அகிலேஷுக்கு ரிப்பீட்டு... முலாயம்சிங் யாதவ் மருமகள் அபர்ணா பாஜகவில் இணைந்தார்!
டெல்லி: உத்தரப்பிரதேச அரசியலில் அடுத்த திருப்பமாக சமாஜ்வாதி கட்சி நிறுவனர் முலாயம்சிங் யாதவின் மருமகள் அபர்ணா (அபர்னா) யாதவ் இன்று பாஜகவில் இணைந்தார்.
உத்தரப்பிரதேச சட்டசபை தேர்தல் நடைபெறும் நிலையில் ஆளும் பாஜகவில் இருந்து கொத்து கொத்தாக அமைச்சர்கள், எம்.எல்.ஏக்கள் கட்சியைவிட்டு வெளியேறினர். அப்படி வெளியேறியவர்களில் பலரும் அகிலேஷ் யாதவின் சமாஜ்வாதி கட்சியில் இணைந்தனர்.

இதற்கு பதிலடி தந்துள்ளது பாஜக. சமாஜ்வாதி கட்சி நிறுவனர் முலாயம்சிங் யாதவின் மற்றொரு மகன் பிரதீப் யாதவின் மனைவி அபர்ணா யாதவ் (அபர்னா) இன்று பாஜகவில் இணைந்தார். டெல்லி பாஜக தலைமை அலுவலகத்தில் நடைபெற்ற நிகழ்ச்சியில் அக்கட்சியில் இணைந்தார் அபர்ணா யாதவ்.
முலாயம்சிங் யாதவின் 2-வது மனைவி சாதனா குப்தாவின் மகன் பிரதீப் யாதவ். அவரது மனைவிதான் அபர்ணா யாதவ். பிரதீப் யாதவுக்கும் அர்பணா யாதவுக்கும் 2011-ல் திருமணம் நடைபெற்றது. 2017-ல் லக்னோ கன்டோமெண்ட் தொகுதியில் அபர்ணா யாதவ் போட்டியிட்டு பாஜகவின் ரீட்டா பகுகுணாவிடம் தோல்வி அடைந்தார்.
பாஜகவில் இணைந்துள்ள அபர்ணா யாதவின் தந்தை அரவிந்த் சிங், பத்திரிகையாளர். அவரது தாய், தந்தை இருவரும் உ.பி. அரசில் அதிகாரிகளாக பணிபுரிகின்றனர். ஏற்கனவே என்.ஆர்.சி. விவகாரத்தில் பாஜகவுக்கு ஆதரவு தெரிவித்தவர் அபர்ணா. அதேபோல் ஜம்மு காஷ்மீருக்கு சிறப்பு அந்தஸ்து வழங்கிய அரசியல் சாசனத்தின் 370-வது பிரிவு நீக்கத்தையும் ஆதரித்தவர் அபர்ணா.