ஸ்ட்ரிக்ட்! டாடா கைகளுக்குச் செல்லும் முன்.. ஏர் இந்தியா ஊழியர்களுக்கு பறந்த முக்கிய உத்தரவு
டெல்லி: ஏர் இந்தியா கேபின் குழு பணியாளர்களுக்கு பிஎம்ஐ மற்றும் எடை சோதனை தொடர்பான நடைமுறையில் செய்யப்பட்டுள்ள மாற்றத்திற்கு அந்நிறுவன யூனியன்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளன.
மத்திய அரசுக்குச் சொந்தமான ஏர் இந்தியா நிறுவனம் இன்னும் சில நாட்களில் டாடா குழுமத்திற்கு ஒப்படைக்கப்பட உள்ளது அனைவருக்கும் தெரியும். இந்த வாரம் அதற்கான பணிகள் நிறைவடையும் என எதிர்பார்க்கப்படுகிறது.
நம்பர் 1 முதல்வர் என்பதில் எனக்கு பெருமையில்லை! தமிழகத்தை முதல் மாநிலமாக்க வேண்டும்: ஸ்டாலின் பேச்சு
இந்தச் சூழலில் கடந்த ஜனவரி 20இல் அனுப்பப்பட்ட சுற்றறிக்கை தான் இப்போது சர்ச்சையைக் கிளப்பியுள்ளது.

புதிய உத்தரவு
ஏர் இந்தியா நிர்வாக இயக்குநர் அனைத்து இந்திய கேபின் க்ரூ அசோசியேஷனுக்கு அனுப்பிய சுற்றறிக்கையில், "ஒவ்வொரு கேபின் குழு உறுப்பினரும் 4 மாதங்களுக்கு ஒருமுறை பிஎம்ஐ மற்றும் எடை சோதனைக்கு உட்படுத்தப்படுவார்கள். சீரான மற்றும் விதிமுறைகளின்படி நன்கு உடையணிந்து கேபின் குழுவினர் தான் நமது நிறுவனத்தைப் பயணிகளிடம் கொண்டு செல்கிறார்கள். எனவே, இந்த நடவடிக்கை முக்கியமானது" என்று குறிப்பிடப்பட்டுள்ளது.

ஊழியர் சங்கம் எதிர்ப்பு
மேலும் புதிய உத்தரவின்படி, விமான குழுவினர் அனைத்து வழிகாட்டுதல்களையும் பின்பற்றுவதை விமானத்தின் கேபின் மேற்பார்வையாளரே உறுதி செய்ய வேண்டும் என்று கூறப்பட்டுள்ளது. பணியாளர்களை விதிமுறைகளைப் பின்பற்றவில்லை என்றால் மேற்பார்வையாளர் உடனடியாக ரிப்போர்ட் செய்ய வேண்டும் என்று வலியுறுத்தப்பட்டுள்ளது. இருப்பினும், இந்த அறிவிப்புக்கு ஏர் இந்தியா ஊழியர்கள் சங்கம் கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளது.

சரியானது இல்லை
இதுபோன்ற பிஎம்ஐ மற்றும் எடை சோதனைகளை மருத்துவர்களே மேற்கொள்ள வேண்டும் என்றும் அதற்குப் பதிலாக உதவியாளர்கள் இந்த பணிகளைச் செய்வது சரியான நடைமுறை இல்லை என்றும் எதிர்ப்பு தெரிவித்துள்ளது. மேலும், "இந்த புதிய விதிமுறை மத்திய அரசுக்கும் டாடா சன்ஸ் குழுமத்திற்கும் இடையே போடப்பட்டுள்ள ஒப்பந்தத்தின் ஒரு பகுதியாக இருக்கலாம். மிகவும் உயர் தரமான தரத்தை உறுதி செய்ய வேண்டும் என்பதே டாடா குழுமத்தின் இலக்காக இருக்கும். இதை நாங்கள் வரவேற்கிறோம்.

சட்ட நடவடிக்கை
ஆனால் பிஎம்ஐ மற்றும் எடை சோதனைகள் முறையான மருத்துவர்கள் தான் நடத்த வேண்டும். இந்த சோதனைகளை அலுவலகத்தில் நடத்தப்படுவதற்குப் பதிலாக ஏர்போர்ட்டில் விமானம் புறப்படுவதற்கு முன்பு நடத்தப்படும்போது அது தேவையற்ற மன ரீதியிலான அழுத்தத்தை ஏற்படுத்துகிறது. இது குறித்து சட்டப்படி நடவடிக்கை எடுக்கவும் ஆலோசித்து வருகிறோம்" என்று தெரிவிக்கப்பட்டுள்ளது