ராஜினாமா செய்த முக்தர் அப்பாஸ் நக்வி- எம்.பி.பதவி நாளையுடன் நிறைவு- பாஜகவில் இனி நோ முஸ்லிம் எம்.பி
டெல்லி: மத்திய அமைச்சர் பதவியில் இருந்து முக்தர் அப்பாஸ் நக்வி (முக்தார் அப்பாஸ் நக்வி) ராஜினாமா செய்தார். மேலும் அவரது ராஜ்யசபா எம்.பி. பதவி காலம் நாளையுடன் நிறைவடைவதால் பாஜகவில் இனி நாடாளுமன்றத்தில் ஒரு முஸ்லிம் எம்.பி. கூட இல்லை என்கிற நிலைமை உருவாகிறது.
பிரதமர் மோடி தலைமையிலான அமைச்சரவையில் முக்தர் அப்பாஸ் நக்வி இடம் பெற்றிருந்தார். அவர் பீகார் மாநிலத்தில் இருந்து மாநிலங்களவை - ராஜ்யசபா எம்.பி.யாக தேர்ந்தெடுக்கப்பட்டவர். இந்நிலையில் முக்தர் அப்பாஸ் நக்வி இன்று தமது அமைச்சர் பதவியை ராஜினாமா செய்தார். இதனைத் தொடர்ந்து துணை ஜனாதிபதி தேர்தலில் முக்தர் அப்பாஸ் நக்வியை பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயகக் கூட்டணி வேட்பாளராக அறிவிக்கக் கூடும்; இதனால் அவர் மீண்டும் ராஜ்யசபா எம்.பி.யாக்கப்படவில்லை என கூறப்பட்டு வருகிறது.

முக்தர் அப்பாஸ் நக்வியின் ராஜ்யசபா எம்.பி. பதவி காலம் நாளையுடன் நிறைவடைகிறது. இதனையடுத்து பாஜகவில் இனி ஒரு முஸ்லிம் சமூக எம்.பி. கூட இல்லை என்கிற சூழ்நிலை உருவாகிறது. நாட்டின் மிகப் பெரிய கட்சியாக பாஜக, நாடாளுமன்றத்தில் 395 எம்.பிக்களைக் கொண்டிருக்கிறது. நாட்டின் மக்கள் தொகையில் 16% உள்ள முஸ்லிம்களில் ஒருவர் கூட பாஜகவின் எம்.பி.யாக இல்லை என்கிற வரலாறும் உருவாகி உள்ளது. இது விவாதமாகவும் மாறி இருக்கிறது.
மத்திய அமைச்சர்கள் முக்தர் அப்பாஸ் நக்வி, ஆர்சிபி சிங் திடீர் ராஜினாமா! அடுத்தடுத்து அறிவிப்பு
நாட்டின் மிகப் பெரிய சிறுபான்மை சமூகத்தைச் சேர்ந்த ஒருவர் கூட ஆளும் கட்சியின் எம்.பி.யாக இல்லை என்பது ஜனநாயகத்துக்கு ஆபத்தானது என்கிற கருத்தை மூத்த பத்திரிகையாளர்கள் முன்வைக்கின்றனர். பாஜக ஆளும் மாநிலங்களில் ஒன்றிரண்டு முஸ்லிம் எம்.எல்.ஏக்கள் உள்ளனர்.
மாநிலங்களில் நடைபெறும் சட்டசபை தேர்தல்களில் கிறிஸ்தவர், இஸ்லாமியர் வாக்குகளை அறுவடை செய்யவும் பல்வேறு யுக்திகளை பாஜக அவ்வப்போது கையில் எடுப்பதும் வழக்கம் என்பது குறிப்பிடத்தக்கது.