிக்கப்பட்டது.

மேலும், விவசாயிகள் பேரணியில் வன்முறை ஏற்பட்டதையடுத்து டெல்லியில் நேற்று நள்ளிரவு முதல் 144 தடை உத்தரவு அமல்படுத்தப்பட்டுள்ளது. நாடாளுமன்ற கூட்டத்தொடர் முடியும் வரை 144 தடை உத்தரவு அமலில் இருக்கும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

வன்முறைக்கு காரணம்

இந்நிலையில், டெல்லியில் விவசாயிகளின் டிராக்டர்கள் போராட்டம் சீர்குலைந்து, அங்கே வன்முறை நிகழக் காரணம், பாஜக ஆதரவு நடிகர் தீப் சித்துதான் என பல்வேறு விவசாய சங்க தலைவர்கள் குற்றம்சாட்டி உள்ளனர். அதுமட்டுமின்றி, ஆர்வலர் லகா சிதானாவும் இந்த வன்முறைக்கு முக்கிய காரணம் என்று குற்றச்சாட்டு எழுந்துள்ளது.

இதுகுறித்து வெளியான தகவலின்படி, 'நடிகர் தீப் சித்துவும், லகா சிதானாவும் இரண்டு நாட்களுக்கு முன்பே டெல்லிக்கு வந்து, சிங்கு எல்லையில் போராட்டத்தில் ஈடுபட்டிருந்த விவசாயிகள் மத்தியில் கிளர்ச்சியை ஏற்படுத்தும் வகையில் உரையாற்றியதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

யார் இந்த தீப் சித்து?

நடிகரும் பாஜக எம்.பியுமான பிரபல நடிகர் சன்னி தியோலின் உறவினர் தான் இந்த தீப் சித்து. இவர், 2019 மக்களவைத் தேர்தலில் பாஜக வேட்பாளரான சன்னி தியோலுக்கு ஆதரவாக பிரச்சாரத்தில் ஈடுபட்டவர்.

லகா சிதானா

கேங்ஸ்டராக இருந்து ஆர்வலராக மாறிய 26 வயதான லகா சிதானா மீது 26 வழக்குகள் நிலுவையில் உள்ளது. இவர் நவம்பர் மாதம் முதலேயே, டெல்லி எல்லையில் விவசாயிகளுடன் இணைந்து போராட்டம் நடத்தி வருகிறார்.

அமைதியாக போராடிய விவசாயிகளை திசைத்திருப்பி செங்கோட்டைக்கு அழைத்துச் சென்றதற்கு தீப் சித்து தான் காரணம் என்று Bharatiya Kisan சங்கத்தின் ஹரியானா பிரிவுத் தலைவர் குர்னம் சிங் வெளிப்படையாக குற்றம் சாட்டியுள்ளார்.

மைக்ரோபோனுடன் செங்கோட்டை போனது எப்படி?

ஸ்வராஜ் இந்தியா தலைவர் யோகேந்திர யாதவ் கூறுகையில், "வன்முறை ஏற்பட்ட போது செங்கோட்டையில் தீப் சித்து இருந்தார். நாங்கள் போராட்டம் தொடங்கியதில் இருந்தே அவரிடம் இருந்து விலகி எச்சரிக்கையாக இருக்கவே முயற்சி செய்தோம். அவர் மைக்ரோபோனுடன் செங்கோட்டையை எப்படி நெருங்கினார் என்பது குறித்து தீவிர விசாரணை நடத்த வேண்டும்.

சித்துவுக்கு பாஜகவுடன் தொடர்புள்ளது. தேர்தலில் எம்.பி. சன்னி தியோலின் ஏஜெண்டாக இருந்தார். பிரதமர் நரேந்திர மோடியுடன் சேர்ந்து புகைப்படமும் எடுத்துள்ளார். இப்படி பாஜக பின்னணி கொண்டிருக்கும் சித்து மற்றும் சிதானா எங்கள் போராட்டக் களத்தில் இணைந்த போதே, நாங்கள் போலீசாருக்கு தகவல் தெரிவித்தோம். ஆனால் எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை. இப்போது, செங்கோட்டையில் சித்து இருக்கும் புகைப்படம் வெளியான பிறகும் அவரை போலீஸார் இன்னும் கைது செய்யவில்லை" என்று தெரிவித்துள்ளார்.

தடை செய்யப்பட்ட அமைப்பின் உறுப்பினர்

காங்கிரஸ் எம்.பி. ரவ்னீத் சிங் பிட்டுவும் செங்கோட்டையில் சீக்கிய கொடியை ஏற்றியதற்கு சித்து தான் காரணம் என்று கூறியுள்ளார். இதுகுறித்து அவர் கூறுகையில், சித்து தடைசெய்யப்பட்ட தீவிரவாத அமைப்பான Sikhs for Justice (SFJ)-ல் உறுப்பினராக உள்ளார்" என்று தெரிவித்துள்ளார்.

செங்கோட்டையில் நேற்று சீக்கிய கொடி ஏற்றப்பட்ட உடனே சமூக ஊடகங்களில் இந்தியில் பேசி வீடியோ வெளியிட்ட சித்து, நிஷான் சாஹிப் (சீக்கிய கொடி) மற்றும் விவசாய யூனியன் கொடிகள் ஏற்றப்பட்டுவிட்டதாக மார்தட்டியது குறிப்பிடத்தக்கது.

பின்னணி என்ன?

சித்துக்கு அரசியலில் பெரும் ஆர்வம் இருப்பதாகவும், தனக்கு சொந்தமான ஒரு கட்சியை உருவாக்க விரும்புவதாகவும் செய்தி வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. அதன் காரணமாகவே, அவர் விவசாயிகளின் போராட்டத்தை தனக்கு ஆதரவாக பயன்படுத்திக் கொண்டிருப்பதாகவும் கூறப்படுகிறது. சிதானாவும், தன் சுயலாபத்திற்காக, விவசாயிகளை திசைத்திருப்பும் முயற்சிகளை எடுத்து வருவதாகவும் குற்றம் சாட்டப்படுகிறது.

English summary
Deep Sidhu, activist Lakha Sidhana instigating protesters
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X