இந்திய எல்லையில்.. அழுது கொண்டு நின்ற பாகிஸ்தான் சிறுவன்! ராணுவத்தின் செயலால் பத்திரமாக ஒப்படைப்பு
டெல்லி: பாகிஸ்தான் எல்லையில் ரோந்து பணிகளில் ஈடுபட்டிருந்த பாதுகாப்புப் படை வீரர்கள் செய்த செயல் பலரது பாராட்டையும் பெற்றுள்ளது.
சர்வதேச அளவில் மிகவும் பதற்றமான எல்லைகளில் ஒன்றாக இந்தியா- பாகிஸ்தான் எல்லை கருதப்படுகிறது. இதன் காரணமாக எல்லையில் எப்போதும் பரபரப்பாகவே காணப்படும்..
பாகிஸ்தான் எல்லையில் இருந்து பயங்கரவாதிகள் இந்தியாவுக்குள் வர வாய்ப்புகள் அதிகம் என்பதால் எல்லை பாதுகாப்பு படையினர் எப்போதும் தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டு வருவார்கள்.
உதய்பூர் படுகொலை.. பாகிஸ்தான் அமைப்புக்கு நேரடி தொடர்பு? சிம் கார்டில் ரகசிய எண்கள்! பரபர தகவல்கள்

இந்தியா பாகிஸ்தான் எல்லை
சில சமயங்களில் குழந்தைகள் தவறுதலாக எல்லை தாண்டி வரும் சம்பவங்களும் அரங்கேறும். அப்படியொரு சம்பவம் தான் இப்போது பஞ்சாப் எல்லையில் நடந்துள்ளது. பஞ்சாபில் தவறுதலாக இந்திய பகுதிக்குள் நுழைந்த மூன்று வயது பாகிஸ்தான் சிறுவனை எல்லைப் பாதுகாப்புப் படை பாகிஸ்தான் ரேஞ்சர்களிடம் ஒப்படைத்துள்ளனர். இந்தச் சம்பவம் தொடர்பாக எல்லை பாதுகாப்புப் படையினர் சில தகவல்களையும் பகிர்ந்து உள்ளனர்.

பாகிஸ்தான்
ஃபெரோஸ்பூர் செக்டாரில் நேற்றிரவு 7 மணியளவில் எல்லை வேலிக்கு அருகே குழந்தை ஒன்று அழுது கொண்டே நின்று கொண்டு இருப்பதை அங்குப் பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டு இருந்த எல்லை பாதுகாப்புப் படையினர் கவனித்து உள்ளனர். இதையடுத்து அந்தச் சிறுவனிடம் சென்று பேச்சுக் கொடுத்து உள்ளனர். இருப்பினும், அச்சத்தில் இருந்த அந்த சிறுவனால் எதுவும் பேச முடியவில்லை. இதையடுத்து நிலைமையை உணர்ந்து கொண்ட பாதுகாப்பு படையினர், அந்த சிறுவனைப் பாதுகாப்பான இடத்திற்கு அழைத்துச் சென்று ஆசுவாசப்படுத்தினர்.

சிறுவன்
அந்த சிறுவன் தவறுதலாக எல்லை கடந்ததைப் புரிந்து கொண்ட எல்லை பாதுகாப்புப் படையினர், சில மணி நேரத்திற்குப் பின்னர் பாகிஸ்தான் ரேஞ்சர்களை அணுகி, குழந்தையை அவர்களிடம் ஒப்படைத்தனர். நேற்றிரவு 7.15 தவறுதலாக இந்திய எல்லைப் பகுதிக்குள் நுழைந்த 3 வயதுக் குழந்தை இரவு 9.45 மணிக்கே பாகிஸ்தான் ரேஞ்சர்களிடம் ஒப்படைக்கப்பட்டதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

முதல்முறை இல்லை
பாகிஸ்தானைச் சேர்ந்தவர்கள் இந்திய எல்லைக்குள் தவறுதலாக நுழையும் போது, அவர்கள் மீண்டும் திரும்பி அனுப்பப்படுவது இது முதல்முறை இல்லை. கடந்த ஆண்டு மட்டும் பாகிஸ்தானைச் சேர்ந்த 14-25 வயது இளைஞர்கள் 6 பேர் தவறுதலாக இந்தியப் பகுதிக்குள் நுழைந்தனர். விசாரணையில் அவர்கள் தவறுதலாக இந்தியப் பகுதிக்குள் வந்தது உறுதியானது. இதையடுத்து அவர்கள் மீண்டும் பாகிஸ்தானுக்கே திரும்பி அனுப்பப்பட்டனர்.