பிரிக்ஸ்! உக்ரைன் போருக்கு இடையே சந்திக்கும் தலைகள்! இந்தியா, ரஷ்யா, சீனாவை கண்காணிக்கும் அமெரிக்கா
டெல்லி: கல்வான் பள்ளத்தாக்கு மோதலின் 2வது ஆண்டு நினைவு தினம் நேற்று அனுசரிக்கப்பட்ட நிலையில் சீனா நடத்திய ஆலோசனை கூட்டத்தில் இந்திய தேசிய பாதுகாப்பு ஆலோசகர் அஜித்தோவல் பங்கேற்றார். இந்தியா, சீனா, ரஷ்யா, பிரேசில், தென்ஆப்பிரிக்கா தலைவர்கள் ஒன்றாக இணையும் பிரிக்ஸ் உச்சி மாநாடு ஜூன் 24ல் நடைபெற உள்ள நிலையில் இந்த ஆலோசனை கூட்டம் நடந்தது. இதனால் அமெரிக்கா உள்ளிட்ட நாடுகளின் பார்வை பிரிக்ஸ் உச்சிமாநாட்டை நோக்கியுள்ளது.
பிரேசில், ரஷ்யா, இந்தியா, சீனா, தென்ஆப்பிரிக்காக ஆகிய நாடுகள் இணைந்து பிரிக்ஸ் கூட்டமைப்பை ஏற்படுத்தி உள்ளன. இந்த 5 நாடுகளில் அரசியல் மற்றும் பாதுகாப்பு ஒத்துழைப்பை வலுப்படுத்தும் நோக்கில் இது செயல்பபட்டு வருகிறது.
ஜூன் 24ல் சீன அதிபர் ஜி ஜின்பிங் நடத்தும் பிரிக்ஸ் உச்சிமாநாடு நடைபெற உள்ளது. இதில் பிரதமர் நரேந்திர மோடி, ரஷ்ய அதிபர் விளாடிமிர் புடின் மற்றும் பிரேசில் மற்றும் தென்னாப்பிரிக்கா நாடுகளின் தலைவர்கள் பங்கேற்க உள்ளனர்.
உக்ரைன் அணு உலையை நெருங்கி பாய்ந்த ஏவுகணைகள்.. அணுமின் நிலையம் மீது குறிவைத்ததா ரஷ்யா? பரபரப்பு!

போருக்கு மத்தியில் உச்சிமாநாடு
பிப்ரவரி 24ல் உக்ரைன் மீது ரஷ்யா போர் துவங்கியது. 100 நாட்களை தாண்டி போர் நடக்கிறது. இந்தியா நடுநிலை வகிக்கும் நிலையில் சீனா, ரஷ்யாவுக்கு ஆதரவு தெரிவித்துள்ளது. இந்த போருக்கு பிறகு நடைபெறும் முதல் பிரிக்ஸ் உச்சிமாநாடு இதுவாகும். இதனால் தலைவர்களுக்கு இடையிலான கலந்துரையாடல்களை உன்னிப்பாகக் கவனிக்கப்பட உள்ளது.

5 நாட்டு தலைவர்கள்
உக்ரைன் மீதான போர் துவங்கியது முதலே பிரதமர் நரேந்திர மோடியும், விலாடிமிர் புதினும் பலமுறை தொலைபேசியில் பேசினார். ஆனால் இந்தியா, சீனா, ரஷ்யா மற்றும் பிரேசில் அதிபர் போல்சனாரோ, தென்னாப்பிரிக்க அதிபர் ரமபோசா ஆகியோர் ஒன்றாக ஒரே மேடையில் இணையும் முதல் நிகழ்வு இதுவாகும். இதற்கிடையே நேற்று சீனா அதிபர் ஜி ஜின்பிங், ரஷ்ய அதிபர் விலாடிமிர் புதினும் பேசினார். அப்போது இறையாண்மை மற்றும் பரஸ்பர ஆதரவு வழங்குவதாக மீண்டும் உறுதிப்படுத்தினார் என கூறியதாக தகவல்கள் வெளியாகி உள்ளன. இதனால் அமெரிக்கா, பிரிட்டன் உள்ளிட்ட நாடுகளின் பார்வை பிரிக்ஸ் உச்சிமாநாட்டின் பக்கம் திரும்பியுள்ளது.

அஜித் தோவல் பங்கேற்பு
இந்நிலையில் தான் பிரிக்ஸ் உச்சிமாநாட்டுக்கு முன்னோட்டமாக நேற்று சீனாவின் தேசிய பாதுகாப்பு ஆலோசகர் யாங் ஜியேச்சி நடத்திய பிரிக்ஸ் நாட்டு உறுப்பினர்களின் ஆலோசனை கூட்டம் நடந்தது. இதில் இந்தியா சார்பில் தேசிய பாதுகாப்பு ஆலோசகர் அஜித் தோவல் ஆன்லைன் மூலம் பங்கேற்றார். பிரேசில், தென்ஆப்பிரிக்கா, ரஷ்யா நாட்டின் உறுப்பினர்களும் பங்கேற்றனர். உலகளாவிய ஆளுமை, தேசிய பாதுகாப்பு, புதிய அச்சுறுத்தல்களால் ஏற்பட்டுள்ள சவால்கள் குறித்து விவாதிக்கப்பட்டது.

அரசியல், பாதுகாப்பு ஒத்துழைப்பு
இந்தியா -சீனா இடையே ஏற்பட்ட கால்வன் மோதலுக்கு பிறகு இருநாடுகளின் பிரதிநிதிகள் பங்கேற்ற கூட்டம் என்பதால் இது எதிர்ப்பார்ப்பை ஏற்படுத்தியது.இந்த மாநாட்டில் சீன வெளியுறவுத்துறை அமைச்சக செய்தி தொடர்பாளர் வாங்வென் பேசுகையில், ‛‛ஒரு நூற்றாண்டு காணாத கொரோனா தொற்றுநோயால் பல மாற்றங்கள் ஏற்பட்டுள்ளன. சீனா எப்போதும் பிரிக்ஸ் உறுப்பினர்களுடன் இணைந்து செயல்படும். பரஸ்பர நம்பிக்கையை மேலும் பலப்படுத்துதல், அரசியல் மற்றும் பாதுகாப்பு ஒத்துழைப்பை தீவிரப்படுத்துதல், ஐந்து நாடுகளின் பாதுகாப்பு மற்றும் மேம்பாட்டு நலன்களை நிலைநிறுத்துதல் மற்றும் உலக அமைதி மற்றும் நிலையான தன்மைக்கு சீனா எப்போதும் துணை நிற்கும்'' என்றார். .

2ம் ஆண்டு நினைவு தினத்தில் ஆலோசனை
இதற்கிடையே சீனா, ரஷ்யா, பாகிஸ்தான் மற்றும் மத்திய ஆசிய நாடுகளின் அதிகாரிகளை உள்ளடக்கிய எச்சிஓ (ஷாங்காய் ஒத்துழைப்பு அமைப்பு) எல்லைபபாதுகாப்பு மாநாடு டெல்லியில் நேற்று நடந்தது. எல்லை பாதுகாப்பு படையின் நிபுணர் குழுவின் 21வது கூட்டத்தையும், எஸ்சிஓ உறுப்பு நாடுகளின் தகுதிவாய்ந்த அமைப்புகளின் எல்லை அதிகாரிகளின் எட்டாவது கூட்டமும் நடந்தது. இந்தியா-சீனா இடையே கல்வான் பள்ளத்தாக்கில் நடந்த மோதலின் இரண்டாமாண்டின் நினைவு தினம் நேற்று நடந்த நிலையில் தான் இந்த கூட்டங்கள் அரங்கேறின.

கல்வான் பள்ளத்தாக்கு மோதல்
2020 ஜூன் 15ல் கல்வான் பள்ளத்தாக்கு மோதலில் 20 இந்திய வீரர்கள் வீரமரணமடைந்தனர். சீன வீரர்களும் ஏராளமானவர்கள் இறந்தனர். இருப்பினும் 4 வீரர்கள் மட்டுமே இறந்ததாக சீனா தரப்பில் கூறப்பட்டு இருந்தது. இந்த பிரச்சனைக்கு பிறகும் தொடர்ந்து எல்லையில் பதற்றம் நிலவி வருவதோடு பேச்சுவார்த்தையும் நடத்தப்பட்டு வந்தது. இதுவரை 15 சுற்று பேச்சுவார்த்தை நடந்தும் பெரிய அளவில் மாற்றம் ஏற்படவில்லை. விரைவில் 16வது சுற்று பேச்சுவார்த்தை நடைபெறும் என எதிர்பார்க்கப்படுகிறது.