நாடாளுமன்ற பட்ஜெட் கூட்டத்தொடர் தொடங்கியது.. குடியரசுத் ராம்நாத் கோவிந்த் உரை!
டெல்லி: 2022-23 ஆம் நிதி ஆண்டுக்கான பட்ஜெட் கூட்டத் தொடர் தற்போது தொடங்கி நடந்து வருகிறது. தொடக்க நாளன்று நாடாளுமன்றத்தில் குடியரசுத் தலைவர் ராம் நாத் கோவிந்த் உரையாற்றினார். அதைத் தொடர்ந்து மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் பொருளாதார ஆய்வறிக்கையை தாக்கல் செய்வார்.
ஐந்து மாநிலங்களுக்கு சட்டசபைத் தேர்தல் நடைபெற உள்ள நிலையில் இந்த நாடாளுமன்ற கூட்டத்தொடர் மிகுந்த முக்கியத்துவம் வாய்ந்ததாகக் கருதப்படுகிறது. பட்ஜெட் கூட்டத் தொடரின் முதல் பகுதி பிப்ரவரி 11ஆம் தேதி வரை நடைபெறும்.
இதைத் தொடர்ந்து ஒரு மாத காலம் நாடாளுமன்றத்துக்கு விடுமுறையாகும். அடுத்த கட்ட கூட்டம் மார்ச் 14ஆம் தேதி தொடங்கி ஏப்ரல் 8ஆம் தேதி வரை நடைபெறும்.

நடத்தை விதிமுறைகள்
பட்ஜெட் கூட்டத் தொடர் தொடங்க உள்ள நிலையில் உறுப்பினர்கள் கூட்டத் தொடரில் நடந்துகொள்வது குறித்த விதிமுறைகளை ராஜ்யசபா செயலகம் வெளியிட்டுள்ளது. மாநிலங்களவையின் தலைவரும் குடியரசுத் துணைத் தலைவருமான வெங்கய்ய நாயுடு இதை வெளியிட்டுள்ளார். உறுப்பினர்களின் நடத்தை குறித்த குழுவின் அறிக்கை மார்ச் 14, 2005ஆம் ஆண்டில் வெளியிடப்பட்டது. அது ஏப்ரல் 20, 2005ஆண்டில் ஏற்கப்பட்டது. இதில் உறுப்பினர்கள் அவை மரபைக் காக்கும் வகையில் எவ்விதம் செயல்பட வேண்டும் என்ற விதிமுறைகள் வகுக்கப்பட்டுள்ளன.

பொறுப்பை உணர்ந்து
இதில் குறிப்பிட்டுள்ளபடி உறுப்பினர்கள் தங்களின் பொறுப்பை உணர்ந்து அவை விதிகளுக்குட்பட்டு செயல்பட வேண்டும் என குறிப்பிடப்பட்டுள்ளது. அவை மாண்பை குலைக்கும் வகையிலான செயலில் உறுப்பினர்கள் ஈடுபடக் கூடாது என்றும் அதில் குறிப்பிடப்பட்டுள்ளது. ராஜ்யசபா காலை 10 மணி முதல் பிற்பகல் 3 மணி வரையிலும் மக்களவை மாலை 4 மணி முதல் இரவு 9 மணி வரையிலும் செயல்படும்.

பூஜ்ய நேரம் கிடையாது
பட்ஜெட் கூட்டத் தொடர் தொடங்கும் இன்றும் பட்ஜெட் தாக்கல் செய்யப்படும் பிப்ரவரி 1ஆம் தேதியும் கேள்வி நேரம் மற்றும் கேள்வி அல்லாத பூஜ்ய நேரமும் கிடையாது என நாடாளுமன்ற செய்திக் குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. 17வது லோக்சபா கூட்டத்தொடரின் கூட்டுக் கூட்டத்தின் முதல் நாள் மற்றும் அதற்கடுத்து பட்ஜெட் தாக்கல் செய்யப்படும் நாளில் பூஜ்ய நேரம் மற்றும் கேள்வி நேரம் கிடையாது என அதில் குறிப்பிடப்பட்டுள்ளது.

பூஜ்ய நேரத்தில் கேள்விகள்
மிகவும் அவசர முக்கியத்துவம் வாய்ந்த பிரச்சினைகள் குறித்த கேள்விகளை பிப்ரவரி 2ஆம் தேதி உறுப்பினர்கள் எழுப்பலாம் என்றும் குறிப்பிடப்பட்டுள்ளது.
எழுப்ப உள்ள பிரச்சினைகள் குறித்த விவரங்களை நாடாளுமன்ற அலுவலகத்தில் பிப்ரவரி 1ஆம் தேதிக்குள் தாக்கல் செய்யலாம் என்றும் குறிப் பிடப்பட்டுள்ளது.
நாடாளுமன்ற நடைமுறையின் படி கேள்வி நேரம் மற்றும் பூஜ்ய நேரம் தினசரி 60 நிமிடம் நடைபெறும். லோக்சபாவில் கேள்வி நேரத்துடன் அலுவல் தொடங்கும். ராஜ்யசபாவில் 11 மணிக்கு பூஜ்ய நேரமும் அதைத் தொடர்ந்து கேள்வி நேரமும் தொடங்குவது நடைமுறையாக உள்ளது.

பொருளாதார ஆய்வறிக்கை
நாடாளுமன்றத்தில் பொருளாதார ஆய்வறிக்கை இன்று சமர்ப்பிக்கப்பட உள்ளது. இந்த பொருளாதார ஆய்வறிக்கையில் அடுத்த நிதியாண்டில் நாட்டின் வளர்ச்சி 9%ஆக இருக்கும் என்று கணிக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது. கொரோனா பெருந்தொற்று காரணமாக 2020-21 நிதியாண்டில் இந்தியப் பொருளாதாரம் 7.3% வரை சரிவடைந்திருந்தது குறிப்பிடத்தக்கது. கடந்த ஆண்டு இதேபோல வெளியிடப்பட்ட பொருளாதார ஆய்வறிக்கையில் இந்த ஆண்டில் நாட்டின் வளர்ச்சி 11%ஆக இருக்கும் எனக் கணித்திருந்தது. ஆனால், தேசிய புள்ளியில் அலுவலகம் இந்த ஆண்டு நாட்டின் பொருளாதார வளர்ச்சி 9.2%ஆக உள்ளதாகக் கூறியுள்ளது குறிப்பிடத்தக்கது.

காகிதம் அல்லாத பட்ஜெட்
பிப்ரவரி 1ஆம் தேதி 2022-23-ம் நிதி ஆண்டுக்கான பட்ஜெட்டை நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் தாக்கல் செய்கிறார். இம்முறை டிஜிட்டல் பட்ஜெட்டாக தாக்கல் செய்யப்படுகிறது. முழுவதும் டிஜிட்டல் முறையிலான இந்த பட்ஜெட் காகிதம் அல்லாத பட்ஜெட்டாக தாக்கல் செய்யப்படுகிறது. காகித உபயோகத்தைக் குறைக்கும் பொருட்டு டிஜிட்டல் ஆவணமாக பட்ஜெட் உரை உறுப்பினர்களுக்கு அளிக்கப்படும்.

நன்றி தெரிவிக்கும் தீர்மானம்
இந்திய வரலாற்றில் கடந்த 2019 ஆம் ஆண்டு 2 மணி நேரம் 15 நிமிடங்கள் பட்ஜெட் உரையை வாசித்தார் நிர்மலா சீதாராமன். 2020ஆம் ஆண்டில் 162 நிமிடங்கள் வாசித்தார். ஐந்து மாநில தேர்தல் மற்றும் கொரோனா பெருந்தொற்று காலமாக இருப்பதால் இவற்றை மனதில் வைத்து பட்ஜெட் உரை தயாரிக்கப்பட்டிருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. பிப்ரவரி 2ம் தேதி முதல் குடியரசுத் தலைவர் உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானம் மீதான விவாதம் நடைபெறும். இறுதியில் இரு அவைகளின் கூட்டு கூட்டத்தில் பிரதமர் நன்றி தெரிவிக்கும் நிகழ்வு நடைபெறும்.

குடியரசுத் தலைவர் உரை
இன்று குடியரசுத் தலைவர் தனது உரையில், இந்தியா தனது 75வது சுதந்திர தின ஆண்டை கொண்டாடி வருகிறது. நாட்டிற்காக உயிர் தியாகம் செய்த அத்தனை போர் வீரர்களுக்கும் எனது வணக்கங்கள். நாட்டின் வளர்ச்சிக்காக பாடுபட்ட அனைவருக்கும் எனது நன்றியை தெரிவிக்கிறேன். கொரோனா காலத்தில் உயிரை பணையம் வைத்து பணியாற்றிய முன் களப்பணியாளர்கள், மருத்துவர்கள், செவிலியர்கள் அனைவருக்கும் நன்றி.நாட்டின் 75வது சுதந்திர தின ஆண்டு கொண்டாடப்படும் நிலையில் தமிழகத்தின் சுதந்திரப் போராட்ட வீரரான வ.உ.சிதம்பரனாரின் 150-வது பிறந்த நாள் கொண்டாடப்படுகிறது.
Recommended Video - Watch Now

என்ன சொன்னார்?
மத்திய அரசு அடுத்த 25 ஆண்டுகளுக்கான வளர்ச்சியை வழங்கும் திட்டங்களை செயல்படுத்தி வருகிறது. கொரோனா தடுப்பூசி செலுத்துவதில் உலகின் முன்னோடி நாடாக இந்தியா உள்ளது. கொரோனா தடுப்பூசியை நம் நாட்டிலேயே தயாரித்ததால் நிறைய உயிர்கள் காப்பாற்றப்பட்டன. கடந்த காலங்களை விட தற்போது இந்தியாவில் சுகாதார கட்டமைப்பு பெரிய அளவில் முன்னேற்றம் அடைந்துள்ளது. ஆயுஷ்மான் பாரத் திட்டத்தின் மூலம் ஏழை மக்கள் சுகாதாரத் திட்டங்களை பெறுவதற்கு பெரும் உதவியாக இருந்தது, கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களுக்கு மருத்துவ வசதிகள் எளிதில் கிடைக்க கட்டமைப்புகள் ஏற்படுத்தப்பட்டன உலக நாடுகள் பலவற்றிற்கும் மருத்துவ உதவிகளையும் மருந்துகளையும் இந்தியா வழங்கியுள்ளது என்று குடியரசுத் தலைவர் தனது உரையில் குறிப்பிட்டார்.