டெல்லி அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Oneindia App Download

நீங்க எங்க பிரதமரானது பூர்வ ஜென்ம புண்ணியம் சார்.. மோடிக்கு ஒரு திறந்த மடல்!

Google Oneindia Tamil News

Recommended Video

    Letter to Modi | நீங்க பிரதமரானது எங்க புண்ணியம்: மோடிக்கு ஒரு மடல்!- வீடியோ

    டெல்லி: இந்தியர்களான நாம் அனைவரும் பூர்வ ஜென்மத்தில் கண்டிப்பாக ஏதாவது ஒரு புண்ணியம் செய்திருக்க வேண்டும். அட்லீஸ்ட்.. நம்மை கடித்த கொசுவை, அடித்து கொல்லாமல், போனால் போகிறது என்று பறக்கவிட்டு, ஜீவகாருண்யமாவது காட்டியிருப்போம்.

    இல்லையா பின்ன.. இப்படி ஒரு பிரதமர் பிறகு எப்படி கிடைப்பாராம்? ஏதாவது சின்ன சின்ன நல்லதாவது செய்திருந்தால்தானே இப்படி ஒரு வலிமையான, புத்திசாலியான பிரதமர் நமக்கு கிடைப்பார்?

    அப்படி என்ன நமது பிரதமர் மோடி செய்துவிட்டார் என்று யோசிக்கிறீர்களா? ஸ்டாப்.. அந்த எண்ணத்தை அப்படியே அடித்து நொறுக்குங்கள். உடனே உங்கள் கன்னத்தில் போட்டுக்கொண்டு இறைவனிடம் மன்னிப்பு கேளுங்கள். அப்படியான ஒரு நினைப்பே, மா பாதகம் என்பது உங்களில் எத்தனை பேருக்கு தெரியும்?

    An open letter to the PM Narendra Modi

    தேசத்தின் ஒரு சாமானிய குடிமகனாக இருந்து, நான் பிரதமர் மோடிக்கு எழுதிய இந்த கடிதத்தை படித்து பார்த்துவிட்டு, மேற்சொன்ன வரிகள் எத்தனை தீர்க்கத் தரிசனம் என்பதை நீங்கள் புரிந்து கொள்வீர்கள்!

    அன்புள்ள பிரதமர் மோடி ஜி!

    நீங்கள் சமீப காலமாக மீடியாக்களுக்கு, கொடுத்த அதிரடி இன்டர்வியூக்களை படித்தும், பார்த்தும் புழகாங்கிதம் அடைந்து தூக்கம் தொலைத்தவன் நான். அதன் தாக்கத்தால், கனவிலும் "மோடி.. மோடி.." என வீறுகொண்டு உளறி, வீடே எனக்கு குளிர் ஜுரம் வந்துவிட்டது என, பாராசிட்டமால் மாத்திரையுடன் பதறி அடித்து ஓடி வந்து பார்த்துவிட்டு, ஒன்றுமில்லை என்று தெரிந்த பிறகு, கழுவி கழுவி ஊற்றிவிட்டு சென்ற வரலாற்றுக்கு சொந்தக்காரனும் நான்தான்.

    இருக்காதா பின்ன.. இத்தனை நாட்களாக மீடியாக்களுக்கு பேட்டியளிக்க, நீங்கள் பயப்படுகிறீர்கள் என்று நாக்கு மேல பல்லைப் போட்டு ஏகடியம் பேசியவர்களின் பின்னந்தலையில் அடிப்பதை போல அல்லவா இருந்தது உங்கள் இன்டர்வியூக்கள்.

    எத்தனை, எத்தனை கேள்விக் கணைகள். அதை நீங்கள் லாவகமாக சமாளித்து துடைதெறிந்ததை பார்த்தபோது, தன் நெஞ்சை, நோக்கி வரும் தோட்டாக்களை, சிம்பிளாக, கையாலே திருப்பி விடும் ரஜினிகாந்த் கதாப்பாத்திரத்தை திரையில் பார்த்ததை போன்ற 'கூஸ்பம்ப்' எனக்கு.

    An open letter to the PM Narendra Modi

    அதிலும், அக்ஷய் குமார் என்ற ஒரு நடிகர் உங்களை மடக்கிவிடலாம் என்று நினைத்து, "நீங்க மாம்பழம் சாப்பிடுவீங்களா" என்று கேட்டாரே பார்க்கலாம் ஒரு கேள்வி. ப்ப்பா.. நீங்க கொடுத்த பதிலை பார்த்து சில்லரையை சிதற விட்ட பல கோடிபேரில் நானும் ஒருவன்.

    தீவிரவாதிகள் இந்துக்களாக இருக்க மாட்டார்கள்.. மோடி பதிலால் புதிய சர்ச்சைதீவிரவாதிகள் இந்துக்களாக இருக்க மாட்டார்கள்.. மோடி பதிலால் புதிய சர்ச்சை

    "சிறு வயதில் நான் மாம்பழங்களை விரும்பி சாப்பிடுவேன், ஆனால் எங்க வீட்டில் காசு இல்லை என்பதால், மரங்களில் இருந்தே பறித்து சாப்பிடுவேன்", என்று நீங்க சொன்ன பதிலை பார்த்ததும், என் கண்களில் கண்ணீர் பிறிட்டு அடித்தது. குமுறி குமுறி அழுதேன். நல்லவேளை, டிவி அறையை பூட்டியிருந்ததால், யாரும் இதை கவனிக்கவில்லை.

    இதெல்லாம் ஒரு கேள்வியா, நாட்டுக்கு அவசியமா என்று கேட்கலாம் சிலர். பாவம் தற்குறிகள் அவர்கள். நமது பிரதமரும் நம்மைப்போல மாம்பழ பிரியர்தான் என்ற முக்கிய தகவல் நாட்டு மக்களிடம் சென்று சேர விடாமல் தடுக்க நினைக்கும் தேசவிரோத சக்திகள் அவர்கள்.

    காசு இல்லை என்றாலும், மரங்களில் மாம்பழம் சாப்பிடுவேன் என்று நீங்கள் தெரிவித்தது, மார்க்ஸ் பேசிய, பொதுஉடமை கருத்தில், பிழிந்தெடுக்கப்பட்ட சாற்றின், ஒரு துளி என்பதை இந்த அறிவிலிகள் உணர்ந்திருக்க முடியாது! "இப்போதெல்லாம் சுகாதாரம் இல்லை என்பதால் மாம்பழம் சாப்பிடுவதை நான் குறைத்துக் கொண்டேன்" என பரிதாபமாக நீங்கள் கூறியது, உலக வெப்பமயமாதல், சுற்றுச்சூழல் மாசு போன்ற பெரிய விஷயங்களுக்கான மாம்பழ குறியீடு என்பதை அறிந்த தேசபக்தன் நான்.

    An open letter to the PM Narendra Modi

    நியூஸ்நேஷன் சேனல் உங்களிடம் கேட்ட ஒரு கேள்வியை, என் வாழ்நாளில் மறக்க முடியாது. "நீங்கள் பர்ஸ் வைக்கும் பழக்கம் கொண்டவரா?" என்ற ஒரு அதிரடி கேள்வியை முன் வைத்தது. பதில் சொன்னதும் Breaking News போடுவதற்கு சேனலின் அத்தனை ஊழியர்கள் கைகளும் பரபரத்தன. ஆனால் "பணம் இருந்தால்தானே நான் பர்ஸ் வைத்துக்கொள்ள" என்று பளிச்சென நீங்கள் சொன்ன பதிலை கேட்டு பத்து நாட்கள்.. அட உண்மைதாங்க.. பத்து நாட்கள் நான் சாப்பிடாமல் பட்டினி கிடந்தேன்.

    பர்ஸ் கூட வைக்காதவர் பாரத பிரதமரா.. என்ற எண்ணம் இப்போதும் என்னை திடீரென தூக்கத்திலிருந்து, தட்டி எழுப்பிவிடுகிறது. அப்பப்போ எனது பாக்கெட்டுக்கு கை போகிறது. 'பர்சோபோபியா' வந்துவிட்டதாக பக்கத்தில் ஒரு டாக்டர் சொன்னார். பரவாயில்லை.

    "உங்களுக்கு எலக்ட்ரானிக் உபகரணங்கள் பிடிக்குமா?" என்ற அடுத்த கேள்வியை ஒரு ஊடகம் உங்களிடம் முன் வைத்தது. உங்கள் இடத்தில் ராகுலோ, மமதாவோ, லாலுவோ இருந்தால்,இந்த கேள்வியை கேட்டதும், பதில் தெரியாமல், ஓட்டம் பிடித்திருப்பார்கள். ஆனால் நீங்கள்தான் வாரமல் வந்த மாமணியாயிற்றே. இரும்பு மனிதருக்கு, இதெல்லாம் ஒரு கேள்வியா?. அழகாக ஒரு ஆன்சர் சொல்லி அனைவரையும் விளாசினீர்களே மறக்க முடியுமா அதை!

    "அது 1987 அல்லது 1988ம் வருடம் இருக்கும்.." இப்படி நீங்கள் பதிலை சொல்ல ஆரம்பித்ததும், உணர்ச்சிப் பெருக்கால், உட்கார்ந்திருந்த நாற்காலியை, டிவிக்கு பக்கத்தில் போட்டு அமர்ந்தபடி, "ஆ.."வென வாயை பிளந்து, உங்கள் பதிலை கேட்க ஆவலுற்றேன்.

    "டிஜிட்டல் கேமராவில் அத்வானியை படம் பிடித்து, இ-மெயிலில் அனுப்பி வைத்தேன்" என்ற உங்கள் பதிலை கேட்ட அடுத்த நொடி, அப்படியே டிவியை கட்டியணைத்தேன். எத்தனை நாட்கள்.. 'அன்ன ஆகாரம்' இன்றி அப்படியே கிடந்தேன் என்பதை அறியேன் நான்.

    1995ல் இந்தியாவில் அறிமுகமான இ-மெயிலையும், அமெரிக்காவில் மட்டுமே விற்பனையில் இருந்த டிஜிட்டல் கேமராவையும், பல வருடங்கள் முன்பே பயன்படுத்திய உங்கள் பராக்கிரமத்தை பார்த்து, பக்தாள் என்று சொல்லிக்கொள்வதில் பெருமிதம் கொண்டேன்.

    ஒருவேளை 'டங் ஸ்லிப்பாகி' 1997ல் நீங்கள் இ-மெயில் அனுப்பியதை 10 வருடங்கள் முன்பு அனுப்பியதாக வைத்துக் கொண்டாலும், ஒரு போட்டோ அனுப்ப 2 நாட்களாவது ஆக கூடிய ஆமை வேக இணையதள சேவைதான் அப்போது இருந்தது. எனது சிற்றறிவுக்கு எட்டியவரை, அந்த காலகட்டத்தில் அமெரிக்க ராணுவத்தில்தான், அதிவேக இணையதளம் இருந்தது.

    ஆதர்ஷ நாயகன் அத்வானிக்காக அமெரிக்காவுக்கு பிளேன் பிடித்து சென்று, அங்கேயிருந்து டெல்லியிலுள்ள, அமெரிக்க தூதரகத்திற்கு இமெயில் அனுப்பியிருந்தால்தான் அடுத்த நாள் பத்திரிக்கையில் அந்த படம் வருவது சாத்தியம். வாரே வாவ்.. இதை நினைத்து பார்க்கும்போதே, என் உடலெல்லாம் உங்களை நினைத்து புல்லரிக்கிறது. இவ்வளவு அர்ப்பணிப்பாளரையா நாம் பிரதமராக பெற்றோம்.

    ஆனால், நான் இந்த நூற்றாண்டில் கேட்டிராத, கனவிலும் நினைக்காத ஒரு பதிலை நீங்கள் சொன்னீர்களே நினைவிருக்கிறதா? நீங்க மறந்திருப்பீங்க. ஏன்னா உங்களுக்குதான் தற்பெருமை பிடிக்காதே. ஆனால், நாங்கள் எப்படி மறப்போம்?

    வின்சென்ட் சர்ச்சில் உங்கள் இடத்தில் இருந்தால் கூட விழுந்தடித்து ஓடியிருப்பார். "மேகமூட்டம் இருந்தால், பாகிஸ்தான் ரேடாரால் இந்திய போர் விமானங்களை கண்டறிய முடியாது" என்று ராணுவத்திற்கு உத்தரவிட்டதாக சொன்னீர்களே.. ப்பா.. எத்தனை ஜென்மம் என்றாலும் நீங்களே எங்கள் பிரதமராக வர வேண்டும் என்று இறைவனிடம் வேண்டிக்கொண்ட தருணம் அது.

    ரட்சகன் பட நாகார்ஜுன் போல எனது கைகளில் நரம்புகள் முறுக்கேறியது. "ஐன்ஸ்ட்டீனின் அண்ணனே.. கலாமின் காட்பாதரே.. விஞ்ஞான வித்தகரே.. வடக்கின் செல்லூராரே" இப்படியெல்லாம் எனது வாய் அனிச்சையாகவே அலறத் தொடங்கிய அற்புத நிமிடம் அது.

    இதுவரை எந்த விஞ்ஞானிகளாலும், பெண்டகன் தலைமையாலும் கண்டறிய முடியாத அற்புத விஞ்ஞானத்தை ஒரு பேட்டியில், ஜஸ்ட் லைக் தட் என்று தட்டிவிட்டுச் சென்ற இந்த ஸ்டைல் யாருக்கு வரும்?

    இந்த கருத்துக்கு, காப்புரிமை பெற வேண்டும் என்று கூட உங்களுக்கு தோணலியே தலைவா!! அற்புத இந்த கருத்துக்கு, அறிவுசார் சொத்துரிமை வாங்க அவசியமில்லை என்று நினைத்த பெருந்தன்மையை நினைத்து, நினைத்து, இந்த கடிதம் எழுதும்போது கூட கண்களில் கண்ணீர் மறைக்கிறது!!

    ஐயோ.. என்ன.. திடீரென எனது கைகள் நடுங்குகின்றனவே.. சாரி பிஎம் சார். இதற்கு மேல் என்னால் எழுத முடியவில்லை. உங்கள் பேட்டிகளின் நினைவு என்னை நிலைகுலைய வைத்துவிட்டது..! கைகள் நடுங்க, நா தழுதழுக்க உடலில் ஏதேதோ ரசாயன மாற்றம் நிகழ்வதை உணர முடிகிறது. இதற்கு முன்பு இப்படி நிகழ்ந்தது இல்லை என்பது மட்டும் புரிகிறது.

    - இப்படிக்கு உங்களின் அடுத்த அதிரடி பேட்டிக்கு காத்திருக்கும் பக்தன்.. ப்ப்பாய்ய்..!

    English summary
    A common man's letter to the PM Narendra Modi for his latest interviews and inventions about Radar is here.
     
     
     
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X