அருணாச்சல பிரதேச எல்லையில்.. சீனா கட்டியது கிராமம் இல்லை, ராணுவ கேம்ப்.. வெளியான பரபர தகவல்
டெல்லி: அருணாச்சல பிரதேசத்தில் இந்தியச் சீனா எல்லையில் சர்ச்சைக்குரிய இடத்தில் சீனா மிகப் பெரிய ஒரு கிராமத்தையே கட்டியதாகத் தகவல் வெளியான நிலையில், அது கிராமம் இல்லை சீனாவின் ராணுவ கேம்ப் என்ற ஷாக் தகவல் வெளியாகியுள்ளது.
எல்லையில் இந்தியாவுக்கும் சீனாவுக்கும் இடையே கடந்த சில ஆண்டுகளாகவே தொடர்ந்து மோதல் போக்கே நிலவி வருகிறது. அதிலும் குறிப்பாக 2020இல் ஏற்பட்ட கல்வான் மோதல் நிலைமையை மேலும் மோசமாக்கியது.
சென்னை உள்ளிட்ட 14 மாவட்டங்களுக்கு ஆரஞ்சு அலர்ட்.. 7 மாவட்டங்களுக்கு மஞ்சள் அலர்ட்.. முழு பின்னணி!
இதனால், காஷ்மீர் எல்லையில் இந்தியா மற்றும் சீனா என இரு நாட்டு ராணுவமும் எல்லையில் அதிகப்படியான ராணுவ வீரர்களைக் குவித்து வந்தனர்.

எல்லை நிலைமை
காஷ்மீர் எல்லையில் இன்னும் நிலைமை சரியாகாத நிலையில், தற்போது அருணாச்சல பிரதேசத்திலும் இருதரப்பு ராணுவமும் தங்கள் வீரர்களையும் தளவாடங்களையும் குவித்து வருகிறது. குறிப்பாக, சீன ராணுவம் அருணாச்சல பிரதேச எல்லையில் உள்கட்டமைப்பில் முதலீடு செய்து வருவதாகத் தகவல் வெளியானது. மேலும், அவ்வப்போது சீன ராணுவம் இந்திய எல்லைக்கு உட்பட்ட பகுதிகளிலும் அத்துமீறி வருகின்றனர்.

அருணாச்சல பிரதேசம்
இந்நிலையில் அருணாச்சல பிரதேசத்தில் இரு நாடுகளுக்கும் இடையே உள்ள சர்ச்சைக்குரிய இடத்தில் சீனா ஒரு மிகப் பெரிய கிராமத்தையே கட்டியுள்ளதாக பென்டகன் கடந்த வாரம் அறிக்கை அளித்துள்ளது. அமெரிக்காவின் பாதுகாப்புத் துறையான பென்டகன் அந்நாட்டு நாடாளுமன்றத்தில் சமர்ப்பித்துள்ள அறிக்கையில், "கடந்த ஆண்டு மே மாதம் தொடங்கி இந்தியாவின் கட்டுப்பாட்டில் உள்ள பல இடங்களில் சீனா ராணுவம் அத்துமீறி நுழைந்துள்ளது.

பெரிய கிராமம்
பிரச்சினைக்குரிய இடமாகக் கருதப்படும் சாரி ஆற்றின் கரையில் கடந்த ஆண்டு சீனா 100 குடும்பங்கள் வாழக்கூடிய கிராமம் ஒன்றைக் கட்டமைத்தது. இந்த பகுதி சீனாவின் ஆளுகைக்கு உட்பட்ட திபத் மற்றும் இந்தியாவின் அருணாச்சல பிரதேசத்தின் கிழக்கு செக்டார் ஆகிய பகுதிகளுக்கு நடுவில் வருகிறது. எல்லையில் சர்ச்சைக்குரிய இடத்தில் நடைபெறும் சீனாவின் இந்த கட்டுமானம் இந்திய அரசுக்குக் கவலையை ஏற்படுத்தும் வகையில் உள்ளது" என்று அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.
Recommended Video

கிராமம் இல்லை ராணுவ கேம்ப்
இந்திய எல்லையில் சீனா கட்டியுள்ளது கிராமம் என்று கூறப்பட்டாலும் கூட இதைச் சீனா தனது நிரந்தர ராணுவம் முகாமாக மாற்றியுள்ளதாக மூத்த ராணுவ அதிகாரி ஒருவர டைம்ஸ் ஆப் இந்தியா நிறுவனத்திடம் குறிப்பிட்டுள்ளார். இது தொடர்பாக அருணாச்சல பிரதேச அப்பர் சுபன்சிரியின் பிரிவில் பணியமர்த்தப்பட்டுள்ள துணை ஆணையர் டைம்ஸ் ஆப் இந்தியாவிடம் கூறுகையில், "கடந்த 2020இல் நாங்கள் இந்த இடத்தை ஆய்வு செய்த போது புதிய கட்டுமானங்கள் மக்கள் வாழும் பகுதிக்கு வெகு தொலைவில் இருந்தது

வெறும் சில ஆண்டுகளில்
ஆனால், அது மக்கள் வாழும் கிராமத்தைப் போலவே இல்லை. ராணுவ தேவைகளுக்காகக் கட்டப்பட்டதை போலவே இருந்தது. அங்கு முழுவதும் பெரிய பெரிய கட்டிடங்கள் இருந்தன. பொதுவாகக் கிராமங்களில் வீடுகளில் இந்தளவு பெரிய கட்டிடங்கள் இருக்காது. கடந்த 1962 போர் சமயத்தில் சீனா இந்த பகுதியை ஆக்கிரமித்தது. அப்போது அங்குச் சிறிய வீடுகள் மட்டுமே இருந்தன. இப்போது தான் அவர்கள் ராணுவ கட்டுமானத்தை ஏற்படுத்தியுள்ளனர்" என்று தெரிவித்தார்.

எந்த இடம்
கிராமம் போல இருக்கும் கட்டுமானத்தைச் சீனா கட்டியுள்ளதாகச் சொல்லப்படும் இடம் 1962 போருக்கு முன்பு வரை இந்தியாவின் கட்டுப்பாட்டில் இருந்தது. மாசா கேம்ப் என்று அழைக்கப்பட்ட அந்த பகுதி தான், சீனா எல்லையில் இந்தியாவின் கடைசி பகுதியாக இருந்தது. போருக்குப் பிறகு சீனா அந்த இடத்தை ஆக்கிரமித்தது. அதில் பல ஆண்டுகள் வரை எவ்வித கட்டுமானங்களும் இல்லாத நிலையில், கடந்த சில ஆண்டுகளில் சீனா எல்லையில் மிகப் பெரிய அளவில் உள்கட்டமைப்பை ஏற்படுத்தியுள்ளது.