180 நாடுகள் பட்டியலில் கடைசி இடத்தில் இந்தியா! சுற்றுச்சூழல் செயல்திறன் மதிப்பீட்டு ஆய்வில் ‛பகீர்’
டெல்லி: அமெரிக்க கல்வி நிறுவனங்கள் 180 நாடுகளில் சுற்றுச்சூழல் செயல்பாடுகளுக்கான மதிப்பீடுகள் செய்ததில் இந்தியா கடைசி இடத்தில் உள்ளது என கூறப்பட்டுள்ளது. சுற்றுச்சூழல் பாதுகாப்பில் இந்தியா தொடர்ந்து கவனம் செலுத்தி வருவதாக ஜூன் 5ல் பிரதமர் மோடி பெருமையாக பேசிய நிலையில் இத்தகைய ஆய்வு முடிவுகள் வெளியாகி உள்ளது.
சுற்றுச்சூழல் சட்டம் மற்றும் கொள்கைக்கான யேல் சென்டர் மற்றும் கொலம்பியா பல்கலைக்கழகத்தின் சர்வதேச புவி அறிவியல் இன்பர்மேஷன் நெட்வொர்க் சார்பில் 2022ம் ஆண்டுக்கான சுற்றுச்சூழல் செயல்திறன் குறியீடு ஆய்வுகள் மேற்கொள்ளப்பட்டது.
பிரதமர் மோடி தலைமையில் இன்று மத்திய அமைச்சரவை கூட்டம்.. முக்கிய திட்டங்களுக்கு ஒப்புதல்?
இந்த ஆய்வு முடிவுகள் தற்போது வெளியாகி உள்ளது. இதில் சுற்றுச்சூழல் பாதுகாக்கும் நோக்கத்தில் செயல்பட்டு வரும் நாடுகள் வரிசைப்படுத்தப்பட்டுள்ளன.

40 காரணிகள்
இந்த ஆய்வானது பல்லூயிர் பெருக்கம் பாதுகாப்பு, உயிரினங்கள் பாதுகாப்பு, உயிரினங்கள் வாழ்விடம்,
காடுகள் அழிப்பு, சதுப்புநில பகுதிகள் இழப்பு, காற்றின் தரம், கடலில் பிளாஸ்டிக் கலப்பு, பருவநிலை மாற்றம் உள்பட 40 காரணிகளை அடிப்படையாக கொண்டு மதிப்பீடு செய்யப்பட்டது.

முதல் 10 இடம் யாருக்கு?
இதில் டென்மார்க் முதலிடம் பிடித்துள்ளது. 2வது இடத்தில் பிரிட்டன், 3வது இடத்தில் பின்லாந்து, 4வது இடத்தில் மால்டா, 5வது இடத்தில் ஸ்வீடன், 6ம் இடத்தில் லக்ஸம்பர்க், 7 வது இடத்தில் ஸ்லோவேனிியா, 8 வது இடத்தில் ஆஸ்திரியா, 9வது இடத்தில் ஸ்வீட்சர்லாந்து 10வது இடத்தில் ஐஸ்லாந்து நாடுகள் உள்ளன.

இந்தியாவுக்கு கடைசி இடம்
இந்த பட்டியலில் வல்லரசு நாடுகளான அமெரிக்கா, ரஷ்யா மற்றும் சீனாவுக்கும் பின்னடைவு ஏற்பட்டுள்ளது. அந்த வகையில் அமெரிக்கா 43 வது இடத்திலும், ரஷ்யா 112வது இடத்திலும், சீனா 160வது இடத்திலும் உள்ளது. இந்த பட்டியலில் 18.9 மதிப்பெண்களுடன் இந்தியா கடைசி இடத்தில் உள்ளது. அதாவது இந்தியாவுக்கு 180வது இடம் கிடைத்துள்ளது. இதன்மூலம் இந்தியாவின் காற்றின் தரம், பசுமை இல்ல வாயு உமிழ்வுகள் கட்டுப்படுத்துவதில் சிரமம் இருப்பதை ஆய்வு முடிவுகள் சுட்டிக்காட்டியுள்ளன.

எச்சரிக்கை
மேலும் இதேநிலை நீடிக்கும் பட்சத்தில் 2050ம் ஆண்டில் சீனாவும், இந்தியாவும் அதிகளவில் பசுமை இல்ல வாயுக்களை வெளியிடும் நாடுகளாக மாறும் என எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. அதுமட்டுமின்றி 2050ல் பசுமை இல்ல வாயுக்கள் வெளியேற்றத்தின் 50 சதவீதத்தை சீனா, இந்தியா, ரஷ்யா, அமெரிக்கா ஆகிய நாடுகள் தான் கொண்டிருக்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

அண்டை நாடுகளின் பட்டியல்
இந்த பட்டியலில் நம்நாட்டின் அண்டை நாடுகளும் முன்னிலையில் உள்ளன. அதன்படி 81வது இடத்தில் ஆப்கானிஸ்தான், 85வது இடத்தில் பூடான், 113வது இடத்தில் மாலத்தீவு, 132வது இடத்தில் இலங்கை, 162வது இடத்தில் நேபாளம், 176வது இடத்தில் பாகிஸ்தான், 177 வது இடத்தில் வங்கதேசம், 179வது இடத்தில் மியான்மர் உள்ளன. மேலும் இந்த சுற்றுச்சூழல் செயல்திறன் மதிப்பீட்டில் குறைந்த மதிப்பெண்கள் பெற்ற நாடுகள் பொருளாதார வளர்ச்சிக்கு முன்னுரிமை வழங்குவதோடு, உள்நாட்டு பிரச்சனை உள்பட சில நெருக்கடிகளுடன் போராடுவதாக கூறப்பட்டுள்ளது.

மோடி கூறியது என்ன?
முன்னதாக ஜூன் 5ல் உலக சுற்றுச்சூழல் தினத்தில் மண் காப்போம் இயக்கம் நிகழ்ச்சியில் பிரதமர் நரேந்திர மோடி பேசினார். அப்போது இந்தியா சுற்றுச்சூழலை பாதுகாக்க தொடர்ந்து நடவடிக்கை எடுத்து வருகிறது. பருவநிலை மாற்றத்துக்கு வளர்ந்த நாடுகளே பொறுப்பு. இந்தியாவில் இருந்து கார்பன் வெளியேற்றம் மிகவும் குறைந்த நிலையில் புறக்கணிக்கத்தக்க அளவில் மட்டுமே உள்ளதாக பேசியிருந்தார். இந்த நிலையில் தான் இந்த ஆய்வு முடிவுகள் வெளியாகி உள்ளது குறிப்பிடத்தக்கது.