வீட்லதான் வேலை.. ஆபிசுக்கு அழைத்தால் ராஜினாமா.. ‛ஹைபிரிட்’ முறைக்கு ஆப்பிள் ஊழியர்கள் எச்சரிக்கை
டெல்லி: கொரோனா பரவலால் பல நிறுவனத்தினருக்கு ‛வொர்க் ப்ரம் ஹோம்' வாய்ப்பு வழங்கப்பட்டது. தற்போது பாதிப்பு குறைந்து வருவதால் ஊழியர்கள் நிறுவனங்களுக்கு அழைக்கப்பட்டு வருகின்றனர். இந்நிலையில் வாரம் 2 நாள் அலுவலகத்தில் கட்டாயம் பணி செய்ய வேண்டும் எனும் ஹைபிரிட் வொர்க் முறைக்கு ஆப்பிள் நிறுவன ஊழியர்கள் எதிர்ப்பு தெரிவித்து ராஜினாமா மிரட்டல் விடுத்துள்ளனர்.
சீனாவில் முதலில் தாக்குதலை தொடங்கிய கொரோனா வைரஸ், கடந்த 2 ஆண்டுகளாக ஒட்டுமொத்த உலகத்தையும் முடக்கி போட்டது. இந்நிலையில் தான் நிறைய நிறுவனங்கள் தங்கள் ஊழியர்களுக்கு 'வொர்க் ப்ரம் ஹோம்' வாய்ப்பு ஏற்படுத்தி கொடுத்தது.
தற்போது இந்தியா உள்பட பெரும்பாலான நாடுகளில் கொரோனா பாதிப்பு குறைந்து வருகிறது. மேலும் பாதிப்பும் குறைந்துள்ளது. இதனால் பல நிறுவனங்கள் மீண்டும் ஊழியர்களை நிறுவனங்களுக்கு அழைத்து வருகிறது.

ஆதரவும், எதிர்ப்பும்
இதுதொடர்பான அறிவிப்புகளை அந்தந்த நிறுவனங்கள் தங்கள் ஊழியர்களுக்கு வழங்கி வருகிறது. இதற்கு ஒருதரப்பினர் ஆதரவு தெரிவிக்கும் நிலையில், இன்னொரு தரப்பினர் எதிர்ப்பு தெரிவிக்கின்றனர். ஆதரவு தெரிவிக்கும் நபர்கள் வீட்டில் இருந்து பணி செய்வதால் கவனச்சிதறல்கள் ஏற்படுகிறது. அலுவலகத்தில் பணி செய்யும்போது இது ஏற்படாது என்கின்றனர். ஆனால் எதிர்ப்பு தெரிவிக்கும் நபர்கள் வீட்டில் இருந்து பணி செய்வது நல்ல வசதியாக உள்ளது. மேலும் நிறுவனங்களுக்கு செலவு ஏற்படவில்லை. இதனால் தொடர்ச்சியாக வீட்டில் இருந்து பணி செய்ய அனுமதிக்க வேண்டும் என்கின்றனர்.

தொடர் அனுமதி
இதையடுத்து சில நிறுவனங்கள் தொடர்ச்சியாக வீட்டில் இருந்து ஊழியர்களை பணியாற்ற வாய்ப்பு வழங்குகிறது. இதற்கு ஊழியர்கள் வீட்டில் இருந்து பணி செய்தாலும் உற்பத்தி திறன் பாதிக்கப்படுவதில்லை. ஊழியர்கள் கூடுதல் நேரம் பணி செய்கிறார்கள். அலுவலக மேலாண் செலவுகள் இல்லை என காரணங்களை கூறி வருகிறது.

ஆப்பிள் நிறுவனம் அதிரடி
இந்நிலையில் இந்த இரண்டையும் கலந்த ‛ஹைபிரிட் வொர்க்' முறையை ஆப்பிள் நிறுவனம் முன்வைக்கிறது. இதன்மூலம் சில நாட்கள் அலுவலகத்திலும், சில நாட்கள் வீடுகளிலும் இருந்து ஊழியர்கள் பணி செய்யலாம். ஆப்பிள் நிறுவனத்தில் இந்த புதிய நடைமுறை ஏப்ரல் 11ல் அமலுக்கு வரும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இதன்மூலம் மே 2ம் தேதி வரையில் வாரத்தில் 2 நாட்கள் அலுவலகத்தில் இருந்தும், மற்ற நாட்கள் வீட்டில் இருந்தும் பணியாளர்கள் பணி செய்ய முடியும். மே 23ம் தேதியில் இருந்து அலுவலகத்திற்கு வர வேண்டிய நாட்கள் 3 ஆக அதிகரிக்கப்படும் எனவும் அறிவிப்பு செய்யப்பட்டுள்ளது.

ஆலோசனை கூட்டம்
முன்னதாக இதுதொடர்பான ஆலோசனை கூட்டத்தில் ஆப்பிள் நிறுவன முதன்மை செயல் அதிகாரி டிம் குக் பேசினார். அப்போது அவர், "மீண்டும் அலுவலகத்திற்கு வந்து பணி செய்ய வேண்டும் என்பது நமது நீண்ட கால இலக்கு என்பது உங்களில் பலருக்கு தெரியும். இதை மேற்கொள்வதன் மூலம் நமது வாழ்க்கையில் முக்கிய பங்காற்றுகிற சக ஊழியர்களுடன் இணைந்து முழு மனதாக பணி செய்ய வாய்ப்பு கிடைக்கும். ஆனால் ஒரு சில ஊழியர்களுக்கு இது ஏற்க முடியாத சவாலாக இருக்கும்'' என்று கூறியிருந்தார்.

ஊழியர்கள் எதிர்ப்பு
இந்நிலையில் தான் ஹைப்ரிட் பணி முறைக்கு ஆப்பிள் நிறுவன ஊழியர்கள் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர். இதுபற்றி நியூயார்க் போஸ்ட் என்ற ஊடகம் செய்தி வெளியிட்டுள்ளது. அதில், ‛‛ஒரு நாள் கூட நான் இனி அலுவலகத்திற்கு வந்து வேலை செய்யமாட்டேன். அப்படி ஒன்று நடக்கவே நடக்காது. இந்த எண்ணத்தில் தான் பிற பணியாளர்கள் உள்ளனர்'' என ஒரு ஊழியர் கூறியதாக குறிப்பிடப்பட்டுள்ளது. இன்னொரு ஊழியரோ, ‛‛நாள் ஒன்றுக்கு 8 மணிநேரம் தொடர்ந்து ஒரே இடத்தில் அமர்ந்து பணி செய்வது மட்டுமல்லாமல், வேலைக்கு செல்வதற்காக பயணம் செய்யவும் நேரம் ஒதுக்க வேண்டும். இது என்னால் முடியாது. இதனால் ‛ஹைபிரிட் வொர்க்' முறை அமலுக்கு வந்த பிறகு ராஜினாமா கடிதம் அனுப்பி வைக்கப்படும்'' என தெரிவித்துள்ளார்.