2024 தேர்தல்..தென்னிந்தியாவின் 129 லோக்சபா தொகுதிகளுக்கு டார்கெட்- அமித்ஷா ஸ்கெட்ச்..பரபரக்கும் பாஜக
டெல்லி: 2024 லோக்சபா தேர்தலில் தென்னிந்திய மாநிலங்களில் உள்ள 129 லோக்சபா குறிவைத்து இப்போதே பாஜக பரபரப்பாக செயல்பட தொடக்கிவைத்தது. தென்னிந்தியாவில் கணிசமான தொகுதிகளை கைப்பற்ற வேண்டும் என்பதற்காக உள்துறை அமைச்சர் அமித்ஷா போட்டுக் கொடுத்த ஸ்கெட்ச்சை கச்சிதமாக நிறைவேற்றி வருகிறார் பாஜக தேசிய தலைவர் ஜேபி நட்டா.
பாஜக ஆரம்பித்த 1980களில் இருந்தே தென்னிந்தியாவில் காலூன்றுவதற்கு பகீரத பிரயத்தனம் செய்து வருகிறது. ஆனால் வட இந்தியாவில் வெற்றி கொடி பறக்கவிட்ட காவி கொடியால் தென்னிந்தியாவில் பெரிய அளவுக்கு சாதிக்க முடியவில்லை. தென்னிந்திய மாநிலங்களில் கர்நாடகாவில்தான் பாஜக பெரும் போராட்டங்களுக்குப் பிறகு, எம்.எல்.ஏக்களை, தலைவர்களை வளைத்து போடும் யுக்திகளால் ஆட்சியை கைப்பற்ற முடிந்திருக்கிறது.

டார்கெட் தென்னிந்தியா
தமிழ்நாடு, கேரளா, தெலுங்கானா, ஆந்திராவில் கண்ணுக்கெட்டிய தலைவில் பாஜக எங்கே இருக்கிறது என்பதாகத்தான் நிலைமை இருக்கிறது. பாஜகவின் இந்துத்துவா சித்தாந்தமானது தென்னிந்திய மக்களிடையே பெரிய அளவில் தாக்கத்தை ஏற்படுத்த முடியவில்லை.இந்த நிலைமையை எப்படியாவது மாற்றிவிட வேண்டும் என்பதில் ஒவ்வொருமுறையும் பாஜக மேலிடம் தீவிரமாகத்தான் முயற்சிக்கிறது. ஆனாலும் பாஜகவின் செயல் திட்டம்தான் ஒர்க் அவுட் ஆவது இல்லை.

தெலுங்கானா, ஆந்திரா
தற்போது 2024-ம் ஆண்டு லோக்சபா தேர்தலை முன்வைத்து பாஜக தென்னிந்திய தொகுதிகளுக்கு குறிவைத்துள்ளது. இதற்கான ஸ்கெட்ச்சை உள்துறை அமைச்சர் போட்டுக் கொடுக்க பக்காவாக நிறைவேற்றும் முனைப்பில் இருக்கிறார் பாஜக தேசியத் தலைவர் ஜேபி நட்டா. தற்போதைய நிலையில் தெலுங்கானாவில் டி.ஆர்.எஸ். என்கிற ஒற்றை கட்சிதான் ஆளும் கட்சியாகவும் எதிர்க்கட்சியாகவும் ஜொலிக்கிறது. அம்மாநிலத்தில் டி.ஆர்.எஸ். கட்சிக்கு போட்டியே இல்லை என்கிற நிலை இருக்கிறது. இந்த வெற்றிடத்தை கைப்பற்றித்தான் தீருவது என்பதில் பாஜக படு மும்முரமாக இருக்கிறது. ஆந்திராவில ஒய்.எஸ்.ஆர். காங்கிரஸுக்கு எதிரான தெலுங்குதேசம் கட்சி களத்தில் இருந்தாலும் தொய்வாகத்தான் இருக்கிறது. ஆகையால் தெலுங்கானா, ஆந்திராவில் சில இடங்களை அறுவடை செய்ய மும்முரமாக இருக்கிறது பாஜக.

தமிழகம், கேரளா
தமிழகம், கேரளாவில் பாஜகவுக்கான வெற்றி என்பது சாத்தியங்களுக்கு அப்பாற்பட்டதுதான். குருவி உட்கார பனம்பழம் விழுந்த கதைக்காகவே பாஜக இப்போது இரு மாநிலங்களிலும் காத்திருக்கிறது. பனம் பழம் கிடைக்கும் வகையில் ஏதேனும் குருவி, பாஜகவுக்கு கிடைக்குமா எனவும் வலைவீசி காத்துக் கொண்டிருக்கின்றனர்.

ஜரூர் மோடில் பாஜக
இந்நிலையில்தான் பிரதமர் மோடி, உள்துறை அமைச்சர் அமித்ஷா மற்றும் மத்திய அமைச்சர்கள் பலரும் அடுத்தடுத்து தென்னிந்திய மாநிலங்களில் பல்வேறு திட்டப் பணிகளுக்கு அடிக்கல் நாட்டுதல், தொடங்கி வைத்தல் என்ற பெயரில் பவனி வரத் தொடங்கி உள்ளனர். கடந்த காலங்களில் தேர்தல்களுக்கு சில மாதங்களுக்கு முன்னர் இத்தகைய விழாக்களை பாஜக நடத்தும்; தென்னிந்தியாவில் இப்போது 2 ஆண்டுகளுக்கு முன்னரே பாஜக தொடங்கிவிட்டது; ஆனாலும் பாஜக எதிர்பார்க்கிற அறுவடைதான் கிடைக்குமா? என தெரியவில்லை என்கின்றனர் மூத்த பத்திரிகையாளர்கள்.