பாஜக பலம் சரியும்.. வெறும் ரெண்டே மாதங்களில் பறிபோன பெருமை - ஜூன் 10ல் காத்திருக்கும் அதிர்ச்சி!
டெல்லி : 57 மாநிலங்களவை எம்.பி இடங்களுக்கான தேர்தல் வரும் ஜூன் 10ஆம் தேதி நடைபெறவிருக்கும் நிலையில், பாஜகவின் 100 ராஜ்ய சபா எம்பி எண்ணிக்கையில் சரிவு ஏற்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.
மாநிலங்களவையில் காலியாக உள்ள 57 இடங்களுக்கான தேர்தல் வரும் ஜூன் 10ஆம் தேதி நடைபெறவுள்ளது. 15 மாநிலங்களில் நடைபெறும் இந்தத் தேர்தலுக்கான வேட்பாளர்கள் வேட்பு மனுக்களைத் தாக்கல் செய்து வருகின்றனர்.
இலங்கையில் அதிக மின்சாரம் பயன்படுத்துபவர்களுக்கு 3 மடங்கு கட்டணத்தை உயர்த்த திட்டம்
இந்நிலையில், 30 ஆண்டுகளுக்குப் பிறகு ராஜ்ய சபாவில் 100 எம்பிகளை கொண்ட கட்சி எனும் பெருமையை கடந்த ஏப்ரல் மாதம் பிடித்த பாஜக இரண்டே மாதங்களில் அந்தப் பெருமையை இழக்கப் போகிறது.

55ல் இருந்து 100
கடந்த 2014ஆம் ஆண்டு மோடி தலைமையிலான பாஜக அரசு முதன்முறையாக மத்தியில் ஆட்சி அமைத்தபோது மாநிலங்களவையில் அக்கட்சியின் எம்.பிக்கள் பலம் 55 ஆக இருந்தது. அதைத்தொடர்ந்து பல்வேறு மாநிலங்களில் பாஜக ஆட்சியைக் கைப்பற்றியதையடுத்து இந்த எண்ணிக்கை படிப்படியாக உயர்ந்து 97 ஆக அதிகரித்தது. கடந்த ஏப்ரல் மாதம் இந்த எண்ணிக்கை 100ஐ எட்டியது.

31 ஆண்டுகளில்
கடந்த ஏப்ரல் மாதம் 13 மாநிலங்களவை உறுப்பினர் பதவிக்காக 6 மாநிலங்களில் தேர்தல் நடைபெற்றது. அசாம், திரிபுரா மற்றும் நாகாலாந்து மாநிலங்களில் மாநிலங்களவை தேர்தலில் தலா ஒரு இடத்தில் பாஜக வெற்றி பெற்றது. இதன் மூலம், மாநிலங்களவையில் பாஜக எம்பிக்களின் பலம் 100ஐ எட்டியது. கடந்த 31 ஆண்டுகளில் காங்கிரஸ் உட்பட எந்த கட்சியும் எட்டாத சாதனை இது.

100 எம்.பி மைல்கல்
கடந்த 1990ஆம் ஆண்டில் அப்போதை ஆளுங்கட்சியான காங்கிரஸ் கட்சிக்கு மாநிலங்களவையில் 108 எம்.பிக்கள் இருந்தனர். அதன் பின்னர் இந்த ஏப்ரலில் தான் ஒரு கட்சி மாநிலங்களவையில் 100 எம்.பிக்களை பெற்றது. இதன்மூலம் கடந்த 30 ஆண்டுகளில் பிறகு மாநிலங்களையில் 100 உறுப்பினர்களை கொண்ட முதல் கட்சி என்னும் சாதனையை பா.ஜ.க படைத்தது.

பெரும்பான்மை
பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணிக்கு மக்களவையில் அறுதிப் பெரும்பான்மை இருந்தாலும் மாநிலங்களவையில் பெரும்பான்மை இல்லாதது பிரச்சனையாக உள்ளது. குறிப்பாக பல்வேறு முக்கிய மசோதாக்களை நிறைவேற்றுவதற்கு இது பெரும் தடையாக உள்ளது. மாநிலங்களவையில் மொத்த உறுப்பினர்களின் எண்ணிக்கை 245. இதில் சரிபாதிக்கும் மேற்பட்ட உறுப்பினர்கள் தங்கள் கூட்டணியைச் சேர்ந்தவர்களாக இருந்தால் எந்த மசோதாவையும் எளிதில் நிறைவேற்றிவிட முடியும்.

பாஜகவின் 24 இடங்கள்
ஆனால், வரும் ஜூன் 10ஆம் தேதி 57 இடங்களுக்கு நடைபெறும் தேர்தலில் 24 இடங்கள் பாஜக வசம் உள்ளவை. இந்த இடங்கள் உள்ள சத்தீஸ்கர், ராஜஸ்தான், ஜார்கண்ட், மகாராஷ்டிரா, ஆந்திரா ஆகிய மாநிலங்களில் பாஜகவுக்கு ஏற்கனவே இருந்த அளவு எம்.பிக்களை தேர்ந்தெடுக்கும் அளவுக்கு அக்கட்சிக்கு எம்.எல்.ஏக்கள் ஆதரவு இல்லை. இதனால், ராஜஸ்தான், சத்தீஸ்கர், ஜார்கண்ட் மற்றும் மகாராஷ்டிரா ஆகிய மாநிலங்களில் பாஜக எம்பி சீட்களை இழக்க வாய்ப்புள்ளது.

மீண்டும் 100-ஐ தொடுவது கடினம்
இந்த தேர்தலுக்கு பிறகு ராஜ்யசபாவில் பாஜகவின் பலம் 91 ஆகக் குறையும் என எதிர்பார்க்கப்படுகிறது. ஏழு நியமன எம்.பி இடங்கள் காலியாக உள்ளன. அவற்றை சேர்த்தாலும் கூட பாஜகவால் 98 எம்.பிகளையே பெற முடியும். இதனால் மீண்டும் 100-ஐ எட்டுவது கடினம். ஆனால், கடைசி நேரத்தில் பாஜகவுக்கு ஆதரவாக நிலைமை மாற வாய்ப்புள்ளதாகவும் கூறப்படுகிறது.

எதிர்க்கட்சிகள் திட்டம் பலிக்காது
ஆனாலும், பா.ஜ.கவுக்கு கூட்டணி கட்சி எம்.பிகளின் ஆதரவும் இருப்பதால் எதிர்க்கட்சிகளால் பெரிதாக ஒன்றையும் தடுக்க முடியாது. இதுகுறித்து மத்திய இணை அமைச்சர் வி.முரளீதரன், "நாங்கள் தற்போது மாநிலங்களவையில் போதுமான எண்ணிக்கையில் எம்.பிகளை கொண்டிருக்கிறோம். முக்கிய மசோதாக்களை தடுத்து சிக்கல்களை உருவாக்கும் எதிர்க்கட்சிகளின் முயற்சிகள் வெற்றியடையாது" எனத் தெரிவித்துள்ளார்.