2 தொகுதிகளில் போட்டியிடக் கூடாது.. இல்லையெனில்.. முக்கிய தலைவர்களுக்கு செக் வைக்கும் தேர்தல் ஆணையம்!
டெல்லி : தேர்தலில் ஒரு தொகுதிக்கு மேல் போட்டியிட வேட்பாளர்களுக்கு தடை விதிக்க வேண்டும் என மத்திய அரசுக்கு தேர்தல் ஆணையம் வேண்டுகோள் விடுத்துள்ளது.
இரண்டு தொகுதிகளில் போட்டியிடும் வேட்பாளர் இரண்டிலும் வெற்றி பெற்றால், ஒரு தொகுதியில் ராஜினாமா செய்யும் விதியால் மீண்டும் தேர்தல் நடத்த வேண்டிய நிலை உருவாகிறது.
இதனால் அரசின் பணம் மற்றும் தேர்தல் ஆணையத்திற்கு நேர விரயம் ஏற்படுவதோடு, அந்தத் தொகுதி மக்களின் தேர்வுக்கும் அநீதி இழைக்கப்படுவதாக தேர்தல் ஆணையம் கருத்தை முன்வைத்துள்ளது.
குடியரசுத் தலைவர் தேர்தல்.. திட்டத்தை தொடங்கிய பாஜக.. 14 பேர் கொண்ட குழு அமைப்பு

தேர்தல்
தேர்தல்களில் வேட்பாளர்கள் இரு தொகுதிகளில் போட்டியிட தடை விதிக்க வேண்டும் என்றும், இல்லையென்றால், இரண்டு தொகுதிகளில் வென்று ஒன்றில் இடைத்தேர்தலுக்கு காரணமாகும் வேட்பாளர்களுக்கு மிக அதிக தொகையை அபராதமாக விதிக்க வேண்டும் என மத்திய அரசிடம் தேர்தல் ஆணையம் வலியுறுத்தியுள்ளது. சட்ட அமைச்சகத்தில் உள்ள சட்டமன்றச் செயலாளரிடம் தலைமைத் தேர்தல் ஆணையர் ராஜீவ் குமார் இதுகுறித்து வலியுறுத்தியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

எத்தனை தொகுதியில் வேண்டுமானாலும்
இன்றைய தேர்தல் சட்டப்படி, பொதுத் தேர்தல் அல்லது இடைத்தேர்தலில் இரண்டு வெவ்வேறு தொகுதிகளில் இருந்து தேர்தலில் போட்டியிட ஒரு வேட்பாளர் அனுமதிக்கப்படுகிறார். ஒரு நபர் ஒன்றுக்கு மேற்பட்ட இடங்களில் இருந்து தேர்ந்தெடுக்கப்பட்டால், அந்த நபர் வெற்றி பெற்ற இடங்களில் ஒன்றைத் தவிர மற்றதை ராஜினாமா செய்ய வேண்டும். அங்கு மீண்டும் இடைத்தேர்தல் நடத்தப்படும்.1996 ஆம் ஆண்டில், மக்கள் பிரதிநிதித்துவச் சட்டம் ஒரு நபர் இரண்டு இடங்களுக்கு மேல் தேர்தலில் போட்டியிடுவதைக் கட்டுப்படுத்தும் வகையில் திருத்தப்பட்டது. அதற்கு முன்பெல்லாம் ஒரு வேட்பாளர் போட்டியிடும் தொகுதிகளின் எண்ணிக்கையில் எந்த கட்டுப்பாடும் இல்லை.

இரண்டு தொகுதிகளுக்கு மேல்
தேர்தல்களில் இரண்டு தொகுதிகளுக்கு மேல் போட்டியிட கட்டுப்பாடு விதிக்கும் வகையில் மக்கள் பிரதிநிதித்துவ சட்டத்தில் கடந்த 1996-ஆம் ஆண்டு திருத்தம் செய்யப்பட்டது. அதன் பின் ஒரு தொகுதிக்கு மேல் போட்டியிட தடை விதிக்கும் வகையில் மக்கள் பிரதிநிதித்துவ சட்டத்தில் திருத்தம் கொண்டு வர வேண்டும் என தேர்தல் ஆணையம் கடந்த 2004-ஆம் ஆண்டு கூறியது. ஆனால், இந்தத் திருத்தம் மேற்கொள்ளப்படவில்லை.

தலைமை தேர்தல் ஆணையர்
இந்நிலையில் மத்திய சட்ட அமைச்சக செயலாளருடன், தலைமை தேர்தல் ஆணையர் ராஜீவ் குமார் சமீபத்தில் கலந்துரையாடினார். அப்போது கடந்த 2004-ம் ஆண்டு தெரிவிக்கப்பட்ட பரிந்துரையை, மீண்டும் வலியுறுத்தியுள்ளார். இரண்டு தொகுதிக்கு மேல் போட்டியிட தடை விதிக்க முடியவில்லை என்றால், இரு தொகுதிகளிலும் வென்று, ஒரு தொகுதியில் ராஜினாமா செய்து இடைத் தேர்தலுக்கு காரணமாகும் வேட்பாளருக்கு மிக அதிக தொகை அபராதமாக விதிக்க வேண்டும் அல்லது இடைத்தேர்தலுக்கான செலவை ஏற்க வைக்க வேண்டும் என தலைமை தேர்தல் ஆணையர் தெரிவித்துள்ளதாக கூறப்படுகிறது.

சட்ட ஆணையம் ஆதரவு
சிக்கலான சட்ட சிக்கல்களில் அரசுக்கு ஆலோசனை வழங்கும் மத்திய சட்ட ஆணையம், வேட்பாளர்கள் ஒரு தொகுதிக்கு மேல் போட்டியிட தடை விதிக்கும் திட்டத்துக்கு ஆதரவு தெரிவித்தது. ஆனால், இரு தொகுதிகளிலும் வெற்றி பெறும் வேட்பாளர்கள், இடைத்தேர்தல் செலவுக்கு நிகரான தொகையை டெபாசிட் செய்ய வேண்டும் என்ற தேர்தல் ஆணையத்தின் முன்மொழிவுக்கு ஒப்புதல் அளிக்கவில்லை.

பிரதமர் மோடி
முக்கிய அரசியல் தலைவர்கள் பலர் ஒன்றுக்கு மேற்பட்ட தொகுதிகளில் தேர்தலில் போட்டியிடும் நிகழ்வுகள் நடந்துள்ளன. 2014 மக்களவைத் தேர்தலில், பிரதமர் நரேந்திர மோடி குஜராத்தின் வதோதரா மற்றும் உத்தர பிரதேசத்தின் வாரணாசி ஆகிய இரண்டு தொகுதிகளில் போட்டியிட்டார். அவர் இரண்டு இடங்களிலும் வெற்றி பெற்ற நிலையில், வதோதரா தொகுதி எம்.எல்.ஏ பதவியை ராஜினாமா செய்தார்.

ராகுல் காந்தி
2019 மக்களவைத் தேர்தலில் காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி உத்தர பிரதேசத்தின் அமேதி தொகுதி மற்றும் கேரளாவின் வயநாடு ஆகிய தொகுதிகளில் போட்டியிட்டார். அமேதியில் போட்டியிட்டு தோல்வியடைந்த ராகுல் காந்தி, வயநாடு தொகுதியின் நாடாளுமன்ற உறுப்பினரானார். முக்கிய தலைவர்கள் பலர் இரண்டு தொகுதிகளில் நிற்கும் முறைக்கு செக் வைக்க தேர்தல் ஆணையம் திட்டமிட்டுள்ளது.