மத்திய பாஜக அரசின் விவசாய சட்டங்களுக்கு எதிராக ஜூலை 9, 10-ல் டிராக்டர்கள் பேரணி- ராகேஷ் திகாயத்
டெல்லி: மத்திய பாரதிய ஜனதா கட்சி அரசின் (பா.ஜ.க.) விவசாய சட்டங்களுக்கு எதிராக ஜூலை 9, 10-ல் மேலும் 2 டிராக்டர்கள் பேரணி நடத்தபடும் என்று டெல்லியில் போராடும் விவசாயிகள் சங்கத் தலைவர் ராகேஷ் திகாயத் அறிவித்துள்ளார்.
மத்திய அரசின் 3 விவசாய சட்டங்களால் விவசாயிகளின் வாழ்வாதாரம் அழியும் என்பது குற்றச்சாட்டு. இதனால் இந்த 3 விவசாய சட்டங்களை திரும்பப் பெற கோரி டெல்லியில் 7 மாதங்களாக விவசாயிகள் போராட்டம் நடத்தி வருகின்றனர்.
டெல்லி எல்லைகளை மறித்து இந்த போராட்டம் நடத்தப்பட்டு வருகிறது. இப்போராட்டங்களின் ஒருபகுதியாக ஜனவரி 26-ல் தலைநகர் டெல்லியில் டிராக்டர்கள் பேரணியை விவசாயிகள் நடத்தினர். இந்த பேரணியில் விஷமிகளின் திட்டமிட்டு நுழைந்ததால் வன்முறை வெடித்தது.

மீண்டும் பேரணி
இதனையடுத்து ஹரியானா உள்ளிட்ட மாநிலங்களில் போராடும் விவசாயிகள் மீது பல்வேற் பொய்வழக்குகள் போடப்பட்டன. இதனைக் கண்டித்தும் தொடர் போராட்டங்கள் நடத்தப்பட்டன. நேற்று மீண்டும் மற்றொரு டிராக்டர் பேரணியை விவசாயிகள் நடத்தினர். இதனால் டெல்லி, ஹரியானா நெடுஞ்சாலைகளில் கடும் போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டது.

ஜூலை 9,10-ல் மீண்டும் பேரணி
இதன்பின்னர் போராடும் விவசாய சங்க பிரதிநிதிகளுடன் ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது. இந்த கூட்டத்தின் முடிவில் விவசாயிகள் சங்கத் தலைவர் ராகேஷ் திகாயத் கூறியதாவது: மத்திய அரசு 3 விவசாய சட்டங்களை திரும்பப் பெறும் வரை எங்களது போராட்டம் தொடரவே செய்யும்.

வாபஸ் பெறும் வரை போராட்டம்
விவசாய சட்டங்களை திரும்பப் பெறவைக்காமல் நாங்கள் வீடுகளுக்கு திரும்பப் போவது இல்லை. எங்களது கோரிக்கைகளை வலியுறுத்தி ஜூலை 9,10 ஆகிய நாட்களில் மேலும் 2 டிராக்டர் பேரணிகளை நடத்த உள்ளோம். இந்த பேரணிகள் ஜூலை 10-ல் டெல்லி சிங்கு எல்லையில் நிறைவடையும் என அறிவித்தார்.

புரட்சி வெடிக்கும் என எச்சரிக்கை
அத்துடன் கொரோனா பரவல் முடிவடைந்த உடன் நாடு முழுவதும் விவசாயிகள் போராட்டம் நடத்துவர்; எங்களது டிராக்டர் பேரணியின் வீரியத்தை புரியாமல் இருக்கிறது மத்திய அரசு. இத்தகைய அலட்சியம்தான் மிகப் பெரிய புரட்சியை உருவாக்கிவிடும் என்றும் ராகேஷ் திகாயத் எச்சரித்தார்.