டெல்லி அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Oneindia App Download

அசாம் தேசிய மக்கள் பதிவேடு: மத்திய அரசை விட்டு விளாசிய உச்சநீதிமன்றம்.. சாட்டையடி கேள்விகள்

Google Oneindia Tamil News

டெல்லி: அசாமில் தேசிய குடிமக்கள் பதிவேட்டு (NRC) பணிகளை நடத்துவதில் மத்திய உள்துறை அமைச்சகத்திற்கு அக்கறை இல்லை என்று உச்சநீதிமன்றம் கடும் கண்டனத்தை பதிவு செய்துள்ளது.

அசாம் மாநிலம் வங்கதேசத்தை ஒட்டி அமைந்துள்ளதால் அங்கு வங்கதேசத்தைச் சேர்ந்த அகதிகள் குடியேறி விடுகின்றனர். இதனால் யார் உண்மையான அசாம்வாசிகள் என்பதில் குழப்பம் நீடித்து வருகிறது.

இந்த குழப்பத்தை தீர்ப்பதற்காக அங்கு தேசிய குடிமக்கள் பதிவேட்டை அசாம் மாநில அரசு தயார் செய்து வருகிறது. 1971ம் ஆண்டு மார்ச் 25க்கு முன்பிருந்தே அந்த மாநிலத்தில் வசிப்பவர்களின் பெயர்களை தொகுப்பதே இந்தப் பட்டியலின் நோக்கம்.

குழப்பமான பட்டியல்

குழப்பமான பட்டியல்

தேசிய குடிமக்கள் பதிவேட்டின் முதல் வரைவுப் பட்டியல் 2017ம் ஆண்டு, டிசம்பர் 31 நள்ளிரவில் வெளியானது. அதில் வெறும் 1.9 கோடி பெயர்களே இருந்தன. இந்தப் பதிவேட்டில் இடம் பெற விண்ணப்பித்த மக்களின் எண்ணிக்கை 3.29 கோடி என்பதால், இந்த வரைவை பார்த்து மக்கள் அதிர்ச்சியடைந்தனர். பல கோடி பேர் இந்திய குடியுரிமையை இழக்கும் அபாயம் ஏற்பட்டது.

இந்துக்களை சேர்க்க முயற்சி

இந்துக்களை சேர்க்க முயற்சி

இதையடுத்து, இரண்டாவது மற்றும் கடைசி வரைவுப்பட்டியல் கடந்த ஜூலை மாதம் வெளியானது. இந்தப் பதிவேட்டில் இடம் பெற விண்ணப்பித்த மக்களின் எண்ணிக்கை 3.29 கோடி. ஆனால், பட்டியலில் 2.89 கோடி பெயர்கள் மட்டுமே இடம் பெற்றிருந்தன. 40 லட்சம் பேர் குடியுரிமை இழக்கும் சூழல் எழுந்தது. மேலும், தேசிய குடிமக்கள் பதிவேடு வரைவு பட்டியலில் வங்கதேசத்தை சேர்ந்த இந்துக்களின் பெயர்களை சேர்க்கும் முயற்சியில் அசாமை ஆளும் பாஜக அரசு ஈடுபட்டுள்ளதாக எதிர்க்கட்சிகள் குற்றம்சாட்டின.

உச்சநீதிமன்றம் நேரடி கண்காணிப்பு

உச்சநீதிமன்றம் நேரடி கண்காணிப்பு

இதையடுத்து, பெயர்கள் விடுபட்டவர்கள் ஆட்சேபனை மனுக்களை அளித்துள்ளனர். அதுதொடர்பாக உச்சநீதிமன்றத்தின் நேரடி கண்காணிப்பில், கணக்கெடுப்பு பணிகளில், மத்திய உள்துறை அமைச்சகம் ஈடுபட்டு வருகிறது. வரும் ஜூலை 31ம் தேதிக்குள், கணக்கெடுப்பு பணிகளை முடிக்க வேண்டும் என்று சுப்ரீம் கோர்ட் ஏற்கனவே மத்திய உள்துறை அமைச்சகத்திற்கு உத்தரவிட்டுள்ளது. இந்த நிலையில், லோக்சபா தேர்தல் நடைபெற உள்ளதால், கணக்கெடுப்பு பணியை சில காலம் நிறுத்தி வைக்க அனுமதிக்குமாறு, மத்திய அரசு சுப்ரீம் கோர்ட்டில் கோரிக்கைவிடுத்தது. ஆனால், இதற்கு சுப்ரீம் கோர்ட்டின் தலைமை நீதிபதி ரஞ்சன் கோகாய் மற்றும் ஆர்.எப்.நாரிமன் அமர்வு கடும் கண்டனத்தை தெரிவித்துள்ளது.

உச்சநீதிமன்றத்தில் மத்திய அரசு பதில்

உச்சநீதிமன்றத்தில் மத்திய அரசு பதில்

மத்திய அரசு சார்பில் ஆஜரான அட்டார்னி ஜெனரல் கே.கே.வேணுகோபால், லோக்சபா தேர்தலுக்கான வேட்பாளர் வாபஸ் பெறும் கடைசி நாளில் இருந்து, தேர்தல் முடிந்த 2 வாரங்கள் வரை, தேசிய குடிமக்கள் பதிவேட்டு பணிகள், நிறுத்தி வைக்கப்படும் . மத்திய ஆயுதப்படையின் 167 கம்பெனியினர் தேசிய குடிமக்கள் பதிவேட்டு பணி பாதுகாப்பில் ஈடுபட்டுள்ளனர். தேர்தலுக்காக அவர்களை திரும்ப பெற வேண்டியுள்ளதால், இப்பணிகளை நிறுத்தி வைக்க முடிவு செய்துள்ளோம், என நீதிமன்றத்தில் தெரிவித்தார்.

தலைமை நீதிபதி கோபம்

தலைமை நீதிபதி கோபம்

இதனால், தலைமை நீதிபதி ரஞ்சன் கோகாய் ஆத்திரமடைந்தார். இந்த பணியை செய்து முடிக்க 1001 வழிகள் மத்திய அரசுக்கு உள்ளது. ஆனால், கணக்கெடுப்பு பணியை செய்ய மத்திய உள்துறை அமைச்சகத்திற்கு விருப்பம் இல்லை என தெரிகிறது. என்னைப் பொறுத்தளவில், கணக்கெடுப்பு பணியை கெடுப்பதில்தான், உள்துறை அமைச்சகம் குறியாக இருப்பதாக தெரிகிறது. அரசு ஒத்துழைக்காவிட்டால், உள்துறை செயலாளருக்கு சம்மன் அனுப்ப வேண்டியிருக்கும். பரவாயில்லையா? என்று சரமாரியாக கேள்விக்கணைகளை தொடுத்தார் ரஞ்சன் கோகாய்.

பாதுகாப்பு படை

பாதுகாப்பு படை

இதற்கு பதிலளித்த வேணுகோபால், "கடந்த லோக்சபா தேர்தலின்போது 2500 கம்பெனி பாதுகாப்பு படையினர் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டனர். இம்முறை, 2700 கம்பெனியாவது தேவைப்படும். எனவேதான், அசாமிலிருந்து 167 கம்பெனியினரை திரும்ப பெற நினைக்கிறோம்" என்றார். அப்போது குறுக்கிட்ட தலைமை நீதிபதி, நாட்டில் மொத்தம் எத்தனை கம்பெனி மத்தியப்படை உள்ளது என்று வினவினார். இதற்கு பதிலளித்த உள்துறை அமைச்சக இணை செயலாளர், மொத்தம் 3000 கம்பெனிகள் உள்ளன என்று பதிலளித்தார்.

இது பெரிய விஷயமா

இது பெரிய விஷயமா

இந்த பதிலை கேட்டதும், "மொத்தம் 3000 கம்பெனி பாதுகாப்பு படை இருக்குமாயின், 2700 கம்பெனியை லோக்சபா தேர்தல் பணிக்கு பயன்படுத்திவிட்டு 167 கம்பெனி படையை, அசாமில் பயன்படுத்துவதில் என்ன சிக்கல் இருக்க முடியும்" என்று வினவினார் தலைமை நீதிபதி. இதற்கு பதிலளித்த உள்துறை இணை செயலாளர், 3000 கம்பெனி என்பது, எல்லை பாதுகாப்பில் ஈடுபடும் படைகளையும் சேர்த்த கணக்கு என்றார். இதையடுத்து குறுக்கிட்ட தலைமை நீதிபதி, "தேர்தலும், தேசிய குடிமக்கள் பதிவேட்டு பணியும் ஒரே நேரத்தில் நடத்தப்படுவது என்பது மிகப்பெரிய எதிர்பார்ப்புக்குரியதா? இரு பணிகளும் ஒரே நேரத்தில் அமைதியாக நடக்க வேண்டும். நாங்கள், ஏற்கனவே உத்தரவிட்ட காலக்கெடுவிற்குள், கணக்கெடுப்பு பணியை முடித்தாக வேண்டும். காலக்கெடுவை இனி நீடிக்க முடியாது.

இரு பணிகளும் நடக்க வேண்டும்

இரு பணிகளும் நடக்க வேண்டும்

தேர்தலும், தேசிய குடிமக்கள் பதிவேட்டு பணியும், இரண்டுமே நாட்டுக்கு முக்கியமானது. எனவே இரு பணிகளும் ஒரு சேர நடக்க வேண்டும். இவ்வாறு தலைமை நீதிபதி தெரிவித்தார். அதேநேரம், அட்டார்னி ஜெனரல் கூறியதை நீதிமன்றம் கருத்தில் எடுப்பதாகவும், ஆனால், இதில் இடைக்கால உத்தரவு எதையும் பிறப்பிக்கப்போவதில்லை என்றும் உச்சநீதிமன்றம் உறுதியாக தெரிவித்துவிட்டது.

English summary
The Supreme Court on Tuesday slammed the Centre after it sought suspension of the NRC work in Assam. The government said that it wanted suspension of the work from the date of notification of the Lok Sabha elections to two weeks after voting.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X