டெல்லியில் காங். எம்.பிக்கள் மீது தாக்குதல்: லோக்சபா சபாநாயகரிடம் புகார்- ஆளுநர் மாளிகைகள் முற்றுகை
டெல்லி: மத்திய பாஜக அரசுக்கு எதிராக டெல்லியில் போராடிய காங்கிரஸ் எம்.பிக்கள் மீது போலீசார் கொடூரமாக தாக்குதல் நடத்தியதைக் கண்டித்தும் போலீசார் மீது நடவடிக்கை எடுக்க கோரியும் லோக்சபா சபாநயகர் ஓம்பிர்லாவிடம் காங். மூத்த தலைவர்கள் இன்று புகார் மனு கொடுத்தனர்.
நேஷனல் ஹெரால்டு பத்திரிகை தொடர்பான வழக்கில் மூத்த காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தியிடம் கடந்த 3 நாட்களாக அமலாக்கப் பிரிவு அதிகாரிகள் பல மணிநேரம் தொடர் விசாரணை நடத்தினர். நேஷனல் ஹெரலாடு பத்திரிகை பங்கு பரிமாற்றம் தொடர்பாக இந்த விசாரணை நடத்தப்பட்டது.ராகுல் காந்தியிடம் நாளையும் விசாரணை நடைபெற இருக்கிறது.

இந்நிலையில் ராகுல் காந்தியை அமலாக்கப் பிரிவு விசாரிக்க எதிர்ப்பு தெரிவித்து டெல்லியில் காங்கிரஸ் எம்.பி.க்கள், மூத்த தலைவர்கள் தொடர் போராட்டத்தையும் நடத்தினர். டெல்லி காங்கிரஸ் கட்சி தலைமை அலுவலகம் மற்றும் அமலாக்கப் பிரிவு அலுவலகம் முன்பாக இந்த போராட்டங்கள் நடத்தப்பட்டன. இப்போராட்டங்களின் போது காங்கிரஸ் எம்.பி. ஜோதிமணி உள்ளிட்டோர் போலீசார் தாக்கப்பட்டனர் என்பது புகார்.
இது தொடர்பாக கடும் கண்டனம் தெரிவித்து வரும் காங்கிரஸ் தலைவர்கள், போலீசாரால் தங்களது கட்சியினர் தாக்கப்படும் வீடியோக்களையும் பகிர்ந்து வருகின்றனர்.
இதனிடையே டெல்லியில் காங்கிரஸ் தலைவர்கள் மீதான தாக்குதலைக் கண்டித்து நாடு முழுவதும் ஆளுநர் மாளிகைகளை முற்றுகையிடும் போராடத்தை காங்கிரசார் நடத்தி வருகின்றனர். அதேநேரத்தில் டெல்லியில் லோக்சபா சபாநாயகர் ஓம் பிர்லாவை ஆதிர் ரஞ்சன் சவுத்ரி தலைமையிலான மூத்த காங்கிரஸ் தலைவர்கள் சந்தித்தனர். இச்சந்திப்பின் போது தங்களது கட்சி எம்.பி.க்கள் மீது தாக்குதல் நடத்திய பாதுகாப்பு படையினர், போலீஸ் மீது நடவடிக்கை எடுக்க வலியுறுத்தப்பட்டது.