உலகம் முழுதும் வேகமெடுக்கும் குரங்கு அம்மை! ‛அலர்ட்‛டான கேரளா, மகாராஷ்டிரா! நடந்தது என்ன? பரபர தகவல்
டெல்லி: ஐரோப்பிய நாடுகளில் குரங்கு அம்மை நோய் தொற்று வேகமாக பரவும் நிலையில் உலக நாடுகளை மத்திய அரசு உன்னிப்பாக கவனித்து வருகிறது. மேலும் வெளிநாடுகளில் இருந்து வரும் பயணிகளுக்கு சோதனை மேற்கொள்ள அறிவுறுத்தப்பட்டுள்ள நிலையில் கேரளா, மகாராஷ்டிரா மாநிலங்கள் ‛அலர்ட்'டாகி உள்ளன.
இந்தியா உள்ளிட்ட உலக நாடுகள் முழுவதும் கொரோனா பாதிப்பில் இருந்து மெல்ல மெல்ல மீண்டும் வருகின்றன. கடந்த 2 ஆண்டுகளாக முடங்கிய பொருளாதார நடவடிக்கைகள் தற்போது தான் மீண்டும் துவங்கி உள்ளன.
இந்நிலையில் தான் தற்போது குரங்கு அம்மை எனும் தொற்று ஐரோப்பா நாடுகளில் பரவ துவங்கி உள்ளது. நாளுக்கு நாள் இதன் பாதிப்பு தொடர்ந்து அதிகரித்து வருவது இன்னொரு நோய் உலகம் முழுவதையும் அச்சுறுத்துகிறதா என்ற எண்ணத்தை தோற்றுவித்துள்ளது.
ஹலோ ஹவ் ஆர் யூ? உங்களை நல்லா பாத்துக்கறாங்களா? அழகா இருக்கு! ஆந்தையாரை நலம் விசாரித்த தமிழிசை

சுகாதாரத்துறை எச்சரிக்கை
இதை உறுதி செய்யும் வகையில் தான் உலக சுகாதார அமைப்பும் எச்சரிக்கை விடுத்துள்ளது. குரங்கம்மை தொற்று மேற்கு மற்றும் மத்திய ஆப்பிரிக்க நாடுகளில் அதிகமாக பரவுகிறது. இந்த நோய் ஆப்ரிக்காவின் காங்கோவில் 2019ல் கண்டறியப்பட்டது. ஆப்பிரிக்க நாடுகளில் பரவிய இந்த நோய் கனடா, பிரிட்டன், பெல்ஜியம், ஆஸ்திரேலியாக, ஜெர்மனி, ஸ்பெயின் உள்ளிட்ட நாடுகளில் பாதிப்பை ஏற்படுத்தி உள்ளது. கண், காது, மூக்கு உள்ளிட்ட பகுதிகள் உள்ள மியூகோஸ் திசுக்கள் மூலமாக பரவக்கூடும் என்பதால் குரங்கம்மை பாதிப்புக்கான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் மேற்கொள்ள உலக சுகாதார அமைப்பு அறிவுறுத்தி உள்ளது.

10 நாட்களில் 12 நாடுகளுக்கு பரவல்
இதற்கிடையே தான் கடந்த 10 நாட்களில் மட்டும் 12 நாடுகளில் குரங்கு அம்மை நோய் பரவியுள்ளது. இதுவரை மொத்தம் 90க்கும் அதிகமானவர்களுக்கு பாதிப்புஉறுதி செய்யப்பட்டுள்ளது. இதுபற்றி உலக சுகாதார அமைப்பானது,‛‛ வெளிநாடு செல்லாமல் உள்நாடு அல்லது உள்ளூரில் குரங்கு அம்மை நோயால் பாதிக்கப்பட்டுள்ளதை கண்டறிவதில் சிரமம் உள்ளது. இதனால் கண்காணிப்பை அதிகரித்துள்ளோம். ஆண்களோடு ஆண்கள் ஓரினச்சேர்க்கை செய்யும் நபர்களுக்கு தொற்று கண்டறியப்பட்டுள்ளது. வரும் நாட்களில் பாதிக்கப்படும் நபர்களின் எண்ணிக்கை அதிகரிக்கும்'' என எச்சரிக்கை விடுத்துள்ளது.

ஆப்பிரிக்க விஞ்ஞானியின் எச்சரிக்கை
இதுபற்றி நைஜீரிய அகாடமி ஆப் சயின்ஸ் தலைவராகவும், உலக சுகாதார அமைப்பின் ஆலோசனை குழுவில் இருந்தவருமான ஓயேவாலே டோமோரி கூறுகையில், ‛‛பல நாடுகளில் குரங்கு அம்மை நோய் பரவி வருகிறது. இவர்கள் வெளிநாடுகளுக்கு செல்லாத நிலையில் பாதிக்கப்படுகின்றனர். பெரும்பாலும் ஆப்பிரிக்காவுக்குச் செல்லாத இளைஞர்களுக்கு பாதிப்பு கண்டறியப்பட்டுள்ளது. இதனால் வியப்பு ஏற்பட்டுள்ளது. இதனால் அனைவரும் கவனமாக இருக்க வேண்டும்'' என எச்சரிக்கை விடுத்துள்ளார்.

அமெரிக்கா, இஸ்ரேலில் பரவல்
இதை உறுதி செய்யும் வகையில் தான் அமெரிக்காவில் குரங்கு அம்மை நோய் பரவி உள்ளது. நியூயார்க்கில் 2 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். இதுபற்றி
இஸ்ரேல் நாட்டில் நேற்று குரங்கு அம்மை நோய் பாதிப்பு உறுதி செய்யப்பட்டது. டெல் அவிவின் இச்சிலோவ் மருத்துவமனையின் செய்தித் தொடர்பாளர் கூறுகையில், ‛‛மேற்கு ஐரோப்பாவில் இருந்து குரங்கு அம்மை அறிகுறிகளுடன் திரும்பிய 30 வயது நபருக்கு பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது'' என்றார். சுவிட்சர்லாந்திலும் நேற்று குரங்கு அம்மை நோய் கண்டறியப்பட்டுள்ளது. பெர்ன் மாகாணத்தில் வசிக்கும் நபருக்கு பாதிப்பு உறுதியாகி உள்ளது.

தீவிர ஆலோசனை
குறிப்பாக ஐரோப்பிய நாடுகளில் பாதிப்பு அதிகரிக்கும் நிலையில் ஐரோப்பாவுக்கான உலக சுகாதார அமைப்பின் பிராந்திய இயக்குனர் ஹான்ஸ் க்ளூக் கூறுகையில், "கோடைக்காலத்தில் பல விழாக்கள் நடக்கும். இதனால் நோய் பரவல் அதிகரிக்கலாம்'' என கவலை தெரிவித்துள்ளது. இதற்கிடையே நோய் பரவல் குறித்து உலக சுகாதார அமைப்பின் கூட்டம் கூட்டப்பட்டு ஆலோனை நடத்தப்பட்டுள்ளது. இதில் பல்வேறு விஷயங்கள் குறித்து ஆலோசிக்கப்பட்டது.

மத்திய அரசு உத்தரவு
இந்நிலையில் தான் மத்திய சுகாதார அமைச்சர் மான்சுக் மாண்டவியா தேசிய நோய் கட்டுப்பாட்டு மையம் (என்சிடிசி) மற்றும் இந்திய மருத்துவ ஆராய்ச்சி கவுன்சில் (ஐசிஎம்ஆர்) ஆகியவற்றுக்கு அதிரடி உத்தரவிட்டுள்ளது. அதாவது குரங்கு அம்மை பாதிப்புள்ள நாடுகளை கண்காணிக்க வேண்டும் என அறிவுறுத்தி உள்ளது. அதோடு மத்திய அரசு சார்பில் ஒரு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. அதாவது வெளிநாடுகளில் இருந்து இந்தியா வரும் பயணிகளை கண்காணித்து பரிசோதனை செய்ய வேண்டும் என அறிவுறுத்தி உள்ளது.

‛அலர்ட்' ஆன கேரளா, மகாராஷ்டிரா
இதற்கு மறுநாளே கேரள சுகாதாரத் துறை அமைச்சர் வீனா ஜார்ஜ் மாநில அதிகாரிகளுக்கு அறிவுரை வழங்கியுள்ளார். ‛‛கேரளா விழிப்புடன் இருக்க வேண்டும். நோய் பற்றிய விழிப்புணர்வை மக்களிடம் ஏற்படுத்த வேண்டும். சுகாதாரத்துறை அதிகாரிகள் தேவையான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுத்து வருகின்றனர். ஏனென்றால் ஒரு காலத்தில் ஆப்பிரிக்காவில் மட்டும் கண்டறியப்பட்ட குரங்கு அம்மை பல நாடுகளுக்கும் பரவி வருகிறது. இதனால் விழிப்பு அவசியம்''என தெரிவித்துள்ளார். இதேபோல் மகாராஷ்டிரா சுகாதாரத் துறையும் கண்காணிப்பு நடவடிக்கையை தீவிரப்படுத்தி உள்ளது. இதுபற்றி மாநில கண்காணிப்பு பிரிவு டாக்டர் பிரதீப் அவதே கூறுகையில், "அனைத்து மாவட்ட சுகாதார அதிகாரிகளையும் கவனமாக இருக்குமாறு நாங்கள் தெரிவித்துள்ளோம்" என்றார். இருப்பினும் தற்போது வரை இந்தியாவில் குரங்கு அம்மை நோய் பாதிப்பு கண்டறியப்படவில்லை. ஆனால் கேரளா, மகாராஷ்டிரா மாநிலங்கள் முன்னெச்சரிக்கை நடவடிக்கையை மேற்கொள்ள சுகாதாரத்துறை அதிகாரிகளுக்கு உத்தரவிட்டுள்ளன.